தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd V.p. Singh: மாணவர் சங்க தலைவர் முதல் பிரதமர் பதவி வரை.. முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலிர்க்க வைக்கும் பயணம்

HBD V.P. Singh: மாணவர் சங்க தலைவர் முதல் பிரதமர் பதவி வரை.. முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலிர்க்க வைக்கும் பயணம்

Manigandan K T HT Tamil
Jun 25, 2024 06:00 AM IST

VP Singh: அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி. பி. சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.

HBD V.P. Singh: மாணவர் சங்க தலைவர் முதல் பிரதமர் பதவி வரை.. முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலிர்க்க வைக்கும் பயணம்
HBD V.P. Singh: மாணவர் சங்க தலைவர் முதல் பிரதமர் பதவி வரை.. முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலிர்க்க வைக்கும் பயணம் (ht archive)

நமது நாட்டின் 7வது பிரதமர் வி.பி.சிங். இவர் 1931ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தார். இவரது பிறந்த நாள் இன்று.

1931 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25- ஆம் தேதி அலகாபாத் நகரில் ராம்கோபால் சிங்-ராதாகுமாரி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். செல்வாக்கு மிக்க ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி.பி. சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்.

வி.பி.சிங்கின் கல்வி

வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பைத் தொடங்கிய வி.பி.சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சியும் படித்தார்.

அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி. பி. சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார். வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியில் 1947-48 ஆண்டில் மாணவர் சங்க தலைவராக இருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

தீவிர அரசியல்

ஆனால், படிப்பை முடித்த கையோடு தீவிர அரசியலில் ஈடுபட்டார். வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தை அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.

1969 ஆம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971இல் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி அமைச்சரவையில் துணை வர்த்தக அமைச்சர் ஆனார்.

பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980 ஆம் ஆண்டு உத்தரபிரதேச முதலமைச்சரானார். பின்னர், 1984ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. ராஜீவ் காந்தி முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார்.

பின்னர், ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர்.

ஜனதா தளத்திற்கு வி. பி. சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கப்பட்டது. இதற்கு என்.டி.இராமா ராவ் தலைவராகவும், வி. பி. சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.

1989ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாட்டின் 7வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 343 நாட்கள் பிரதமராக பதவி வகித்தார்.

தேசிய முன்னணி நாடாளுமன்றக் கட்சியின் தலைவரான விஸ்வநாத் பிரதாப் சிங், இந்தியாவின் ஏழாவது பிரதமராக குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனால் டிசம்பர் 2, 1989 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய பிரதமர், ஹரியானா முதலமைச்சர் தேவி லாலை துணைப் பிரதமராகவும், அவருடன் பதவியேற்ற ஒரே மத்திய அமைச்சரவை உறுப்பினராகவும் நியமித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

இந்த பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேசிய முன்னணித் தலைவர் என்.டி.ராமராவ், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, கர்நாடக முதல்வர் வீரேந்திர பாட்டீல், பாஜக தலைவர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஃப்.எம்.எஸ் நம்பூதிரிபாட், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சி.ராஜேஸ்வர் ராவ் மற்றும் ஏராளமான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ்-ஐ அல்லாத கட்சிகளிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.

வி.பி.சிங் 17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது. வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 2008ம் ஆண்டு நவம்பர் 27 அன்று காலமானார்.