கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி அல்லது தக்காளி கடைசல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்?
கொங்குநாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி அல்லது தக்காளி கடைசல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். எளிதாக செய்து உங்கள் டிஃபனை தெறிக்கவிடுங்கள்.
கொங்கு நாட்டு ஸ்பெஷல் தக்காளி கடைசல் அல்லது கடையல் அல்லது தக்காளி தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இதை செய்வது மிகவும் எளிது. இதை இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதை குக்கரிலே நிமிடத்தில் செய்து முடித்துவிடமுடியும். கொங்குநாட்டு சமையலில் இது மிகவும் ஃபேமசான ஒன்று. இது தக்காளி தொக்குபோல்தான் இருக்கும். இது காரமில்லாமல் இருப்பதாலும், தக்காளியின் புளிப்பு சுவையாலும் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இதை சாப்பிடுவார்கள். அவர்கள் காலை மற்றும் இரவில் டிஃபன் சாப்பிட அடம் பிடித்தார்கள் என்றால், அவர்களுக்கு இதை செய்துகொடுத்தால் போதும். அவர்கள் உணவு சாப்பிட அடம் பிடிக்கமாட்டார்கள்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 15 (பெரிய வெங்காயம் சேர்க்கக்கூடாது)
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கல் உப்பு – தேவையான அளவு
தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், கடுகு, வெந்தயம், உளுந்து, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். அனைத்தும் பொரிந்து வந்தவுடன், அதில் பச்சை மிளகாய், வர மிளகாய், இடித்த பூண்டு, சின்னவெங்காயத்தை முழுதாக சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கல் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். தக்காளியின் தண்ணீரே போதும். குக்கரை மூடி மூன்று விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.
குக்கர் ரிலீஸ் ஆனவுடன் எடுத்து தண்ணீரை தனியான வடித்துவிட்டு, அதில் உள்ள தக்காளியை நன்றாக மேஷர் அல்லது மத்து வைத்து கடைந்து கொள்ளவேண்டும். அப்படி கடையும் போது அது நன்றாக கரைந்து மசிந்துவிடும். இப்போது அதில் இருந்து வடித்த தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்துவிட்டால், நிமிடத்தில் கொங்கு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி அல்லது தக்காளி கடையல் அல்லது தக்காளி கடைசல் தயார்.
இதை சாதம், இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ரொட்டி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். ஆனால் முக்கியமாக இது இட்லி, தோசைக்கு மிகவும் ஏற்றது.
தக்காளியின் நன்மைகள்
தக்காளியில் உங்கள் உடலுக்கு தேவையான அளவு பீட்டா கரோட்டின்கள், லைக்கோபென்கள், வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவையனைத்தும் செல்களின் சேதத்தை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தக்காளி அதன் பன்முக குணங்களுக்காக சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு என அனைத்து நிறங்களிலும் உள்ளது.
இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். நோய் எதிர்ப்பாற்றலை அகிகரிக்கிறது. புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கின்றன. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடற்பயிற்சியில் இழக்கும் ஆற்றலை மீட்கிறது. தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகளை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தக்காளியில் கலோரிகள் 22.5, கொழுப்பு 0.25 கிராம்கள், சோடியம் 6.25 மில்லி கிராம்கள், கார்போஹைட்ரேட்கள் 4.86 கிராம்கள், நார்ச்சத்துக்கள் 1.5 கிராம்கள், 0 சர்க்கரை, புரதச்சத்துக்கள் 1.1 கிராம் உள்ளது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தக்காளியில் இருந்து நாம் எண்ணற்று உணவுகளை தயாரிக்க முடியும். இது அன்றாட பயன்பாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியை நீங்கள் பச்சையாகக் கூட சாப்பட முடியும். தக்காளில் இதுபோன்ற எண்ணற ரெசிபிக்களை செய்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் தக்காளி உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்