Arvind Kejriwal: நாளை சிறையில் சரண் அடைவாரா கெஜ்ரிவால்? ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 5க்கு ஒத்திவைப்பு!
Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் எடை ஒரு கிலோ அதிகரித்து உள்ளதாகவும், ஜாமீன் காலத்தில் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு பதிலாக, அவர் நாடு முழுவதும் பயணம் செய்தார் என்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் சார்பில் வாதிடப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறி உள்ளது
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்கோரிய மனுவின் விசாரணையை வரும் ஜூன் 5ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ள நிலையில், நாளைய தினம் கெஜ்ரிவால் சிறை செல்வது உறுதி ஆகி உள்ளது.
இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி மனு
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் உள்ளார்.
வரும் இன்றுடன் அவரது ஜாமீன் முடிவடையும் நிலையில் நாளை மீண்டும் சிறைக்கு சென்று சரண் அடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரியிருந்தார்.
இருப்பினும், உச்ச நீதிமன்ற அலுவலகம் அவரது மனுவை ஏற்க மறுத்து, வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் செல்ல அவருக்கு சுதந்திரம் இருப்பதாகக் கூறியது.
பின்னர், டெல்லி ரோஸ் ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் கோரி கெஜ்ரிவால் விண்ணப்பித்தார்.
கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை வாதம்
இந்த மனு மீதான விசாரணையின் போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் நீட்டிப்பு தரக்கூடாது என்று அமலாக்கத்துறை இயக்குநரகம் வாதிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் எடை ஒரு கிலோ அதிகரித்து உள்ளதாகவும், ஜாமீன் காலத்தில் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு பதிலாக, அவர் நாடு முழுவதும் பயணம் செய்தார் என்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் சார்பில் வாதிடப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சரணடைவதாக கெஜ்ரிவால் நேற்று அறிவித்ததை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சுட்டிக்காட்டினார். கெஜ்ரிவால் சரணடையும் தேதி குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது என்றார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ஜாமீன் வழங்குவதற்கு, அவர் முதலில் காவலில் இருக்க வேண்டும் என்று கூறி வாதிட்டார்.
"ஜாமீன் பெற வேண்டும் எனில் கெஜ்ரிவால் முதலில் சரணடைய வேண்டும். ஒன்று அவர் காவலில் இருக்க வேண்டும் அல்லது காவலில் இருப்பதாகக் கருதப்பட வேண்டும். அதற்கு எந்த உத்தரவும் இல்லை. எனவே இடைக்கால ஜாமீனை வழங்க முடியாது என்று வாதிட்டார்.
வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஜாமீன் நீட்டிப்பு கோறும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை வரும் ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024:
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.
வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 25ஆம் தேதி அன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்ற முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியான இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜூன் 4ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
டாபிக்ஸ்