தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Ambedkar : இந்திய அரசியலமைப்புக்கு அடித்தளமிட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர்

HBD Ambedkar : இந்திய அரசியலமைப்புக்கு அடித்தளமிட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர்

Priyadarshini R HT Tamil
Apr 14, 2023 05:50 AM IST

அவர்தான் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர், சட்ட மேதை, அரசியல்வாதி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை, உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என இன்னும் பல்வேறு அடையாளங்களுடன் இன்றும் இந்தியர்களின் மனங்களில் தனது சேவையால் பரவிக்கிடப்பவர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்னும் பல கடுமையான தீண்டாமை பழக்க வழக்கங்கள் நமது நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதுபோன்ற கடும் ஏற்றத்தாழ்வுகளை பள்ளி செல்லும் காலத்திலே சந்தித்த அந்தச்சிறுவன்தான் கடும் போராட்டங்களுடன் தன்னை வளர்த்துக்கொண்டு பிற்காலத்தில் தீண்டாமைக்கு எதிராக பல சட்டங்களை இயற்றி, அதை ஒழிக்கவும் பாடுபட்டார். அவர்தான் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர், சட்ட மேதை, அரசியல்வாதி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை, உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என இன்னும் பல்வேறு அடையாளங்களுடன் இன்றும் இந்தியர்களின் மனங்களில் தனது சேவையால் பரவிக்கிடப்பவர்.

மத்திய பிரதேசத்தின் மாவ் எனும் இடத்தில் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தவர். ராம்ஜி மாலோஜி சக்பால், பீமாபாய் ஆகியவர்களின் 14வது மகன். 1900மாவது ஆண்டு சாதாராவில் ஒரு பள்ளியில் தொடக்கக்கல்வியை முடித்துவிட்டு, உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு கடைபிடிக்கப்பட்ட கொடுமைகளை கண்டு மனம் கலங்கினார். பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர் என்பது அவரது பெயராகும். அவர்களின் கிராமத்தின் பெயரை இணைத்து வழங்கப்படும் குடும்பப்பெயர். இவர் மீது அன்பும், அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியர் மகாதேவ அம்பேத்கர், தனது குடும்பப்பெயரான அம்பேத்கரை பீமாராவ் ராம்ஜிக்கு வைத்தார் என்ற ஒரு கருத்தும் அவரது குடும்பப்பெயர் அம்பேவாதேகர் என்பது மருவி அம்பேத்கர் ஆனது என்ற இருவேறு கருத்துகள் நிலவுகிறது. அனைவரும் சமம் என்ற அந்த ஆசிரியரின் கனவையும் சேர்த்து நினைவாக்கினாரோ என்னவோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமத்துவத்தை நிலை நாட்டிய டாக்டர்.பி.ஆர் அம்பேத்கர். 1904ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பை சென்றார். குடும்பத்தில் நிலவிய கடும் வறுமையிடையேயும் கல்வியை தொடர்ந்தார். குடும்பமே அவரை கல்வி கற்க ஊக்குவித்தது. 

மெட்ரிக்குலேசன் தேர்வுகளை முடித்தவுடனே 9 வயது ராமாபாய்க்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. பரோடா மன்னர் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அங்கும் சாதிக்கொடுமை தொடர்ந்தது. பேராசிரியர் முல்லர் உதவியுடன் இளங்கலை பட்டதாரியானார். குடும்பச்சூழலால் பரோடா மன்னர் அரண்மனையில் வேலை. அங்கும் சாதி வேற்றுமை. செல்லும் இடமெல்லாம் அவரை துரத்தியது தீண்டாமைக்கொடுமை. பின்னர் பரோடா மன்னர் அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிக்க உதவினார். இதனால் பட்டியலின சமூகத்தில் பிறந்து உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையை பெற்றார். பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் பாடங்களை நன்கு கற்றார். ‘இந்திய தேசிய பங்கு விகிதம் ஒரு வரலாற்று பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்காக முனைவர் பட்டதையும் கொலம்பியா பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது. இந்த ஆய்வுக்கட்டுரை ஆங்கிலத்தில் ‘இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி’ என்ற ஆங்கில நூலக வெளிவந்தது.

டாக்டர் அம்பேத்கர்,1930ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றபோது, ‘என் மக்களுக்கு என்ன நியாயம் கிடைகக வேண்டுமோ அதை போராடி பெறுவேன்’ என உறுதியளித்துவிட்டுச்சென்றார். இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமைக்காக போராடினார். இதை காந்தி ஜி எதிர்த்ததையடுத்து பட்டியலினத்தவர்களுக்கு பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதிகள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. வர்ணாசிரம தர்மத்தில் தோன்றி சாதிய அமைப்பை வலியுறுத்தும் அமைப்பை எதிர்த்தும், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும் போராடிய அம்பேத்கர் ஒரு கட்டத்தில் புத்த மதத்தில் இணைந்தார்.

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, இந்து சட்ட தொகுப்பு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்காததால், சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1952ம் ஆண்டில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. சமூக நீதி போராளி, மாமேதை டாக்டர் அம்பேத்கர், தனது போராட்டங்களை வரும் சந்ததியினர் தொடர்வார்கள், பின்னர் இந்தியாவில் தீண்டாமை கொடுமை நிச்சயம் ஒழிக்கப்படும் முற்றிலும் என்ற நம்பிக்கையுடன், 1956ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார். அவரது வழியில் இன்றளவும் நம் நாட்டில் நிலவும் தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன. அம்பேத்கரின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்வதில் ஹெச்.டி தமிழ் பெருமிதம் கொள்கிறது.

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்