தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Water Scarcity : வாழ்வாதாரத்தையே பாதிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு! இதில் இந்த பிரச்னை வேறா?

Water Scarcity : வாழ்வாதாரத்தையே பாதிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு! இதில் இந்த பிரச்னை வேறா?

Priyadarshini R HT Tamil
May 08, 2024 08:30 AM IST

Water Scarcity : தமிழகத்தில் நீர்நிலைகளில், ஆகாயத்தாமரை பெருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் எண்ணலடங்காதவை. அதை தமிழக நீர்வளத்துறையும் சரிசெய்யவில்லை.

Water Scarcity : வாழ்வாதாரத்தையே பாதிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு! இதில் இந்த பிரச்னை வேறா?
Water Scarcity : வாழ்வாதாரத்தையே பாதிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு! இதில் இந்த பிரச்னை வேறா?

ட்ரெண்டிங் செய்திகள்

ஏனெனில் ஊடுறுவும் தாவரமான ஆகாயத்தாமரை கழிவுநீர் சிகிச்சையின்றி கலந்த ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் பெருமளவு வளர்ந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலிலும், தமிழக நீர்வளத்துறை அதை நீக்க எந்த முறையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ஆகாயத்தாமரையால் ஏற்படும் பிரச்னைகள்

ஊடுறுவும் தாவரமான ஆகாயத்தாமரை நீர்நிலைகளில் பரவிப்பெருகும்போது, ஆக்ஸிஜன் அளவை குறைப்பதோடு, சூரியவெளிச்சம் நீரினுள் செல்வதை தடுத்து, ஒளிச்சேர்க்கை நடப்பதையும் தடுக்கின்றன.

ஆகாயத்தாமரை நிறைந்த நீர்நிலைகளில், நீர் ஆவியாதலும்,2.5 மடங்கு அதிகம் நடப்பதாக ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.

ஆகாயத்தாமரை வேர்கள் உறிஞ்சிய நீரை, இலைகள் நீர் ஆவியாதல் (Transpiration) மூலம் அதிகம் வெளியேற்றுவதால், நீர்நிலைகளில் நீர் விரைவில் வறண்டு விடும்.

எனவே, கோடை வெப்பமும், ஆகாயத்தாமரை பரவலும் (சிகிச்சை அளிக்கப்படாத கழிவுநீர், ஏரிகள் அல்லது நீர்நிலைகளில் கலக்கும்போது, சத்துக்கள் காரணமாக, ஆகாயத் தாமரை விரைவில் வளர்கிறது) நீர்நிலைகள் விரைந்து வறண்டு போவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

1930 களில், 59 ஏக்கரில் இருந்த உல்லகரம் ஏரி தற்போது, ஆகாயத்தாமரை பரவல் காரணமாக, பெருமளவு காணாமல் போயுள்ளது.

நீர்நிலைகள் விரைந்து வறண்டுபோவதை ஆகாயத்தாமரை ஊடுறுவல் எளிதாக்குகிறது.

இதனால் நீர் தேங்கும் பரப்பு குறைந்து, ஆக்கிரமிப்புகள் அங்கு சட்டவிரோதமாக எளிதில் நடக்கிறது.

நீர்நிலைகளில், ஆகாயத்தாமரை ஊடுறுவல் காரணமாக, நீர் குறையும்போது, நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக குறைந்து போகிறது.

என்ன நடவடிக்கை தேவை? 

மேடவாக்கத்தில்,3 பெரிய ஏரிகள் இருந்ததால், நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருந்தது. அங்குள்ள நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை பாதிப்பிற்குப் பின், (கழிவுநீர் நேரிடையாக கலந்ததால்) நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்துபோயுள்ளது. மேடவாக்கம் சின்ன ஏரி முழுவதும் ஆகாயத்தாமரையால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகாயத்தாமரை பெருகுவதால் நீர்நிலைகளின் சூழல் சமன்பாடு முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

நீரிலுள்ள ஆக்ஸிஜன் அளவு குறைவதால், மற்ற தாவரங்களுக்கும், மீன்களுக்கும் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன், சூரியவெளிச்சம் கிடைக்காமல் போவதால், அவை ஆகாயத்தாமரையுடன் போட்டியிட்டு வளர முடியாத சூழல் உருவாகிறது.

இங்குள்ள லில்லிப்பூக்களுக்கு ஆக்ஸிஜனும், சத்துப் பொருட்களும் குறைவாக கிடைப்பதால், அவை வளர சிரமப்படுகின்றன.

ஆகாயத்தாமரை காரணமாக, நீர்இருப்பு குறைவதால், பறவைகள் (கொக்கு, நாரைகள், மீன்கொத்திப் பறவைகள்) வேறு நீர்நிலைகளுக்கு செல்லும் அவலம் ஏற்படுகிறது.

நீர்நிலைகளில் உள்ள மீன்களிலும், ஊடுறுவும் கெளுத்தி மீன் மட்டுமே ஆக்ஸிஜனை அதிகம் எடுத்துக் கொள்வதால், மற்ற மீன்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல்போய், அவை அழியும் சூழல் உருவாகிறது.

ஊடுறுவும் ஆகாயத்தாமரை செடிகளை அடிக்கடி நீர்நிலைகளிலிருந்து நீக்கவும், சிகிச்சை அளிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் சேர்வதை தடுக்கவும் (இதுவே ஆகாயத் தாமரை நீர்நிலைகளில் விரைந்து வளர முக்கிய காரணம்.) உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஆகாயத்தாமரையின் பெரிய, தடித்த வேர்கள், கொசுக்களின் லார்வாக்கள் வளரும் இடமாக உள்ளதால், கொசுக்களால் ஏற்படும் நோய்களும், ஆகாயத்தாமரை இருந்தால் அதிக பாதிப்பை மக்களிடையே ஏற்படுத்தும் என்பதை தமிழக பொதுசுகாதாரத்துறை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழக நீர்வளத்துறை, மழைக் காலத்திற்கு முன், நீரின் போக்கை அதிகப்படுத்த ஆகாயத்தாமரை நீக்கப்படும் என பதில் அளித்துள்ளது எப்படி சரியாகும்?

இவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும், ஆகாயத் தாமரையை ஆரம்பநிலையில் நீக்குவதும், அவை நன்றாக வளரக் காரணமான நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதிலும் தமிழக நீர்வளத்துறை போதிய அக்கறையின்றி, அவற்றை நீக்க திட்டங்கள் இல்லாமல் இருப்பதும் எப்படி சரியாகும்?

எனவே தமிழகத்தில் ஆகாயத்தாமரையும் மலராமல் இருப்பதுதான் நல்லது. தமிழக அரசு அல்லது நீர்வளத்துறை விழித்துக்கொண்டு, உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமா?

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்