HBD Pandiarajan: நெத்தியடி காமெடி..நடிப்பிலும், இயக்கத்திலும் மக்களை சிரிக்க வைத்த பாண்டியராஜன் பிறந்தநாள் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Pandiarajan: நெத்தியடி காமெடி..நடிப்பிலும், இயக்கத்திலும் மக்களை சிரிக்க வைத்த பாண்டியராஜன் பிறந்தநாள் இன்று

HBD Pandiarajan: நெத்தியடி காமெடி..நடிப்பிலும், இயக்கத்திலும் மக்களை சிரிக்க வைத்த பாண்டியராஜன் பிறந்தநாள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 02, 2024 06:45 AM IST

நெத்தியடி காமெடி மூலம் நடிப்பிலும், இயக்கத்திலும் மக்களை சிரிக்க வைத்தவராக இருக்கும் பாண்டியராஜன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் காமெடி ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் மற்றும் நடிகராகவும் பாண்டியராஜன் வலம் வந்துள்ளார்.

HBD Pandiarajan: நெத்தியடி காமெடி..நடிப்பிலும், இயக்கத்திலும் மக்களை சிரிக்க வைத்த பாண்டியராஜன் பிறந்தநாள் இன்று
HBD Pandiarajan: நெத்தியடி காமெடி..நடிப்பிலும், இயக்கத்திலும் மக்களை சிரிக்க வைத்த பாண்டியராஜன் பிறந்தநாள் இன்று

சினிமா பயணம்

சென்னை சைதாப்பேட்டையில் பிறந்த பாண்டியராஜன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்குள் வந்து, துணை இயக்குநராக பணியாற்ற விரும்பினார். தமிழ் நாடு இசைக் கல்லூரியில் வயலின் பயின்ற இவர் 1977ஆம் ஆண்டு 'இசைச் செல்வம்' பட்டம் பெற்றார்.

தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா தூயவனிடம் உதவியாளராகச் சேர்ந்த பிறகு, ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'பொல்லாதவன்' திரைப்படத்தில் உதவி எழுத்தாளராகப் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புது ட்ரண்டை உருவாக்கிய கே.பாக்யராஜின் அறிமுகம் பாண்டியராஜனுக்குக் கிடைத்தது. பின்னர் பாக்யராஜின் உதவியாளரானார்.

பாக்யராஜுடன் 'மெளன கீதங்கள்', 'அந்த ஏழு நாட்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'விடியும் வரை காத்திரு, 'இன்று போய் நாளை வா' போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

முதல் படமே சூப்பர் ஹிட்

பிரபு, ரேவதி, கவுண்டமணி, ஜனகராஜ் பிரதான கதாபாத்திரத்தில் காதல் கலந்த பேமிலி ட்ராமா படமாக உருவாகியிருந்த கன்னிராசி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 1985இல் வெளியான இந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

அடுத்தாக அவர் இயக்கிய 'ஆண்பாவம்' அதே ஆண்டு இறுதியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு காமெடிக்கு ட்ரெண்ட் செட் அமைத்த படமாக மாறியது. ஆண்பாவம் படம் மூலம் நடிகராகவும் பாண்டியராஜன் அவதாரம் எடுத்தார். பாண்டியராஜனின் பெயரும் புகழும் பட்டிதொட்டியெங்கும் பரவியதோடு, ஆண்பாவம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 225 நாட்களுக்கும் மேலாக ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பாண்டியராஜன் படங்களில் வி.கே. ராமசாமி, ஜனகராஜ் என சில நடிகர்கள் தவறாமல் இடம்பிடித்து விடுவர்கள். இவர்கள் காம்போவில் பாண்டியராஜனின் காமெடி அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஹீரோவாக கலக்கிய பாண்டியராஜன்

1990களின் காலகட்டத்தில் முக்கிய ஹீரோவாக உருவெடுத்தார் பாண்டியராஜன். டைமிங், டயலாக் டெலிவரி என காமெடியில் கலக்கும் ஹீரோவாக இருந்த பாண்டியராஜன் பல காமெடி பஞ்ச் பேசி ரசிகர்களை ஈர்த்தார். கதாநாயகன் படத்தில் நான் பி.காம் ஃபர்ஸ்ட் கிளாஸ், ஊர தெரிஞ்சுகிட்டேன் படத்தில் நான் கந்தசாமி மகன், இவன் முனுசாமி மகன் போன்ற வயிற்றை புன்னாக்கும் விதமாக இவர் பேசிய சில கிளாஸ் வசனங்கள் நினைவி விட்டு நீங்காதவையாக இருக்கின்றன.இதுவரை 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

தொடர்ந்த காமெடி வேடங்களில் நடித்து வந்த பாண்டியராஜன், மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லத்தனம் மிக்க கதாபாத்திரத்தில் மீசை இல்லாமல் தோன்றி நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்.

கடைசியாக அவர் தனது மகன் ப்ருத்விராஜ் நடித்த கைவந்த கலை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மூலம் ப்ருத்விராஜ் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்துக்கு பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டில் பாண்டியராஜன் நடிப்பில் இப்போதைக்கு காதல், பிடி சார் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர், நடிகர் வெற்றிபெற்று தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவரும் தமிழக மக்களின் மனங்களில் ஒருவராக இருந்து வரும் பாண்டியராஜன் சினிமா பிரபலங்களில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் நபராக உள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.