Air Pollution : காற்று மாசுபாடு உங்களுக்கு என்ன ஆரோக்கிய கேடுகளைக் தருகிறது? – ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்!
Air Pollution : காற்று மாசுபாடு உங்களுக்கு என்ன ஆரோக்கிய கேடுகளைக் தருகிறது என்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். அதற்கு இந்த ஆய்வு தரும் அதிர்ச்சி தகவலைப்பாருங்கள்.
மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் (PM2.5 மைக்ரான் அளவு அதிகம்) சர்க்கரை நோய்-2 பாதிப்பு அதிகம் ஏற்படுவது இந்திய ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகம் இருப்பதால், நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகள் (ஆஸ்துமா உட்பட), மாரடைப்பு, மூளை அல்லது நரம்பு மண்டல பாதிப்பு (Stroke), புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது, சர்க்கரை நோய் - 2 பாதிப்பு ஏற்படுவதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஆய்வுகள்
ஏற்கனவே, அமெரிக்க, ஐரோப்பிய 13 ஆய்வுகளில், வழக்கமான அளவை விட 10 மைக்ரோகிராம்/கன மீட்டர் PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகமானால், சர்க்கரை நோய் - 2 பாதிப்பு ஏற்படுவது 8 – 10 சதவீதம் அதிகமாவது கண்டறியப்பட்டது. (ஆண்களைக் காட்டிலும், பெண்கள் மத்தியில் பாதிப்பு அதிகம்)
சீனாவில், 40,000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், ரத்தத்தில் வழக்கமான சர்க்கரை அளவை விட, அதிக சர்க்கரை அளவு இருப்பது உறுதிபடுத்தப்பட்டதோடு, அவர்கள் மத்தியில், அதன் காரணமாக, இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.
சமீபத்தில், JAPI-Journal of Association pf Physicians of India பத்திரிக்கையில், "Air pollution : A new cause of Type-2 Diadetes?" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில், சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர் மருத்துவர் மோகன், "PM 2.5 மைக்ரான் துகள்கள் ஹார்மோன்களை பாதிக்கும் தன்மை கொண்டவை - Endocrine Disruptors - என்பதை உறுதிபடுத்தியதோடு, இன்சுலின் சுரப்பதை அவை குறைக்கின்றன என்றும், இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்புத்தன்மையை (Insulin Resistance) உருவாக்குகின்றன என்பதையும் ஆதாரங்களுடன் கண்டறிந்து எழுதினார்.
இந்திய ஆய்வுகள்
2020ல் Greenpeace, India மேற்கொண்ட ஆய்வில், மும்பையில் 25,000 பேரும், டெல்லியில், 54,000 பேரும், சென்னையில் 11,000 பேரும் ஆண்டுக்கு PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகரிப்பால் முன்கூட்டியே இறந்தது தெரியவந்துள்ளது.
உலகளவில், 20 சதவீத சர்க்கரைநோய்-2 பாதிப்பு ஏற்படுவதற்கு, காற்று மாசுபாடு (PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகம்) காரணம் எனத் தெரியவந்துள்ளது.
சமீபத்தில், "BMJ Open Diabetes Research & Care" ஆய்விதழில், சென்னை, டெல்லியில் உள்ள 12,064 பேரிடம் 7 ஆண்டுகள் செய்த ஆய்வில், வழக்கமான அளவை விட,10 மைக்ரோகிராம்/கனமீட்டர், மாதாந்திர சராசரி அளவை விட அதிகமாக இருந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு 0.4 மி.கி./100 மில்லி அதிகமாவதும், HbA1c-0.021 அளவு அதிகமாவதும், ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சர்க்கரைநோய்-2 பாதிப்பும் 22 சதவீதம் அதிகமாகும் வாய்ப்பு இருப்பது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், 2019ல், ஆண்டுக்கு 95.6 பேர்/லட்சம் பேருக்கு - PM 2.5 மைக்ரான் துகள்கள் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே இறக்கின்றனர்.
இந்திய அரசின் அளவுகோலின்படி, நாளுக்கு PM 2.5 மைக்ரான் துகள்களின் அளவு 60 மைக்ரோகிராம்/கன மீட்டர் என அதிகமாக இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துவது என்ன?
உலக சுகாதார நிறுவனமோ, அதன் அளவு 15-25 மைக்ரோகிராம்/கன மீட்டர் என்றும், அமெரிக்க சூழல் பாதுகாப்பு நிறுவனம்-EPA-9 மைக்ரோகிராம்/கன மீட்டர் என்ற அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என சமீபத்திய ஆய்வுகளின் படி நிர்ணயித்துள்ளது.
சுத்தமான காற்றை சுவாசிப்பது (உலக அளவில் 10ல் 9 பேர் சுகாதாரமற்ற காற்றையே சுவாசிப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன) மக்களின் அடிப்படை உரிமை. காற்றை மாசுபடுத்தும் ஆலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ("Pollutor Pays" விதி) அரசின் கடமை.
சுகாதாரமற்ற காற்றும் சர்க்கரைநோய்-2 பாதிப்பு ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், அதை தடுத்து மக்களை காக்க, அரசு/சுகாதாரத்துறை விரைந்து முன்வர வேண்டும்.
நன்றி – மருத்துவர்.புகழேந்தி.
டாபிக்ஸ்