Homemade Kurkure: இனி வீட்டிலேயே குர்குரே செய்யலாம்! தெரிஞ்சுக்க இத படிங்க!
Homemade Kurkure: குழந்தைகளுக்கு இயல்பாகவே பாக்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருட்கள் என்றால் அதிக பிரியம் இருக்கும். அதிலும் பொரித்த உணவுகள் என்றால் அது அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு இயல்பாகவே பாக்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருட்கள் என்றால் அதிக பிரியம் இருக்கும். அதிலும் பொரித்த உணவுகள் என்றால் அது அதிகரிக்கும். குறிப்பாக லேஸ், குர்குரே போன்ற துரித உணவுகளில் அவர்களுக்கு அலாதியான பிரியம் இருந்து வருகிறது. இது சில சமயம் குழந்தைகளின் வயிற்றுக்கு தொந்தரவாக முடிந்து விடுகிறது. இதில் இருந்து விடுபட இந்த திண்பண்டங்களை சுத்தமா முறையில் நாமே வீட்டில் செய்து சாப்பிடுவதே தீர்வாகும். வீட்டிலேயே ஈசியாக குர்குரே செய்யும் முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
அரை கப் பாஸ்மதி அரிசி
அரை கப் சோள மாவு
அரை கப் மைதா மாவு
3 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
3 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
1/2 டேபிள் ஸ்பூன் பெப்பர் தூள்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
1 டேபிள் ஸ்பூன் தக்காளி பவுடர்
1 டேபிள் ஸ்பூன் சாட் மசாலா
1 டேபிள் ஸ்பூன் அம்ச்சூர் தூள்
செய்முறை
முதலில் பாஸ்மதி அரிசி, கடலை பருப்பு, மற்றும் துவரம் பருப்பை நன்கு கழுவி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணத்தில் சிறிதளவு உப்பு, தக்காளி பவுடர், மற்றும் சிறிதளவு காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் அம்ச்சூர் தூளை போட்டு நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி, கடலை பருப்பு, மற்றும் துவரம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கூழாக அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த கூழை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி அதில் சோள மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், தக்காளி பவுடர், பெப்பர் தூள், சாட் மசாலா, அம்ச்சூர் தூள் மற்றும் கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இந்த மாவை மிதமான கெட்டி பதத்திற்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது ஒரு ப்ளாஸ்டிக் கவரை எடுத்து அதில் கலந்து வைத்திருக்கும் இந்த மாவை ஊற்றி கவரை மேலே முறுக்கி ஒரு ரப்பர் பேண்ட்டை போட்டு வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். எண்ணெய் சுட்டதும் மாவு ஊற்றிய பிளாஸ்டிக் பையின் அடியில் சிறு துளை போட்டு எண்ணெய்யில் சிறிது சிறிதாக இந்த மாவை குர்குரே வடிவத்தில் பக்குவமாக பிழிந்து விடவும். குர்குரே சிப்ஸ்கள் ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு பொன் நிறம் வந்ததும் எடுத்து ஒரு தட்டில் போட்டுக் கொள்ளவும். பின் கலந்து வைத்திருக்கும் மசாலா தூளை இதன் மேலே தூவி கிளறவும். சூடான சுவையா வீட்டிலேயே செய்த குர்குரே ரெடி. இதனை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடலாம்.
டாபிக்ஸ்