'கர்நாடகாவின் அடுத்த முதல்வர் டி.கே.சிவக்குமாரா?' டான்களை அடித்து டான் ஆன ஜெயண்ட் கில்லரின் பின்புலம்!
karnataka elections Results: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில் #DKForCM என்ற ஹேஷ்டேக் நேற்றே ட்விட்டரில் ட்ரண்ட் செய்யப்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலையில் பெற்று வரும் நிலையில் டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. #DKForCM என்ற ஹேஷ்டேக் நேற்றே ட்விட்டரில் ட்ரண்ட் செய்யப்பட்டது. ஜெய் அனுமான் விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்தபோது கேஸ் சிலிண்டருக்கு பூஜை செய்து ஜெய் கேஸ் சிலிண்டர் என தேர்தல் பிரச்சார ட்ரண்டை மாற்றிய டி.கே.சிவக்குமாரின் அரசியல் பின்னணியை தற்போது பார்க்கலாம்.
கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான ஒக்கலிக்கர் சமூகத்தை சேர்ந்த டி.கே.சிவக்குமாருக்கு பெரிய அரசியல் குடும்ப பிண்ணனி இல்லை. வசதியான விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், 1985ஆம் ஆண்டுக்கு பிறகு அரசியலில் முக்கியத்துவம் பெற தொடங்கினார்.
ஒக்கலிக்கர்களின் செல்வாக்கு பெற்ற மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவகவுடாவுக்கு எதிரான அரசியல் அவரை தவிர்க்க முடியாத நபராக காங்கிரஸில் மாற்றியது. 1989 தேர்தலில் சதான்பூர் தொகுதியில் போட்டியிட்ட தேவகவுடாவை வீழ்த்தி தேசிய அளவில் கவனம் பெற்றவரானார் டி.கே.சிவக்குமார்.
தேவகவுடாவின் குடும்பத்தினரை தேர்தலில் தோல்வி அடைய வைப்பதுதான் காங்கிரஸ் கட்சி இவருக்கு கொடுத்த டாஸ்க். இந்த அசைண்ட்மண்டை அச்சுபிசகாமல் செய்து கர்நாடக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
தேவகவுடாவின் மகன் குமாரசாமியை சதான்பூரிலும், அவரது மனைவி அனிதா குமாரசாமியை கனகபுராவிலும் வீழ்த்தி “ஜெயண்ட் கில்லர்” என்ற பட்டம் இவரை பற்றிக்கொண்டது.
யாரோ போரவர பத்து பேர அடிச்சி டான் ஆனவர் இல்லை; இவர் நான் அடிச்ச பத்து பேருமே டான்தான்
இவரின் எல்லா தேர்தல் வெற்றிகளுக்கும் அரசியல் சாதூர்யத்துடன் கூடிய சாணக்கியதனமும், வைட்டமின் ’ப’வும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 26 எம்.பி தொகுதிகளில் 23 தொகுதிகளை பாஜக வென்ற நிலையில் ஒரே தொகுதியில் மட்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இவரது தம்பியான டி.கே.சுரேஷ் வெற்றி பெற்றிருந்தார்.
2018 தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தபோதிலும், தனது பரம எதிரியான குமாரசாமியை முதல்வராக்க ஓப்புக்கொண்டு, எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் வைத்து ஆட்சி அமைத்து அமித்ஷாவின் காதுக்குள் புகுந்த கட்டெறும்பானார் சிவக்குமார்.
பாஜகவின் சித்துவிளையாட்டால் ராஜினாமா செய்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கி இருந்த மும்பை ரிசாட்டில் ஒற்றை ஆளாக சென்று பைட் செய்தார் டி.கே.எஸ்.
கர்நாடகாவின் பணக்கார அரசியல்வாதியான இவரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 68% அதிகரித்துள்ளது. அவரின் தேர்தல் அறிக்கையில் சிவக்குமார் தனது மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் தனது மொத்த சொத்து மதிப்பு 1414 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அரசியல் பின்புலம் கொண்டவராக சிவக்குமார் இருந்தாலும் அவர் மீதுள்ள அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளிட்டவை முதல்வராவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மாநில அளவில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக சித்தராமையாவுக்கு அதிக மக்கள் ஆதரவு இருப்பதாகவும் சில கருத்து கணிப்புகள் கூறுகின்றன.