தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Fenugreek Seeds

Home Remedies: வெந்தயத்தின் 26 அற்புத மருத்துவ நன்மைகள்

I Jayachandran HT Tamil
Mar 26, 2023 03:08 PM IST

வெந்தயத்தின் 26 அற்புத மருத்துவ நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்

வெந்தயத்தின் 26 அற்புத மருத்துவ நன்மைகள்
வெந்தயத்தின் 26 அற்புத மருத்துவ நன்மைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

எல்லாம் சரி, வெந்தயத்தில் என்ன சத்துக்கள் இருக்கின்றன? அதன் பல்வேறு மருத்துவப் பயன்கள் என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதென்றால், இக்கட்டுரையை ஒரே மூச்சில் படித்து விடுங்கள். இத்தனை நன்மைகளா? என்று ஆச்சரியம் அளிக்கும்.

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனைஸ் மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இது மட்டுமில்லாமல், டையோஸ்ஜெனின் என்னும் சேர்மமும் உள்ளது. அதனால்தான் வெந்தயத்தால் இத்தனைப் பயன்கள் நமக்குக் கிடைக்கின்றன.

வெந்தயத்தால் பெண்களுக்கு பலவகைகளில் நன்மைகள் ஏற்படுகின்றன. அவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லாருக்குமே வெந்தயம் மிகுந்த நன்மைகளைத் தருகிறது. அதில் அடங்கியுள்ள 26 மருத்துவ நன்மைகள் குறித்து இங்குப் பார்க்கலாம்.

மாதவிடாய்

மாதவிடாய் காலங்களில் சில பெண்கள் அதிக உஷ்ணமாக உணரக்கூடும். கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் வெந்தயத்தை சாப்பிடுவது சற்று வெப்பத்தை தணிப்பதுடன், வலியையும் குறைக்கும். மாதவிடாய் சுழற்சி நிற்கும் காலகட்டத்தில், அதாவது 40 வயதுள்ள பெண்களுக்கு உடல்நிலை மோசமாக இருக்கும். அவர்களுக்கும் அதிக உடல் வெப்பம் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். அப்போது முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் சூடு தணிவதுடன், அந்தப் பிரச்னையும் தீர்ந்து விடும். இந்தப் பிரச்னைக்கு வறுத்த வெந்தயத்துடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

சிக்கலற்ற பிரசவம்

முளைக்கட்டிய வெந்தயத்தை தினசரி குறைந்த அளவு சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கும் போது சந்திக்கும் சிரமத்தைக் குறைக்கலாம். ஒருவேளை அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், கர்ப்பப் பை சுருக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனையுடன் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர, சமையலில் தினசரி சேர்த்துக்கொள்ளலாம்.

செரிமானம்

ஜீரணக்கோளாறால் அவதிப்படுபவர்கள், வெந்தயத்தை சாப்பிடலாம். வெறும் வெந்தயத்தையோ அல்லது முளைக்கட்டிய வெந்தயத்தையோ சாப்பிட்டால், செரிமான பிரச்னை நீங்குவதுடன், வாயுத் தொல்லை இருந்தாலும் நீங்கி விடும்.

தலை முடி வளர்ச்சி

தலை முடி வளர்ச்சியில் வெந்தயத்தின் பங்கு முக்கியமானது. அதில் உள்ள எண்ணெய் பசை முடி வளர்ச்சிக்கு உதவுதால், தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் தயாரிப்பில் வெந்தயமும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது முடி உதிர்தலை தடுக்கிறது.

வாசனை திரவியங்கள்

வெந்தய எண்ணெய்யில் இருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. இது அதிக மணத்தையும், கிருமிகளை அழிக்கும் இயல்புடனும் இருப்பதால், வாசனை திரவியங்களின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறுநீர் பிரச்னை

சிறுநீர் சம்பந்தப்பட்டப் பிரச்னை உள்ளவர்கள், வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலைக் குளிர்விப்பத்துடன், உடல் வறட்சியை நீக்கி சிறுநீரைப் பெருக்குகிறது. இதனால், சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

சீதபேதி

உடல் வெப்பம் காரணமாக சீதபேதி ஏற்பட்டு அவதிபடுபவர்களுக்கு வெந்தயம் மிகச் சிறந்த மருந்து. இது உடல் சூட்டை தணிப்பதால், மிகச்சிறந்த சீதபேதி நிவாரணியாக விளங்குகிறது. வெந்தயத்தை அப்படியேவோ அல்லது வறுத்து நீர் மற்றும் தேன் கலந்து, நன்கு பிசைந்தோ சாப்பிடலாம்.

வெந்தயத்தை வறுத்து, வெல்லம் சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து சாப்பிட்டாலும், சீதபேதி குணமாகும். அல்லது வெந்தயத்தை மோரில் ஊற வைத்து குடிக்கலாம். மோரில் ஊற வைத்த வெந்தயம் வாயு உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகளையும் போக்கும்.

பேன் மற்றும் பொடுகு

தேங்காய் எண்ணைய்யில் வெந்தயம் மற்றும் கற்பூரத்தை போட்டு நீண்ட நேரம் ஊற வைக்கவும். இதை குளிக்கும் போது தலையில் நன்கு தேய்த்து அலச பேன், பொடுகு நீங்கும். இதில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாகப் பாலையும் பயன்படுத்தலாம்.

தாய்ப்பால்

வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரப்பு சீராகும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு

வெந்தயம் சீரற்ற உணவுப் பழக்கம் காரணமாக ரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் அளவை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது.

மல சிக்கல்

தினசரி வெந்தயம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். சாப்பிடும் உணவை நன்கு செரித்து, வயிற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வெந்தயம் உதவுகிறது.

வயிறு மற்றும் தொண்டைப் புண்

வயிறு மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்படும் புண்களை வெந்தயம் குணமாக்குகிறது. மேலும் இதன் உடலைக் குளிர்ச்சியாக்கும் இயல்பு உடலில் ஏற்படும் கொப்புளங்களைக் குணப்படுத்துகிறது. இது தவிர இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைப் போக்குகிறது.

சரும பளபளப்பு மற்றும் தூய்மை

வெந்தயத்தில் உள்ள விட்டமின் சி, பளபளப்பான சருமத்திற்கு உதவுகிறது. இதை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், வறட்சி தன்மை நீங்கி பொலிவு பெறும். மேலும் இரவில் தூங்குவதற்கு முன்பு வெந்தைய பொடியை முகத்தில் தடவி பின்பு கழுவிவிட்டு, தூய்மையான துணியில் துடைத்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.

கண் கருவளையம் மற்றும் கரும் புள்ளிகள்

வெந்தயத்தில் உள்ள வைட்டமின்கள், முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளையும், கண்ணின் ஏற்படும் கரு வளையத்தையும் நீக்குகின்றன. வெந்தயத்தை அரைத்து முகத்தில் தடவி விட்டு உலர்ந்த பிறகு கழுவும்போது, அது இறந்த செல்கள், பாக்டீரியா, அழுக்குகள் ஆகியவற்றை வெளியேற்றி விடுகிறது.

உதடு வெடிப்பு

பெண்களுக்கு உடல் வெப்பநிலை காரணமாக, உதடுகள் வெடிக்கும். அவர்கள், தினசரி குளிர்ந்த நீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அதை காலை வெறும் வயிற்றிலும், இரவு தூங்குவதற்கு முன்பாகவும் குடித்து வந்தால் இரண்டு மூன்று நாட்களில், படிப்படியாக உதடு வெடிப்பு மறைந்து சரியாகி விடும்.

தோல் நோய்கள்

சொறி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களுக்கு வெந்தயம் மிகச்சிறந்த நிவாரணி. வெந்தயத்தை ஊற வைத்து, அரைத்து அதனை தினசரி தோல் பாதிப்புள்ள இடத்தில் தடவி வந்தால், தோல் நோய்கள் முற்றிலுமாக நீங்குவதுடன், தோலில் ஏற்படும் அரிப்புகளும், தடிப்புகளும்கூட மறைந்து விடும்.

முகப்பரு

வெந்தயத்தை மேற்குறிப்பிட்ட முறைப்படி, தினசரி அதாவது பிரச்சனை நீங்கும் வரை முகத்தில் தடவி, சுமார் 30 நிமிடங்கள் உலர வைத்து கழுவினால் முகப்பரு நீங்கும்.

உடல் எடையைக் குறைக்க

உடல் எடை குறைய வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வெந்தயம். வெந்தயத்தை தினசரி, தண்ணீரில் ஊற வைத்து இரண்டு டம்ளர்கள் குடித்தால், உடல் எடை படிப்படியாகக் குறைவதை உணரலாம். உடல் எடை குறைகிறது என்பதற்காக அதிகப்படியான வெந்தயத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது

சுவாச கோளாறு

சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணமாகச் சுவாச கோளாறு ஏற்பட்டு அவதிபடுபவர்கள், வெந்நீரில் வெந்தயத்தை போட்டுத் தினசரி குடிக்கலாம். வெந்தயம் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, சுவாசப் பிரச்னையில் இருந்து விடுதலையைப் பெற்றுத் தருகிறது.

உடலில் தேங்கிய கழிவுகள் நீங்கும்

வெந்தயத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் மற்றும் ஃபைபர், உணவு செரிமானத்தை ஊக்குவிக்கக்கூடியது. இது, சாப்பிடும் உணவுப்பொருட்களில் உள்ள மோசமான பொருட்களைச் சிதைத்து வெளியேற்றுவதால், உணவு செரிமானத்தை ஊக்குவிப்பதில் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது. தேவையில்லா கழிவுகள் உடலை விட்டு நீங்கி விடும்.

கொழுப்பு குறைய

உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் வெந்தயத்தை தினசரி சாப்பிடலாம். இது கொழுப்புகளை சிதைத்து, வெளியேற்றி விடுகிறது.

பசியின்மை

சிலருக்கு பசிக்கவே பசிக்காது. எப்போதுமே நன்றாக சாப்பிட்ட உணர்வு இருக்கும். இதற்குக் காரணம் தெரியாமல், சாப்பிடுவதை சிலர் தவிர்ப்பார்கள். உண்மையில், சாப்பிட்டது முழுவதுமாக செரிக்காமல் தாமதம் ஆவதனால்தான் பசியின்மை ஏற்படுகிறது. வெந்தயம் உணவை உடைத்து செரிக்க வைக்கும் இயல்புடையதால் வயிற்றில் உணவு தங்குவதில்லை. இதனால் பசி நேரத்துக்கு எடுக்கும். பசியின்மையால் அவதிப்படுபவர்களுக்கு வெந்தயம் சிறந்த மருந்து.

எலும்புக்கு பலம்

உடலில் எலும்புகளின் உறுதித்தன்மை, நச்சுப்பொருட்களால் பாதிக்கப்படும். உதாரணமாக அலுமினியம் எலும்பை வெகுவாக பாதிக்கும். வெந்தயத்தில் உள்ள நச்சு நீக்கும் தன்மை, அலுமினியம் போன்ற எலும்பை பாதிக்கக்கூடிய பொருட்களை சிதைத்து வெளியேற்றி, உடலுக்கு வலு சேர்க்கிறது.

ஆரோக்கியமான இதயம்

இதய நோய் ஏற்படாமல் இருக்க விரும்புபவர்கள் வெந்தயத்தை தவிர்க்கவே கூடாது. வெந்தய விதையோ, கீரையோ எதுவாக இருந்தாலும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கக்கூடிய இயல்புடையது. இதனால் இதயம் சீராக இயங்கி இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆண்மை விருத்தி

ஆண்மைக் குறைவு நீங்க வெந்தயம் அவசியம் என்றால் மிகையாகாது. ஏனென்றால், ஆண்மை விருத்திக்காக வெந்தயத்தை பயன்படுத்துவது ஆயிரக்கணகான ஆண்டுகளாக பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் நடைமுறையாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 600 மில்லிகிராம் வரை உணவுடன் சேர்த்து உட்கொண்டால், அது சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். வயது முதிர்வு காரணமாக உடலுறவில் நாட்டமில்லாமல்; இருப்பவர்களும் தினசரி இதே அளவுக்கு வெந்தயத்தை எடுத்துக்கொள்ளலாம். 7 முதல் 10 நாட்களில் பலனைக் காணலாம்.

பெருங்குடல் புற்று நோய்

சாப்பிடும்போது குடலில் சேரும் கொழுப்புகள் மற்றும் தேவையற்ற ஸ்டார்ச் உள்ளிட்ட பொருட்களால் பெருங்குடலில் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. வெந்தயத்தை தினசரி உட்கொள்வதால் தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்பட்டு பெருங்குடல் சீராக இயங்குகிறது. புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்