HBD Nagesh: தேகமோ முகமோ முக்கியமில்லை... வகுத்த வியூகமே முக்கியம்... நாயகனுக்கெல்லாம் நாயகனின் கதை இது!
HBD Nagesh: தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழியில் 1000த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல்வேறு புதுமைகளை சினிமாவிற்குள் புகுத்திய மாபெரும் கலைஞன் நடிகர் நாகேஷ். அவர் தன் வாழ்நாளில் சந்தித்த அனுபவங்களும், வலிகளும், சந்தோஷங்களும் ஏராளம். அதுகுறித்த தொகுப்பு இங்கு காணலாம்.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகன் என்ற அடைப்புக்குள் மட்டுமே பொருத்திவிட முடியாத அசாத்திய கலைஞன் நடிகர் நாகேஷ். அவர் காமெடி நடிகர் என்றால் காமெடியன், குணச்சித்திர நடிகர் என்றால் குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என்றால் கதாநாயகன், வில்லன் என்றால் வில்லன், செத்த பிணம் என்றால் அதுவும் தான்... நண்பனாக, அண்ணனாக, தம்பியாக, மச்சானாக, தந்தையாக, தாத்தாவாக, மூச்சு முட்ட சிரிக்க வைக்கும் நடிகனாக, தேம்பித் தேம்பி அழவைக்கும் சோக உருவமாக, பார்த்தவுடன் கொலை நடுங்கும் வில்லனாக, குழைந்து குழைந்து காரியம் சாதிக்கும் நயவஞ்சகனாக, உயிரற்றவனாக, உயிர் மறைந்தாலும் கலை உலகம் தேடி உயிர்ப்பளிக்கும் மங்காத ஆளுமையாக, ஆணாக, பெண்ணாக என இவர் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. இந்த உலகை விட்டு மறைந்தாலும், தொழில்நுட்ப உதவியின் மூலம் மீண்டு(ம்) தன் கலைத் தாகத்தை தீர்த்துக் கொண்டவர் நடிகர் நாகேஷ்.
நடிப்பில் ஆர்வம்
ஆண்டுகள் பல கடந்தும் இன்றளவும் துளி மரியாதை குறையாத மனிதர்களை தன்னைச் சுற்றி வைத்திருக்கும் இவர், மைசூரை பூர்வீகமாகக் கொண்டவர். அப்போது, ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் தாராபுரத்தில் 1933ம் ஆண்டு பிறந்தார். செயூர் கிருஷ்ண நாகேஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்ட நாகேஷ், பள்ளி காலம் தொட்டே நடிப்பில் ஆர்வம் கொண்டவர். இதனால், தன் பள்ளி, கல்லூரி காலத்தில் தன் அசாத்திய நடிப்பால் பலரையும் கவர்ந்தார். இதனால், சினிமாவிற்கு வரும் முன்பே நடிகர் எம்ஜிஆரிடம் பாராட்டையும் பெற்றார்.
தேகம் முக்கியமல்ல
நாட்கள் இப்படி செல்ல, தன் கல்லூரி காலகட்டத்தில் தொடர்ந்து 3 முறை அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அவரின் தேகம் முற்றிலும் மாறிப்போனது. ஒடிசலான உடல், புள்ளிகள் நிறைந்த முகம் என சினிமாவில் நடிகராவதற்கான எந்த முக அமைப்பும் இல்லாமல் சினிமா கனவுடன் வீட்டை விட்டு ஓடிவந்தார். அந்த சமயத்தில் இவருக்கு ரூம் மேட்டாக அறிமுகம் ஆனவர் தான் பாடலாசிரியர் வாலி. வறுமையின் பிடியில் சிக்கியிருந்த இருவரும் சினிமாவில் சிறு சிறு பணி செய்து முன்னேறியவர்கள் தான்.