Kavitha arrested: கேசிஆர் மகள் கவிதா கைது! டெல்லிக்கு அழைத்து சென்றது அமலாக்கத்துறை!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kavitha Arrested: கேசிஆர் மகள் கவிதா கைது! டெல்லிக்கு அழைத்து சென்றது அமலாக்கத்துறை!

Kavitha arrested: கேசிஆர் மகள் கவிதா கைது! டெல்லிக்கு அழைத்து சென்றது அமலாக்கத்துறை!

Kathiravan V HT Tamil
Mar 15, 2024 09:52 PM IST

”டெல்லி மதுக் கொள்கை விவகாரம் தொடர்பாக கவிதாவின் ஹைதராபாத் இல்லத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஐந்து மணி நேரம் சோதனை நடத்தினர்”

அமலாக்கத்துறையால் கேசிஆர் மகள் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார்
அமலாக்கத்துறையால் கேசிஆர் மகள் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார் (HT_PRINT)

டெல்லி மதுபானக் கொள்கை விசாரணையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்துள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த பல மணிநேர சோதனைகளுக்குப் பிறகு இந்த கைது நடந்துள்ளது. 

மேலும் இது குறித்த விசாரணைக்காக கவிதா டெல்லிக்கு அழைத்து வரப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அமலாக்கத்துறை மற்றும் வருமானவரி அதிகாரிகள் அவரது ஹைதராபாத் இல்லத்தில் சோதனை நடத்தியதை கண்டித்து பி.ஆர்.எஸ் கட்சி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். 

கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, கவிதாவின் சகோதரரும், தெலுங்கானா முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் கவிதாவின் இல்லத்திற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்குப் பிறகு இது மூன்றாவது முக்கிய கைதாக இது உள்ளது. 

இதே வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறையின் சமீபத்திய சம்மன்கள் அனைத்தையும் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார்.

டெல்லி மதுக் கொள்கை வழக்கிற்கும் கே.கவிதாவுக்கும் என்ன தொடர்பு?

இதே வழக்கில்தான் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் சிறையில் உள்ளார். குற்றச்சாட்டுகளின்படி, டெல்லி மதுபானக் கொள்கை ஊழலில் ' சவுத் கார்டெல்' ஈடுபட்டுள்ளது, அதில் கே.கவிதா முக்கிய பங்கு வகித்தார். ஹைதராபாத் தொழிலதிபர் சரத் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுந்தா ரெட்டி ஆகியோர் இந்த கார்டலில் இருந்தனர். 

கவிதா பலமுறை விசாரணைக்கு அழைக்கப்பட்டார் , மேலும் அவர் குறைந்தபட்சம் இரண்டு சமீபத்திய சம்மன்களைத் தவிர்த்துவிட்டார். கடந்த ஆண்டு இந்த வழக்கில் அவரிடம் மூன்று முறை விசாரிக்கப்பட்டு, சட்டவிரோத பண பறிமாற்ற தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத்துறை வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்ட விஜய் நாயர், இந்த தெற்கு கார்டெல் நிறுவனத்திற்கு டெல்லி மதுபான வியாபாரத்தில் பங்கு தருவதாக உறுதியளித்தார். தெற்கு குழுவிற்கு சில தேவையற்ற சலுகைகள் அனுமதிக்கப்பட்டது மற்றும் இப்போது நீக்கப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையில் அதிக உரிமங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது.

கவிதாவுக்கும் டெல்லி முதல்வர் (அரவிந்த் கெஜ்ரிவால்) டெல்லியின் (முன்னாள்) துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கும் இடையே அரசியல் புரிதல் இருந்தது. அந்த செயல்பாட்டில், 2021 மார்ச் 19-20 தேதிகளில் கே.கவிதாவும் விஜய் நாயரை சந்தித்துள்ளார்" என்று புச்சிபாபு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதியை நாளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ள நிலையில் கேசிஆர் மகள் கவிதா கைது தெலங்கானா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.