தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Prawn Podimas: என்னா டேஸ்ட்டு..அறுசுவையும் நடனமாடுதே - சுவையான இறால் பொடிமாஸ்!

Prawn Podimas: என்னா டேஸ்ட்டு..அறுசுவையும் நடனமாடுதே - சுவையான இறால் பொடிமாஸ்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 25, 2023 11:30 AM IST

சுவையான இறால் பொடிமாஸ் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

இறால் பொடிமாஸ்
இறால் பொடிமாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

சிலர் சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இரண்டு உணவு வகைகளிலுமே ஏராளமான ரெசிபிகள் உள்ளன. அசைவ உணவு விரும்பிகளிலேயே சிலர் கடல் உணவுகள் மீது மிகவும் விருப்பமாக இருப்பார்.

அப்படி கடல் உணவுகளில் மிகவும் ஸ்பெஷல் ரெசிபியாக அனைவரும் விரும்புவது இறால். இறாலை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு புதுமையான சுவை மிகுந்த ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முட்டை பொடிமாஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது இறால் பொடிமாஸ்.

சைவ உணவோடு சாப்பிட்டால் இந்த இறால் பொடிமாஸ் தாறுமாறாக இருக்கும். வாங்கச் சுவையான இறால் பொடிமாஸ் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் இறால்
  • இரண்டு முட்டை
  • இரண்டு வெங்காயம்
  • அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • சிறிது மஞ்சள் தூள்
  • அரை தேக்கரண்டி உப்பு
  • சிறிதளவு வெங்காயத்தாள்
  • கால் தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • கால் தேக்கரண்டி மிளகுத்தூள்
  • கால் தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • தேவையான அளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி
  • தேவையான அளவு எண்ணெய்

இறால் பொடிமாஸ் செய்முறை

  • முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • ஒரு தோசைக் கல்லை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி இறாலை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • கொத்தமல்லி, கருவேப்பிலை, வெங்காயத்தாள் மற்றும் வெங்காயம் உள்ளிட்டவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தாள் மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
  • அதில் சிறிது மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கருவேப்பிலை, உப்பு அனைத்தையும் போட்டு வதக்க வேண்டும்.
  • அதன் பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கிளறி விட வேண்டும். முட்டை உதிரி உதிரியாக வெந்ததும் அதில் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள இறால் கொத்தமல்லி வெங்காயத்தால் அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கி இறக்கி விட வேண்டும்.
  • அவ்வளவுதான் சுவையான இறால் பொடிமாஸ் தயார். இதனைச் சாம்பார் சாதம், ரசம் சாதம் என அனைத்திற்கும் சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்