தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Heart Burn: நள்ளிரவில் திடீரென வரும் நெஞ்செரிச்சலை போக்குவது எப்படி?

Heart Burn: நள்ளிரவில் திடீரென வரும் நெஞ்செரிச்சலை போக்குவது எப்படி?

I Jayachandran HT Tamil
Feb 07, 2023 12:10 PM IST

நள்ளிரவில் திடீரென வரும் நெஞ்செரிச்சலை போக்குவது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

நள்ளிரவில் நெஞ்செரிச்சல்
நள்ளிரவில் நெஞ்செரிச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

சிலருக்கு தொடர்ந்து நெஞ்செரிச்சல் பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கு முறையான சிகிச்சை அவசியம்.

பொதுவாக அசைவ உணவுகளோ, காரமான உணவுகளோ அல்லது அதிக சூடான உணவுகளோ சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் உண்டாகும்.

குறிப்பாக இரவு நேரங்களில் இப்படி சாப்பிட்டால் நள்ளிரவில் கட்டாயம் நெஞ்செரிச்சல் வரும்.

அதுபோன்ற சமயங்களில் சில வழிமுறைகளை பின்பற்றினால் நெஞ்செரிச்சல் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

நள்ளிரவில் திடீரென நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் இரண்டு பூண்டு பற்களை சிறிய துண்டுகளாக்கி, அத்துடன் ஒரு மிளகு, பசுமஞ்சள் இருந்தால் கால் அங்குலம் எடுத்து துண்டுகளாக்கி தண்ணீருடன் சேர்த்து விழுங்கி விடுங்கள். பசுமஞ்சள் இல்லெயென்றால் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளலாம்.

இதை சாப்பிட்ட சில நிமிடங்களில் ஏப்பம் வரும். இதனால் நெஞ்சரிச்சலில் இருந்து விடுபடலாம்.

இதை சாப்பிட்டவுடன் உடனே தூங்கச் சென்று விடாமல் 5 நிமிடங்கள் வீட்டுக்குள்ளேயே நடந்து கொடுக்கலாம். பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு படுக்கச் செல்லுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் முழுவதுமாக போய் விடும்.

படுக்கும் போது எப்போதும் மல்லாக்கவோ, குப்புறவோ படுக்கக் கூடாது.

இடது பக்கமாக ஒருசாய்த்து படுக்க வேண்டும். அப்போதுதான் நெஞ்செரிச்சல் பிரச்னை வருவது குறையும்.

நமது உணவுக்குழாய் உடலில் இடது புறமாக வளைந்து இரைப்பைக்குள் இணைந்திருக்கும். உணவுக்குழாயின் ஆரம்பத்திலும் இரைப்பையுடன் இணைந்திருக்கும் இடத்திலும் ஸ்பிங்க்டர் என்ற அமைப்பு உள்ளது. இது உணவுக்குழாயை மூடும் வால்வு போன்றது.

சாப்பிடும் போது திறந்து கொள்ளும். சாப்பிட்டு முடிந்தவுடன் மூடிக் கொள்ளும்.

உணவை ஜீரணிக்க இரைப்பை அரைக்கத் தொடங்கியவுடன் அழுத்தம் காரணமாக உணவு மீண்டும் தொண்டைப்பகுதிக்கு வந்துவிடாமல் உணவுக்குழாய்-இரைப்பை இணைப்பில் உள்ள ஸ்பிங்க்டர் நன்றாக மூடிக்கொள்ளும்.

அதிக காரமாகவோ, சூடாகவோ உணவை சாப்பிட்டிருந்தால் இந்த ஸ்பிங்க்டர்கள் தளர்ந்து போய் உணவு தொண்டைப் பகுதிக்கு வந்து விடும். இதனால் கடுமையான நெஞ்செரிச்சல் ஏற்படும். ஏனென்றால் இரைப்பையில் உணவு அரைபடும்போது அதில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவுக்குழாய்க்குள் வரும்போது கடுமையான வலியை ஏற்படுத்திவிடும். இதனால் தொண்டைப்பகுதியில் புண் ஏற்படும். தொடர்ந்து நெஞ்செரிச்சல் உண்டாகும்.

இரவு 7-8 மணிக்குள் சாப்பாட்டை முடித்து விடுங்கள். சாப்பிட்ட பின்னர் கொய்யாக்காய், பப்பாளி, ஆப்பிள் என ஏதாவது ஒன்றை இரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிடுங்கள். காலையில் மலம் கழிக்கும் போது சிரமம் இருக்காது. அதிகம் சாப்பிட்டால் பிரச்னைதான்.

சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து வீட்டுக்குள்ளேயே காலாற சிறிது நேரம் நடக்கலாம். இதனால் உணவு சீக்கிரமே செரிக்கும்.

மதுப்பழக்கம், பான் மசாலா, புகைத்தல் பழக்கம் உள்ளவர்களுக்கு நள்ளிரவில் நெஞ்செரிச்சல் வரும். இதனால் இந்தப் பழக்கங்களை படிப்படியாக குறைத்துக் கொண்டு நிறுத்தி விட வேண்டும்.

தொப்பை உள்ளவர்களுக்கு நெஞ்செரிச்சல் வருவது சகஜம். இடுப்பில் கூடுதலாக உள்ள ஊளைசதை இரைப்பையை அழுத்துவதால் இந்தப் பிரச்னை உண்டாகும். அவர்கள் தகுந்த உடற்பயிற்சிகளின் மூலம் எடையைக் குறைப்பது நல்லது.

இது தவிர சிலருக்கு மேற்சொன்ன காரணங்கள் இன்றி தொடர்ந்து ஓரிரு நாள்களுக்கு நெஞ்செரிச்சல் வந்தால் உஷாராகி விடுங்கள். உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

ஏனென்றால் நெஞ்சரிச்சல் மாரடைப்பின் ஒரு அறிகுறியாகும். இசிஜி எடுத்தால் பாதிப்பைக் கண்டறிந்து விடலாம்.

இதில் சர்க்கரை நோயாளிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த சர்க்கரை அ்ளவை கட்டுக்குள் வைத்திருக்காதவர்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள் தெரியாது.

பொதுவாக மாரடைப்பு வரும்போது கழுத்து, தோள்பட்டையிலிருந்து இடது கை சுண்டுவிரல் வரை நமைச்சல் போலத் தோன்றி கடும் வலி ஏற்படும். இந்த அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை செய்து சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அறிகுறி தோன்றாது. காரணம், அவர்களுடைய ரத்தக்குழாய்கள் சர்க்கரை நோயின் பாதிப்பால் உணர்வை இழந்திருக்கும்.

எனவே சாதாரண நெஞ்செரிச்சல் என்று யாரும் அசட்டையாக இருந்து விடாதீர்கள்.

WhatsApp channel