Fact Check: வங்கதேச கிராமங்களில் சிதறிக் கிடக்கும் இந்துக்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?-is the video circulating that the bodies of hindus scattered in the villages of bangladesh are true - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check: வங்கதேச கிராமங்களில் சிதறிக் கிடக்கும் இந்துக்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check: வங்கதேச கிராமங்களில் சிதறிக் கிடக்கும் இந்துக்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Crescendo HT Tamil
Aug 20, 2024 03:53 PM IST

Hindus: சாலையில் ஆங்காங்கே உடல்கள், பொருட்கள் சிதறிக் கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவை எடுத்தவர் கதறி அழுகிறார். இந்த வீடியோ உண்மையா என தமிழ் ஃபேக்ட் கிரெசன்டோ ஆய்வு செய்தது.

Fact Check: வங்கதேச கிராமங்களில் சிதறிக் கிடக்கும் இந்துக்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check: வங்கதேச கிராமங்களில் சிதறிக் கிடக்கும் இந்துக்களின் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

சாலையில் ஆங்காங்கே உடல்கள், பொருட்கள் சிதறிக் கிடக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவை எடுத்தவர் கதறி அழுகிறார். நிலைத் தகவலில், “பங்களாதேஷில் கிராமங்களில் சிதறிக் கிடக்கும், யாருக்கும் ஒரு தீங்கும் விளைவிக்காத இந்துக்களின் உடல்களைப் பாருங்கள்.

1921-ல் நம் நாட்டின் துரோகிகளான முஸ்லிம் தீவிரவாதிகள் கேரளத்தில் நடத்திய மாப்பிளா கலவர கொலைகளை காணாதவர்கள் இந்த வீடியோவில் நேரடியாக காணலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வைரலாகி வரும் வீடியோ

வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், இதற்கு ஏதோ தி.மு.க, காங்கிரஸ் தான் காரணம் என்பது போலவும் சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் இங்குள்ள குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வன்முறையில் இறங்க மறைமுகமாக அழைப்பு விடுப்பது போல பதிவு உள்ளது. உண்மையில் இந்த வீடியோ வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வின் பதிவா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மை என்ன?

முதலில் வீடியோவை முழுமையாக பார்க்கும் போது இறந்து கிடக்கும் சில பெண்களைக் காண முடிகிறது. அவர்கள் இஸ்லாமியர்கள் அணிவது போன்று கருப்பு நிற பர்தா அணிந்திருந்தனர். எனவே, இந்த வீடியோவில் இருப்பவர்கள் இந்துக்கள் தானா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்தியாவின் தீவிர வலதுசாரிகள் இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது மியான்மர் நாட்டில் வங்கதேசத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியாக்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டு ஆகஸ்ட் 5, 2024 அன்று இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

இதன் அடிப்படையில் இது தொடர்பான அடிப்படை வார்த்தைகள் சிலவற்றைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது ரோஹிங்கியா மக்கள் மீது Arakan Army என்ற போராளிகள் குழு ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. இந்த சம்பவம் ஆகஸ்ட் 5ம் தேதி நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடிய போது Rohingya Human Rights Initiative – R4R (ROHRIngya) என்ற ரோஹிங்கியா மனித உரிமை தொடர்பான குழுவும் இந்த வீடியோவை 2024 ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. இது தொடர்பாக வெளியான செய்திகளில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நிலப்பரப்பில் ஏராளமானோர் இறந்து கிடக்கும் காட்சியை காண முடிந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ ரோஹிங்கியா மீது நடந்த தாக்குல் என்பதை உறுதி செய்கின்றன.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடையவே அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5ம் தேதி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தார். வங்கதேச எல்லைக்கு அருகே மியான்மர் நாட்டில் வைத்து ரோஹிங்கியாக்கள் மீது தாக்குதல் நடந்திருப்பதாக வீடியோக்கள், செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. வங்கதேச கிராமங்களில் இப்படி ஏராளமான இந்துக்கள் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக எந்த ஒரு செய்தியும், வீடியோவும் இதுவரை வெளியாகவில்லை.

ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக வெளியான வீடியோவை கொஞ்சமும் இரக்கமில்லாமல் இஸ்லாமியர்கள் எப்படி இந்துக்களை கொலை செய்து வீசியுள்ளார்கள் பாருங்கள் என்று பகிர்ந்திருப்பது என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வீடியோவை எடுத்து, வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டதாக தூண்டும் நோக்கில் தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக வெளியான வீடியோவை வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்ட காட்சி என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது.

பொறுப்புத்துறப்பு

இந்தச் செய்தி முதலில் Tamil fact crescendo-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.