Karnataka Election Results: MLAக்களை காப்பாற்ற ஹெலிகாப்டர்! பாஜகவுக்கு விலைபோவதை தடுக்க காங்கிரஸ் புதிய யுக்தி!
இதற்காக 12 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாடே எதிர்பார்த்து வரும் கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாக தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கி உள்ளன. தற்போதைய தேர்தல் நிலவரப்படி, மொத்தமுள்ள 224 தொகுதியிகளில் காங்கிரஸ் 110 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பாஜக 81 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 29 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவைப்படும் நிலையில், 1985ஆம் ஆண்டுக்கு பிறகு ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கவில்லை என்ற நிலை உள்ளது.
காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலையில் இருந்தாலும் 140 தொகுதிகள் வரை வெற்றி பெற்றால்தான் பாஜகவில் இருந்து ஆட்சியை பாதுகாக்க முடியும் என்று வெளிப்படையாகவே காங்கிரஸ் பரப்புரையை மேற்கொண்டது. காங்கிரஸ் கட்சி 150 இடங்களை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். 141 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெறுவோம் என தேர்தலுக்கு பிறகு டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுராவிலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர். ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமாகி உள்ள நிலையில், எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேச முயற்சிப்பதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேசியத் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரையும் பெங்களூருவில் அக்கட்சி குவிக்கத் தொடங்கி உள்ளது.
பெங்களூருவில் இருந்து தொலைவில் இருக்கும் கடலோர கர்நாடகாவில் உள்ள தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை ஹெலிக்காப்டர் மூலமாக பெங்களூருவுக்கு அழைத்து வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக 12 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
காலதாமதம் ஆபத்தாக முடியலாம் என்பதால் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து காய்களை காங்கிரஸ் நகர்த்த தொடங்கி உள்ளது.