Sanatana Dharma: ’சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் கதி!’ முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விளாசல்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sanatana Dharma: ’சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் கதி!’ முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விளாசல்!

Sanatana Dharma: ’சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் கதி!’ முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விளாசல்!

Kathiravan V HT Tamil
Dec 03, 2023 03:22 PM IST

”தெலங்கானாவை தவிர இந்தி பேசும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் இருந்து வருகிறது”

முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

5 மாநிலத் தேர்தல்கள் கடந்த நவம்பர் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்த நிலையில், 4 மாநிலத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் 54 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் வெறும் 33 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் 161 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 67 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் பிஎஸ்பி கட்சியும் முன்னிலையில் உள்ளனர்.

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 115 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 69 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் 64 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. பிஆர்எஸ் கட்சி 40 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 8 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

தெலங்கானாவை தவிர இந்தி பேசும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் இருந்து வருகிறது. இந்த நிலையில் 4 மாநிலத் தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ட்வீட் தெரிவித்துள்ளார்.

அதில், ”சனாதன தர்மத்தை அவதூறு செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும். மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் அற்புதமான தலைமைக்கு இந்த வெற்றி மற்றொரு சான்று” என கூறி உள்ளார்.

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார்.”

உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக இந்து மதத்தை அழிக்க முனைவதாக கூறி வடமாநிலங்களில் பரப்புரையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.