Mudavattukal Soup: தீராத மூட்டு வலியா.. முடவன் ஆட்டுக்கால் சூப் இருக்க என்ன கவலை!
மூட்டு வலிக்கு முடவன் ஆட்டுகால் சூப் குடித்தால் எளிதில் நோய் குணமாக வாய்ப்பு உள்ளது.
இன்றைய நாட்களில் பெரும்பாலானவர்களுக்கு மிக சிறுவயதிலேயே மூட்டுவலி, முதுகு வலி என கடும் அவதிப்படுகின்றனர். அப்படி இருப்பவர்களுக்கு இந்த முடவன் ஆட்டுகால் சூப் குடித்தால் எளிதில் நோய் குணமாக வாய்ப்பு உள்ளது.
தேவையான பொருட்கள்
முடவன் ஆட்டுக்கால்
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்,
தக்காளி
இஞ்சி
பூண்டு
கறிவேப்பிலை
சீரகம்
மிளகு
கொத்தமல்லி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
உப்பு
செய்முறை
முடவன் ஆட்டுக்காலை தோல் சீவி நன்றாக கழுவி கொள்ள வேண்டும். பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 15 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 2 பச்சை மிளகாய் ஒரு துண்டு இஞ்சி, 8 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு கொத்து கறிவேப்பிலை கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய் சேர்க்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்த முடவன் ஆட்டுக்கால் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இதில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். சுமார் அரை மணிநேரம் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அதில் மல்லி இலை சேர்த்து பரிமாறலாம். தொடர்ந்து இந்த சூப்பை எடுத்து வரும்போது நாள்பட்ட மூட்டு வலி உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்களுக்கு மருந்தாக இந்த சூப் பயன்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால் தொடர்ச்சியாக வலி இருக்கும் போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்து கொள்வது அவசியம். மருந்தோடு உணவாக இந்த முடவன் ஆட்டுக்கால் சூப்பை எடுத்து கொள்ளலாம்.