HBD Director Bala: சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது வென்றவர்! மனித வாழ்வின் நிஜங்களை பிரதிபலிக்கும் இயக்குநர் பாலா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Director Bala: சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது வென்றவர்! மனித வாழ்வின் நிஜங்களை பிரதிபலிக்கும் இயக்குநர் பாலா

HBD Director Bala: சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது வென்றவர்! மனித வாழ்வின் நிஜங்களை பிரதிபலிக்கும் இயக்குநர் பாலா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 11, 2024 11:49 PM IST

தமிழில் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது வென்றவர் ஆக இருந்து வரும் இயக்குநர் பாலா, மனித வாழ்வின் நிஜங்களை பிரதிபலிக்கும் விதமாக தனது படைப்புகளை உருவாக்கி மக்கள் மத்தியில் தனித்துவமான இயக்குநர் என்ற பெயரெடுத்துள்ளார்.

மனித வாழ்வின் நிஜங்களை பிரதிபலிக்கும் இயக்குநர் பாலா
மனித வாழ்வின் நிஜங்களை பிரதிபலிக்கும் இயக்குநர் பாலா

இதுவரை பாலா தமிழில் இயக்கியிருக்கும் படங்கள் ஒன்பது தான். ஆனால் அவரது அத்துனை படைப்புகளும் எதாவதொரு வகையில் தாக்கத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியதாக இருந்துள்ளது. பத்தாவதாக அவர் இயக்கியிருக்கும் வணங்கான் என்ற படம் விரைவில் திரைக்கு இருக்கிறது.

குரு மீது தீராத பற்று

இயக்குநர் பாலுமகேந்திராவின் சிஷ்யரான பாலா தனது குரு மீது தீராத பற்று கொண்டவராக இருந்துள்ளார். அவரிடம் அலுவலக உதவியாளராக பணியாற்ற தொடங்கி, உதவி இயக்குநராக மாறி பின்னர் தனக்கென தனியொரு பாதையில் சினிமாவில் பயணிப்பவராக இருந்துள்ளார்.

குறிப்பாக பாலுமகேந்திராவின் மனைவியான அகிலா மீது தனியொரு பாசம் கொண்டவராக பாலா இருந்துள்ளார். பாலா என்று நம்மால் அறியப்படும் அவரது நிஜப்பெயர் பாலா பழனிசாமி. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே நாராயணதேவன்பட்டியில் பிறந்தாலும், அடிப்படையில் மதுரைகாரரான இவர் அந்த மண்ணில் இருந்து சினிமாவுக்கு வந்த படைப்பாளர்களில் இருந்து சற்று வித்தியாசமானவராக தனக்கென தனியொரு பெயரையும், புகழையும் பெற்றுள்ளார்.

தனித்துவ மேக்கிங்

தனது படங்களில் என சினிமாவுக்கான பார்முலாவுடன் கூடிய கதை, திரைக்கதை என்று இல்லாமல் தனித்துவமான கதாபாத்திரத்தின் வாழ்க்கையை கதையாக காண்பித்து மேக்கிங் செய்யு வித்தையால் தனித்துவ இயக்குநராக பார்க்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் விக்ரமுக்கு சேது, சூர்யாவுக்கு நந்தா, அதர்வாவுக்கு பரதேசி என அற்புத படைப்புகளால் பிரேக் கொடுத்தார்.

தனது கதைக்காகவும், தான் எடுக்க விரும்பிய காட்சிக்காகவும் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாத இயக்குநராகவும், பிடிவாதமாக அதை நடிகர்களிடம் எப்படியாவது வாங்கி விடும் இயக்குநராகவும் இருந்து வருகிறார். சினிமா என்கிற கலை மீதான இவரது இந்த அதி தீவிர காதல் தான், 56வது தேசிய திரைப்பட விருதுகளில் இவருக்கு நான் கடவுள் படத்துக்காக சிறந்த இயக்குநர் தேசிய விருதை பெற்று தந்தது.

தமிழ் சினிமாவில் இதுவரை நான்கு பேர் மட்டுமே சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றுள்ளனர். முதன் முதலில் இயக்குநர் அகத்தியன் காதல் கோட்டை படத்துக்காகவும், இரண்டாவதாக பி. லெனின் ஊருக்கு நூறு பேர் படத்துக்காகவும் வென்றனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது தமிழ் இயக்குநராக, சிறந்த இயக்குநர் தேசிய விருது வென்றது பாலாதான். அவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் படத்துக்காக வெற்றிமாறன் வென்றார்.

சர்ச்சை நாயகன்

சினிமா ஷுட்டிங்கில் ரியாலிசம் என்ற பெயரில் நடிகர், நடிகைகளை அடித்து, வதைப்பது, துன்புறுத்துவது, பிதாமகன் படத்தின் போது நடிகை லைலாவுடன் காதல், குற்றப்பரம்பரை நாவலை படமாக்குவதில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் சண்டை, மனைவியுடன் விவாகரத்து என பல சர்ச்சைகள் பாலாவை சுற்றி வந்த போதிலும் வழக்கமான அமைதியை வெளிப்படுத்தி கடந்து சென்று தனது படைப்பின் மீது மட்டும் கவனம் செலுத்துபவராக இருந்து வருகிறார்.

விக்ரமுக்கு பிரேக் கொடுத்த பாலா, அவரது மகனான துருவ் விக்ரமை அறிமுகப்படுத்தும் விதமாக தெலுங்கில் சூப்பர்ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் படத்தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காமல் போக, படத்தை ரிலீஸ் செய்யாமல் மீண்டும் வேறு இயக்குநரை வைத்து ரீ-ஷுட் செய்து வெளியிட்டனர். இது பாலாவின் படைப்பு மீது நேரடியாக முன் வைக்கப்பட்ட விமர்சனமாக இருந்தது.

ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் தனது அடுத்த படைப்பான வணங்கான் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரசிகர்கள் படத்தை காண ஆவலாக காத்திருக்க வைத்துள்ளார். அந்த வகையில் பாலா தனித்துவம் மிக்கவர் என்ற பேச்சை நிஜப்படுத்தும் விதமாக எந்த தடைகளையும் கடந்து, எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் தான் பெரிதாக மதிக்கும் சினிமா என்ற கலைக்காக உண்மையுடன் உழைக்கும் கலைஞனாக இருந்து வருகிறார். மனித வாழ்வின் நிஜங்களை பிரதிபலிக்கும் இயக்குநராக திகழும் பாலாவுக்கு இன்று 58வது பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.