HBD Vijayakumar: நான்கு தலைமுறை ஹீரோக்கள்..60 ஆண்டுகளை கடந்த சினிமா பயணம்! தமிழ் சினிமாவில் நாட்டாமை ஆக ஜொலித்தவர்-tamil film actor vijayakumar celebrating his 81st birthday today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Vijayakumar: நான்கு தலைமுறை ஹீரோக்கள்..60 ஆண்டுகளை கடந்த சினிமா பயணம்! தமிழ் சினிமாவில் நாட்டாமை ஆக ஜொலித்தவர்

HBD Vijayakumar: நான்கு தலைமுறை ஹீரோக்கள்..60 ஆண்டுகளை கடந்த சினிமா பயணம்! தமிழ் சினிமாவில் நாட்டாமை ஆக ஜொலித்தவர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 28, 2024 07:05 AM IST

நான்கு தலைமுறை ஹீரோக்கள் உடன் நடித்தவர், சகல விதமான கதாபாத்திரங்களிலும் தோன்றி நாட்டாமை ஆக தமிழ் சினிமாவில் ஜொலித்தவர் நடிகர் விஜயகுமார். இவரது சினிமா பயணம் 60 ஆண்டுகளை கடந்து தொடர்கிறது.

HBD Vijayakumar: நான்கு தலைமுறை ஹீரோக்கள்..60 ஆண்டுகளை கடந்த சினிமா பயணம்! தமிழ் சினிமாவில் நாட்டாமை ஆக ஜொலித்தவர்
HBD Vijayakumar: நான்கு தலைமுறை ஹீரோக்கள்..60 ஆண்டுகளை கடந்த சினிமா பயணம்! தமிழ் சினிமாவில் நாட்டாமை ஆக ஜொலித்தவர்

சினிமா மட்டுமல்லாமல், டிவி சீரியல்களிலும் தோன்றி நடிப்பில் முத்திரை பதித்தவராக இருந்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணம்

பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை தான் விஜயகுமார் பிறந்த ஊர். பஞ்சாட்சரம் என்ற இவரது ஒரிஜினல் பெயர் சினிமாவுக்காக விஜயகுமார் என மாற்றப்பட்டது.

1961இல் சிவாஜி கணேசன் - பத்மினி நடிப்பில் வெளியான ஸ்ரீவள்ளி திரைப்படம் தான் விஜயகுமார் நடித்த முதல் படமாகும். இந்த படத்தில் முருகனாக தோன்றிய அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்துக்கு பின்னர் மகாவீர பீமன், தாயே உனக்காக போன்ற படங்களில் நடித்தார்.

1967இல் வெளியான கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிக்க தேர்வு செய்யப்பட்டு பின்னர் அந்த ரோலில் சிவக்குமார் நடித்தார். இருப்பினும் அந்த படத்தில் கடவுள் கதாபாத்திரத்தில் சிறிய வேடத்தில் தோன்றினார்.

முதல் திருப்புமுனை

1973இல் தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான பொன்னுக்கு தங்க மனசு படத்தில் இளைஞராக தோன்றினார் விஜயகுமார். இது அவருக்கு திருப்புமுனை கதாபாத்திரமாக அமைந்தது. இந்த படத்திலும் விஜயகுமாருடன் இணைந்து சிவக்குமார் நடித்திருப்பார்.

பாலசந்தர் இயக்கத்தில் 1974இல் வெளியான அவள் ஒரு தொடர்கதை திரைப்படம், அவருக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்று தந்தது. இந்த படத்துக்கு பின்னர் அவரது சினிமா வாழ்க்கை என்பது ஏறுமுகமாக இருந்தது. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தோன்றி தனது திறமையான நடிப்பால் முத்திரை பதித்த நடிகரானார்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களிலும், மற்ற ஹீரோக்களாக ஜெயசங்கர் உள்ளிட்ட பலரின் படங்களிலும் வில்லன், குணச்சித்திர வேடங்களில் தோன்றினார். அதேபோல் ஹீரோவாக கிடைத்த வாய்ப்பையும் நன்கு பற்றிக்கொண்டார்

குறுகிய காலகட்டத்தில் 100 படங்களை கடந்து முக்கிய நடிகராக உருவெடுத்தார். அப்பா, மூத்த சகோதரர், போலீஸ் ஆபிசர், அரசு அதிகாரி, ஊர் பெரியவர் என்றால் விஜயகுமார் கூப்பிடுங்க என்கிற அளவில் கிராமத்து கதையானாலும் சரி, நகரத்து கதையானாலும் சரி அனைத்து விதமான பாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய நடிகராக உருவெடுத்தார்.

விஜயகுமார் பெஞ்ச் மார்க் படங்கள்

விஜயகுமார் என்றால் நினைவுக்கு வரும் விதமாக ஏராளமான படங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஹீரோக்களுடன் இவர் பெயரை பேசும் விதமாக பல்வேறு படங்கள் உள்ளன. அந்த வகையில் ரஜினியுடன் வணக்கத்துக்குரிய காதலியே தொடங்கி துடிக்கும் கரங்கள், ராஜாதி ராஜா, பாட்ஷா என சமீபத்தில் லிங்கா வரை, கமலுடன் நீயா, சவால், சிங்கார வேலன், விஜயகாந்துடன் சத்ரியன், சேதுபதி ஐபிஎஸ், சத்யராஜுடன் வால்டர் வெற்றிவேல், மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மற்றும் பிரபு இணைந்து நடித்த அக்னி நட்சத்திரம், விக்ரம் நடிப்பில் சாமி, அர்ஜுன் நடிப்பில் முதல்வன் என இவர் நடித்த படங்களை சொல்லிக்கொண்டே பேகலாம்.

சரத்குமாருடன் இவர் நடித்த சேரன் பாண்டியன், நாட்டாமை கதாபாத்திரங்கள் இவரது அடையாளமாகவே திகழ்ந்தன.

இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சன்டிவியில் ஒளிபரப்பான தங்கம், வம்சம் என 10க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். கிழக்கு சீமையிலே, அந்மந்தாரை ஆகிய படங்களுக்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதை வென்றுள்ளார். 

பெரிய குடும்பம்

விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என இரண்டு மனைவிகள். முத்துகண்ணுவுக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள். அதேபோல் சினிமா நடிகையான மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இவருக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என மூன்று பிள்ளைகள்.

இதில் அருண் விஜய் ஹீரோவாகவும், வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஹீரோயின்களாகவும் நடித்துள்ளார்கள். மகன் அருண் விஜய்யுடன் இணைந்து பாண்டவர் பூமி உள்பட 5 படங்களில் நடித்துள்ளார் விஜயகுமார்.

அரசியல் பயணம்

அதிமுக கட்சியின் உறுப்பினராகவும், நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வந்த விஜயகுமார், 2016இல் பாஜாவில் இணைந்தார். தற்போது பாஜவின் முக்கிய பேச்சாளார்களில் ஒருவராக இருந்து வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணை தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் தொடங்கி தொடங்கி ரஜினி - கமல், அஜித் - விஜய், சிம்பு - தனுஷ் என நான்கு தலைமுறை ஹீரோக்களுடன் நடித்தவரும், எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் தோன்றி நடிப்பில் முத்திரை பதித்தவருமான விஜயகுமாரின் 81வது பிறந்தநாள் இன்று.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.