வேட்டையன் தான் கடைசி படம்.. முடிவிற்கு வருகிறதா உதயம் சினிமா வரலாறு.. உண்மை என்ன?
சென்னையின் பிரபல திரையரங்குகளில் ஒன்றான உதயம் தியேட்டரில் வெளியிடப்படும் கடைசிப் படம் வேட்டையன் தான் என்ற தகவல் வெகுவாகப் பரவி வருகிறது. ஆனால் இதனை திரையரங்க நிர்வாகம் மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரபலமடைந்த தியேட்டர்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்கும் பெயர் உதயம் தியேட்டர். சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள இந்த தியேட்டரை தமிழ்நாட்டில் அறியாதவர்கள் என யாரும் இல்லை.
ஊரார் அறிந்த உதயம்
இந்த தியேட்டரில் படம் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என அனைவருக்கும் பரிட்சையமான பெயர். இந்த தியேட்டரின் பெயரை தெரிந்துகொள்ள நாம் சென்னைவாசியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
'உதயம் தியேட்டருல என் இதயத்த தொலச்சேன்' என்ற ஒற்றைப் பாடல் போதும், இந்த தியேட்டரின் புகழ் பாட. தமிழ் சினிமாவில் வெளியான எத்தனையோ படங்கள் இந்தத் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. எத்தனையோ சினிமா வரலாற்றில் இந்த தியேட்டர் தனக்கான பக்கத்தை ஒதுக்கியுள்ளது.
பரவிய வதந்தி
அப்படி இருக்கையில், இந்தத் தியேட்டரில் திரையிடப்படும் கடைசி படம் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகும் வேட்டையன் படம் தான் என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உதயம் தியேட்டர்.
1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் தியேட்டர் அசோக் நகரின் அடையாளமாகவே மாறிப்போனது. உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என 4 தியேட்டர்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கமாக சுமார் 40 ஆண்டுகள் பட்டையை கிளப்பி வந்தது. இந்த தியேட்டர் தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக மாற உள்ளது. இதனால், விரைவில் தியேட்டர் இடிக்கப்படும் என்ற செய்தி சில மாதங்களாகவே பரவி வருகிறது.
வேட்டையனே கடைசி
இந்த நிலையில் தான், த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அம்தாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாக உள்ள வேட்டையன் படம் தான் உதயம் தியேட்டரில் கடைசியாக திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்திற்கு பின் வேறு எந்த திரைப்படமும் திரையிடப்படாது. இதற்கான கோப்புகளில் உதயம் தியேட்டர் நிர்வாகம் கையெழுத்திட்டுவிட்டது என பல செய்திகள் உலா வரத் தொடங்கியது.
என்ன பிரச்சனை?
சுமார், 62,400 சதுர அடி (1.3 ஏக்கர்) பரப்பளவில் கட்டப்பட்ட இந்த திரையரங்கத்திற்கு மொத்தம் 53 பேர் பங்குதாரர்களாம். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 2009ம் ஆண்டே இந்த திரையரங்கத்தை விற்க முடிவு செய்திருந்தனராம். பின் கடந்த 2012ம் ஆண்டு பங்குதாரர்களில் ஒருவரான பரமசிவன் பிள்ளை 80 கோடி ரூபாய்க்கு இந்த திரையரங்கத்தை ஏலத்தில் சொந்தமாக்கி இருக்கிறார்.
இவர், சென்னையில் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வந்துவிட்டது. அதனால் உதயம் தியேட்டருக்கு வரும் லாபமம் குறைந்து வருகிறது எனக் கூறி, இந்த தியேட்டரை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற எண்ணினாராம். இதனால், இந்த தியேட்டர் விரைவில் இடிக்கப்பட்டு, 25 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடம் வர இருக்கிறது எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் தான் உதயம் தியேட்டரில் திரையிடப்படும் கடைசி படம். இதன் பின் எந்த திரைப்படங்களும் ஓடாது. வேட்டையன் படத்தின் வெற்றியைப் பொறுத்து தியேட்டர் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது. வேட்டையன் திரைபப்ட வெளியீட்டிற்குப் பின், சில திரைப்படங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். உதயம் தியேட்டரை மூடுவது குறித்து முடிவு செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகும். அதனால், அதுவரை தொடர்ந்து திரைப்படங்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
டாபிக்ஸ்