தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Oysters : மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காக்கா ஆலி சிப்பிகள்! எத்தனை ஆபத்து பாருங்கள்!

Oysters : மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காக்கா ஆலி சிப்பிகள்! எத்தனை ஆபத்து பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 22, 2024 08:41 PM IST

Oysters : பழவேற்காடு பறவைகள் சரணாலயம் மற்றும் எண்ணூரில், ஊடுறுவும் காக்கா ஆலியால் சூழல் பேரிடர் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Oysters : மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காக்கா ஆலி சிப்பிகள்! எத்தனை ஆபத்து பாருங்கள்!
Oysters : மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காக்கா ஆலி சிப்பிகள்! எத்தனை ஆபத்து பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

இறால்கள், பழவேற்காடு ஏரியில் அரிதாகி வருகிறது. அதன் தரமும், அளவும் குறைந்து வருகிறது. அதற்கு காரணம் ஊடுறுவும் கருப்பு மட்டி - Mytella strigata - (காக்கா ஆலி) தான் எனக்கூறுகிறார்.

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் காக்கா ஆலியின் தாக்கம் பல கிலோ மீட்டர் வரை பரவியுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதை உடனே தடுக்காவிட்டால், காக்கா ஆலி இப்பகுதி முழுவதும் பரவி, உள்ளூர் இறால்கள், பிற உயிரினங்களை அச்சுறுத்தி, மீன் வளம் குறைந்தால், அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் வரவும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும்.

பழவேற்காடு மீனவர்களோ, உள்ளூர் மஞ்சள், பச்சை மட்டிகளுக்கு பதிலாக தென்அமெரிக்க ஊடுறுவும் காக்கா ஆலி அதிகமாக வளர்ந்து உள்ளூர் மட்டிகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தியதுடன், உள்ளூர் மீன், இறால்கள், நண்டுகளின் வளமும் கணிசமாக குறைந்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

எண்ணூரில், 2022ம் ஆண்டு, முதலில் காணப்பட்ட காக்கா ஆலியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தாவிட்டால், அவை பழவேற்காடு பறவைகள் சரணாலயம், ஈரநிலங்கள் என அனைத்தையும் பாதிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பழவேற்காடு பகுதியில் மீனவர்கள் "பாடு"முறைப்படி நீரில் இறங்கி வலைகளை இடும்போது, காக்கா ஆலியின் ஊடுறுவல் காரணமாக, காலில் புண்கள் ஏற்பட்டு, ரத்தக்கசிவும் அடிக்கடி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அங்கு மொத்தமுள்ள 40 "பாடு"களில் 20 பாடுகளில் காக்கா ஆலியின் பாதிப்பு உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏரியின் தரையில் காக்கா ஆலி அதிகம் வளர்ந்து, தரையில் வாழும் (Bottom Dwellers) நண்டுகள், இறால்களின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன.

இவ்வாறு மீன்வளம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், பல மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிட்டு, தினக்கூலி தொழிலாளர்களாகவும், துறைமுக வேலைக்கும் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முதன்முதலில் கேரளாவில், காக்கா ஆலியின் பாதிப்பு, கொச்சி துறைமுக நீருடன் தொடர்புடைய வேம்பநாட், அஸ்தாமுடி ஈரநிலங்களில் எற்பட்டது. (2019) அப்போதே, இந்திய அரசு சுதாரித்துக் கொண்டு, பிற துறைமுகப் பகுதிகளிலிருந்து அருகிலிருக்கும் ஈரநிலங்களுக்கு காக்கா ஆலி பாதிப்பு அல்லது பரவலை கட்டுப்படுத்தியிருந்தால், தமிழக சென்னை துறைமுகப் பகுதியிலிருந்து எண்ணூர், பழவேற்காடு பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்திருக்க முடியும். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு, அதை செய்யத் தவறியதாலேயே, எண்ணூரிலும், பழவேற்காடு பகுதியிலும் காக்கா ஆலி பாதிப்பு அதிகமாகியுள்ளது.

ஈரநிலங்களில் காக்கா ஆலி பாதிப்பு ஒருமுறை ஏற்பட்டுவிட்டால், அதை கட்டுப்படுத்துவது எளிதல்ல என்பதே நிபுணர்களின் கூற்றாக உள்ளது.

கைகள் மூலம் அதை அப்புறப்படுத்தியும், தூர்வாருதல் (Dredging) மூலம் அதை ஓரளவு நீக்க முடியும். இருப்பினும், நீண்ட காலத் தீர்வாக, நண்டுகள், இறால்கள் காக்கா ஆலியை உண்பதால், அவற்றை பயன்படுத்தும் வாய்ப்பை ஆராய வேண்டும்.

கேரளாவில் வீரம்புழா காயலில் (எர்ணாகுளம்) செய்த ஆய்வில், கறிமீன்கள் (Etroplus suratensis) (தமிழில் முத்துப்புள்ளி மீன்-Pearlspot fish) வளர்ப்பதன் மூலம் காக்கா ஆலியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

காக்கா ஆலி, அதனை உண்பவர்கள் (Natural Predators) அதிகம் இல்லாவிடில், மற்ற மட்டிகள், மீன்கள், இறால்கள், நண்டுகளுடன் அதிவேகமாக போட்டியிட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பல்கிப்பெருகும்.

காக்கா ஆலியின் பாதிப்பை ஆய்வு செய்ய Dr.MGR Fisheries College and Research Institute (Ponneri) நிபுணர்கள், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், CMFRI அதிகாரிகளுடன் ஜனவரி, 2023ல் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், இறால் குஞ்சுகளுக்குத் தேவையான தாவர உணவுகளை காக்கா ஆலி அழித்து குறைத்துவிட்டதால், இறால்களின் உற்பத்தி அந்தபகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மக்களின் உணவாக பயன்படும் பச்சை அல்லது மஞ்சள் மட்டிகளின் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டதோடு, நண்டுகள் அல்லது இறால்களின் வளமும் குறைந்துள்ளதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதை உடனடியாக தடுக்காவிடில், அவை பிற பகுதிகளுக்கும் பரவி மிகப்பெரும் சூழல் பேரிடரை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். (புயல்கள் மூலமும் காக்கா ஆலி பிற இடங்களுக்கு எளிதில் பரவும்)

அரசு காக்கா ஆலியை, பிடித்து அவற்றிலிருந்து மீன்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்து, அவற்றை விரைவில் நீக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காக்கா ஆலி எப்படி தமிழகம் மற்றும் கேரளாவிற்கு வந்திருக்க முடியும்?

நாடுகளுக்கு இடையே நடக்கும் கப்பல்போக்குவரத்து காரணமாக, ஒரு நாட்டின் கப்பலில் உள்ள கழிவுநீர் (Ballast Water), கடலில் கொட்டப்படும்போது, அதன் பாதிப்பு தொடங்க முடியும்.

கேரள கொச்சி துறைமுக பாதிப்பிலிருந்து இந்திய மற்றும் தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளாததால், சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர், பழவேற்காடு பகுதிகளில் காக்கா ஆலி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிபுணர்கள், காக்கா ஆலி பாதிப்பை முழுமையாக அகற்றுவது சிரமம் எனக் கூறுகின்றனர். எனினும், அதை உடனே தடுக்க தமிழக அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லையெனில், மிகப்பெரும் சூழல் பேரிடர் ஏற்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், தமிழக அரசு விரைந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.

மன்னார் வளைகுடாப் பகுதியில், ஊடுறுவும் காப்பாபைகஸ் அல்வாரெசி கடல்பாசி பவளப்பாறைகளை அழித்து மீன்வளத்தை பெரிதளவு குறைத்த போதிலும், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

தமிழக அரசு காக்கா ஆலி (Charru Mussels)யை விரைந்து கட்டுப்படுத்தி, சூழல் பேரிடர் ஏற்படு வதைத் தடுக்கவேண்டும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்