BOLLYWOOD MOVIE REMAKE: பாலிவுட் ரீமேக்..கேங்ஸ்டராக விஜயகாந்த் நடித்த மாஸ் மசாலா படம் பற்றி தெரியுமா?
Bollywood Movie Remake in Tamil: பாலிவுட் ரீமேக் ஆக அனைத்து விதமான ஜனரஞ்சக அம்சங்களுடன் கேங்ஸ்டராக விஜயகாந்த் நடித்த மாஸ் மசாலா படம், அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. ரஜினிக்கு பாட்ஷா போல் விஜயகாந்துக்கு இந்த படம் அமைந்தது.
விஜயகாந்த் நடிப்பில் பக்கா கமர்ஷியல் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட்டடித்த படம் தர்மா. விஜயகாந்த் படங்கள் பெரும்பாலானவை ப்ரஷ் கதைகளாகவே இருக்கும். அவரது நடிப்பில் ரீமேக் படங்கள் என்பது எப்போதாவது நிகழக்கூடியதாக இருக்கும்.
அப்படித்தான் பாலிவுட்டில் சன்னி தியோள் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஜிட்டி படத்தின் ரீமேக்காக தர்மா உருவானது. இந்த படத்தில் ரவீனா டன்டன் ஹீரோயினாக நடித்திருப்பார். ஆஷிஷ் வித்யார்த்தி, அனுபம் ஹேர், சச்சின் கடேகர் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். அந்த காலகட்டத்தில் வெற்றி இயக்குநராக இருந்த கேயார் தர்மா படத்தை இயக்கியிருப்பார்.
1997இல் வெளியான இந்த படம் அந்த ஆண்டில் அதிக வசூலை அள்ளிய படமாக இருந்தது. இதையடுத்து அடுத்த ஆண்டிலேயே இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இந்தி அளவுக்கு இல்லாவிட்டாலும் கணிசமான வசூலை அள்ளியது.
அநியாயத்தை தட்டிக்கேக்கும் ஹீரோ
அநியாயம் அக்கிரமங்களை எதிர்த்து நிற்கும் விஜயகாந்த் வீட்டை விட்டு தனியாக வசித்து வருகிறார். வழக்கறிஞரான இவரது தந்தை ஜெய்சங்கர், விஜயகாந்த் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தாயார் வடிவுக்கரசி, சகோததர் தலைவாசல் விஜய், பாசமிகு தங்கை கீதா ஆகியோரை பார்ப்பதற்காக அவ்வப்போது வீடு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
விஜயகாந்தின் காதலியாக வரும் ப்ரீத்தா விஜயகுமார் அவமானப்படுத்தும் ரவுடி ராஜாவா சாலையில் வைத்து வெட்டி கொலை செய்கிறார் விஜயகாந்த். இதனால் அவர் ஜெயிலுக்கு செல்கிறார். இதற்கிடையே விஜயகாந்தின் தங்கை அசிஸ்டென்ட் கிமிஷனரான ரஞ்சித்தை திருமணம் செய்து கொள்கிறார்.
கேங்ஸ்டர் கேரக்டரில் விஜயகாந்த்
ஜெயிலில் இருந்து ரிலீசாகும் விஜயகாந்த, கேங்ஸ்டர் ஆகிறார். ரவுடிகளை தீர்த்து கட்டி ஏழைகளும் உதவி வருகிறார். இந்த நேரத்தில் முதலமைச்சராக வரும் எஸ்.எஸ். ராஜேந்திரன் கேங்ஸ்டர்களை என்கவுண்டர் செய்ய உத்தரவிடுகிறார். அந்த லிஸ்டில் விஜயகாந்த் பெயரும் இருக்கிறது.
போதை பொருள் கடத்தல்காரர்களாக வரும் மன்சூர் அலிகான், பொன்னம்பலம், கசான் கான் ஆகியோர், ஊழல் அமைச்சரான வினு சக்கரவர்த்தியுடன் இணைந்து முதலமைச்சரை கொல்ல திட்டமிடுகின்றனர். இந்த விஷயம் விஜயகாந்த சகோதரர் தலைவாசல் விஜய் தெரிந்து கொள்கிறார். அவரை கொலை செய்யும் ரஞ்சித், தனது அண்ணனான ரவுடி ராஜா விஜயகாந்த் கொலை செய்ததற்காக பழி வாங்குவதாக செல்கிறார். அத்துடன் இதை பற்றி தெரிந்து கொண்ட மனைவியையும் கொல்கிறார்
இந்த விஷயம் விஜயகாந்துக்கு தெரிந்து விடுகிறது. பின் அமைச்சர் கேங்க, ரஞ்சித் ஆகியோருக்கு இடையிலான மோதலில் முதலமைச்சரை காப்பாற்றுவதை, அதிரடி ஆக்ஷன் பாணியில் சொல்லியிருப்பார்கள்.
மாஸ் பட பார்முலா
தெறிக்கவிடும் இன்ட்ரோ காட்சி, அறிமுக பாடல், தாய் தங்கை சென்டிமெண்ட், காதல் என மாஸ் மசாலா படங்களுக்கு என இருக்கும் பார்முலாவை கொஞ்சம் கூட பிசிறு தட்டமால் இந்த படத்தை உருவாக்கியிருப்பார்கள். இந்தி படத்தின் கதையையும், காட்சியையும் தமிழுக்கு ஏற்றவாறும், விஜயகாந்துக்கு பொருத்தமாக சிறிய மாற்றங்களை செய்து விறுவிறுப்பு குறையாத திரைக்கதையுடன் படத்தை கேயார் இயக்கியிருப்பார்.
எம்ஜிஆர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு மிகவும் பொருத்தமாக இருந்த இந்த கதையில், விஜயகாந்த் தனது அற்புதமான நடிப்பால் முத்திரை பதித்திருப்பார்.
ஒரிஜினல் இந்தி படத்துக்கான க்ளைமாக்ஸ் 90 நாள்கள் வரை படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதே க்ளைமாக்ஸை மூன்றே நாள்களில் பக்காவாக தமிழில் படமாக்கி முடித்துள்ளனர்.
இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள்
இந்த படத்தில் இளையராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கும் விதமாக அமைந்திருந்தன. தர்மா என்ற பெயரை என்ற எஸ்பிபி குரலில் அறிமுக பாடல், இரு கண்கள் போதாது என்ற மெலடி, மனக்கு சந்தனமே என்ற டூயட் பாடல் ரசிகர்களை கவர்ந்தது.
விஜயகாந்த் என்றாலே கிராமித்து பின்னணி, பேமிலி செண்டிமென்ட் கதைகளில் நடிப்பவர் என்ற இமேஜ் இருந்த நேரத்தில் அதை உடைத்து கேங்ஸ்டராக அவர் நடித்தது சர்ப்ரைஸ், அவரது ரசிகர்களை கவர்ந்த அளவில் பொதுமக்களை பெரிதாக ஈர்க்கவில்லை. இதனால் படத்துக்கு விமர்சனங்களும் எழுந்தன.
இருப்பினும் விஜயகாந்த் நடித்த குறைவான ரீமேக் படங்களில் மாஸ் மசாலா அமசங்கள் நிறைந்த படமாக தர்மா இருந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்