தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Bihar Cabinet Expansion, 31 Ministers Take Oath

பிகார் அமைச்சரவை விரிவாக்கம்: 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

Karthikeyan S HT Tamil
Aug 16, 2022 03:46 PM IST

பிகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்பு
தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்பு

ட்ரெண்டிங் செய்திகள்

பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் 31 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் 16 பேரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ-க்களும், ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சாவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ-வும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ-வும் பதவியேற்று கொண்டனர்.

துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் சகோதரரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ், அலோக் மேத்தா, லலித் குமார் யாதவ், சுரேந்திர பிரசாத் யாதவ், சந்திரசேகர் உள்ளிட்ட 16 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, அசோக் சவுத்ரி, லேகி சிங், ஷீலா குமாரி மண்டல், பிஜேந்திர யாதவ் உள்ளிட்ட 11 பேர் பதவியேற்றனர். பிகாரில் 36 பேர் வரை அமைச்சர்களாக இருக்க உச்சவரம்பு இருப்பதால் அடுத்தகட்ட அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை கடந்த வாரம் முறித்த நிதிஷ்குமார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணியில் மீண்டும் நிதிஷ்குமார் ஐக்கியமானார். அதன்பிறகு ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்கக் உரிமை கூறினார். இதன் தொடர்ச்சியாக பிகார் முதல்வராக நிதிஷ்குமார் கடந்த 10ஆம் தேதி மீண்டும் பதவியேற்றார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்