புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? நுரையீரலில் என்ன செய்கிறது பாருங்க – விளக்கும் மருத்துவர்!
புகைப்பிடிக்கும் பழக்கம் நுரையீரலில் என்ன செய்கிறது என்று அப்போலோ புற்றுநோய் மைய நிபுணர் விளக்குகிறார்.
நுரையீரல் புற்றுநோய் என்பது நோயாளிகளின் உயிரையே பறிக்கக்கூடிய கொடிய நோய்களுள் ஒன்றாகும். உலகில் இது மிகவும் கொடிய புற்றுநோய் பட்டியலில் உள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நாம் நுரையீரல் புற்றுநோயை விழிப்புணர்வு மாதத்தை கடைபிடித்தாலும், எல்லா காலங்களிலும் அதுகுறித்த விழிப்புணர்வு என்பது கட்டாயம் வேண்டும். நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள், ஆபத்துக்கள் மற்றும் அதை துவக்கதிலேயே கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் ஆகியவை குறித்து மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். குறிப்பாக புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட நபர்கள் இந்த நோய் குறித்து தெரிந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நோயைத் தடுக்க விழிப்புணர்வு என்பது முக்கியமான ஒன்றாகும்.
இதுகுறித்து சென்னை தரமணி அப்பலோ ப்ரோட்டான் புற்றுநோய் மைய மூத்த ரோபாடிக் அறுவைசிகிச்சை நிபுணர், டாக்டர் அஜய் நரசிம்மா நம்மிடம் உரையாடினார். அப்போது நுரையீரல் புற்றுநோயாளிகள் என்ன செய்யவேண்டும் என்றும், நுரையீரல் புற்றுநோய் வராமல் எப்படி தடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதோ அவரது கருத்துக்கள்
நுரையீரல் புற்றுநோய்க்கான காரணங்கள்
நுரையீரலில் வழக்கத்துக்கு மாறான செல்கள் அதிகளவில் கட்டுப்படுத்த முடியாமல் வளர்வதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோயில் இரண்டு வகை உள்ளது. சிறிய செல் நுரையீரல் புற்றுநோய், சிறிய செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய் ஆகும். சிறிய செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய் பொதுவான ஒன்றாகும். புகைப்பிடிக்கம் பழக்கம்தான் நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. மற்ற காரணங்களாக பாஸிவ் ஸ்மோக்கிங் உள்ளது. மேலும் காற்று மாசு, மரபு, புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துக்கூடிய இடங்களில் அதிகம் இருப்பது ஆகியவையும் காரணங்களாக உள்ளன.
அறிகுறிகள்
நுரையீரல் புற்றுநோயின் துவக்கம் சுவாச கோளாறுகளுடன் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். இதுதான் ஆரம்ப காலத்திலே இந்த நோயை கண்டுபிடிக்க முடியாமல் போவதற்கும், இறுதிகட்டத்தில் தான் இந்த நோய் நமக்கு தெரியவருவது காரணமாகிறது. நுரையீரல் புற்றுநோய்க்கான எச்சரிக்கைகளாக, தொடர் இருமல், இருமும்போது ரத்தம் வருவது, மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, திடீரென உடல் எடை குறைவது ஆகியவை உள்ளன. பொதுவான சோர்வு மற்றும் நிமோனியா மீண்டும் வருவது ஆகியவை நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கின்றன. தாமதமாகத்தான் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதனால் இந்நோய் மேலும் தீவிரமடைந்துவிடுகிறது. இதனால்தான் இந்த நோயை ஆரம்ப காலத்திலே கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
நோய் கண்டறிதல் அல்லது பரிசோதனை
அதிக ஆபத்துக்கள் உள்ளவர்கள் அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளவேண்டும். நீண்ட காலம் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், குடும்பத்தினருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். எல்டிசிடி ஸ்கேன்கள் நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் வெற்றிகரமான சிகிச்சைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அனைவரும் பரிசோதித்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஆபத்து அதிகம் உள்ளவர்கள் குறிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களுக்கு பரிசோதனை தேவையா, இல்லையா என்பதை அவர்களின் அறிவுரையுடன் செய்துகொள்வது நல்லது.
தடுப்பது எப்படி?
புகையிலையை அனைத்து வகைகளிலும் தடுக்கவேண்டும். உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் மற்றும் மாசுக்களிடம் இருந்து விலகியிருக்கவேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரிவிகித உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை மேலும் குறைக்கும். ஆதரவு குழுக்கள், நோயாளிகள் குழுக்கள், ஆலோசனை உதவிகள் வழங்குபவர்கள் என சவால்களை எதிர்கொள்ள உதவுவார்கள்.
எனவே நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் காரணங்கள் குறித்து ஆழ்ந்த புரிதல் மற்றும் விழிப்புணர்வு வேண்டும். ஆபத்துக்காரணிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது, அறிகுறிகளை இனம்காண்பதும், மேலும் அது அதிகரிக்காமல் ஆரம்ப நிலையிலே கட்டுப்படுத்த உதவும். இதற்கு எண்ணற்ற சிகிச்சைகள் உள்ளன. அதிகளவில் விழிப்புணர்வு, அனைவரும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்போது, இதன் தீவிரம் குறையும். நுரையீரல் புற்றுநோய் எனும் கொடிய நோயுடன் வாழ்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து, அவர்கள் இதை கடக்க உதவுவோம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்