வீட்டிலேயே செய்யலாம் சிலோன் பரோட்டா!சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
பரோட்டா என்றாலே பலருக்கும் பிடிக்கும் உணவாக இருந்து வருகிறது. மதுரை கொத்து பரோட்டோ முதல் குற்றாலம் பார்டர் பரோட்டா வரை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விதமான பரோட்டா உள்ளது.
பரோட்டா என்றாலே பலருக்கும் பிடிக்கும் உணவாக இருந்து வருகிறது. மதுரை கொத்து பரோட்டோ முதல் குற்றாலம் பார்டர் பரோட்டா வரை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விதமான பரோட்டா உள்ளது. அது போல தான் இலங்கையிலும் சிலோன் பரோட்டா என்ற ஒரு வகை பரோட்டா உள்ளது. தமிழர்கள் வாழும் இலங்கை பகுதிகளில் சிலோன் பரோட்டா பிரதான உணவாகவும் இருந்து வருகிறது. இனி சிலோன் பரோட்டா சாப்பிட இலங்கைக்கு செல்ல வேண்டியது இல்லை. வீட்டிலேயே அசத்தும் சுவையில் சிலோன் பரோட்டா செய்யும் முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
2 கப் மைதா மாவு
1 கப் கோதுமை மாவு
ஒரு கப் பால்
2 டீஸ்பூன் நெய்
அரை கப் எண்ணெய்
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
இரண்டு கப் மைதா மாவு மற்றும் ஒரு கப் கோதுமை மாவை ஒரு சேர சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ள வேண்டும். சலித்த மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு அதில் சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கலந்து விட வேண்டும். பின்னர் அந்த மாவில் பாலை ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். சிறிது சிறிதாக மட்டுமே தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். மேலும் மாவு பிசைய தேவையான அளவு தண்ணீரை மட்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் இதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசைய வேண்டும். பின்னர் நன்கு பிசைந்த மாவை ஒரு துணி போட்டு மூடி வைக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு பின்னர் அந்த மாவை எடுத்து மீண்டும் இழுத்து பிசைய வேண்டும். மாவு மிருதுத் தன்மை வரும் வரை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் அதற்குள் இரண்டு மூன்று முறை மாவை பிசைந்து கொள்ளவேண்டும்.
இரண்டு மணி நேரம் கழித்து பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இந்த உருண்டையில் வெறும் மாவைத் தூவி வட்டமாக நன்கு மெலிதாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேய்த்த மாவை சதுரமாக மடித்துக் கொள்ள வேண்டும். பிறகு கொஞ்சம் மொத்தமாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தோசை சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பின் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேய்த்த சதுரவடிவ பரோட்டாவை போட வேண்டும். ஒரு பக்கம் லேசாக சிவந்தவுடன் மறுபக்கம் திருப்பிவிட்டு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு சிவக்க விடவும். இரண்டு புறமும் நன்கு சிவந்தவுடன் எடுத்து விடவும். இந்த சிலோன் பரோட்டாவிற்கு அனைத்து வகை இந்திய கிரேவியும் வைத்து சாப்பிடலாம். இதனுடன் வெங்காய ரைத்தாவும் வைத்து சிலர் சாப்பிடுவர். இவ்வாறு சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.
பரோட்டா என்றாலே நமது வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இனி இந்த சிலோன் பரோட்டாவை செய்து தந்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை குஷி படுத்துஙகள்.
டாபிக்ஸ்