இந்திய சினிமாவின் நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்தவர்! நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
இவரின் ஒவ்வொரு முக பாவனைகள் மட்டுமே போதும் அந்த காட்சியின் தாக்கத்தை நம்மூள் கடத்துவதற்கு. இந்த உன்னதமான கலைஞர் இன்று அவரது 55 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தன் நிறத்தால் ஒடுக்கப்பட்டாலும், நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியவர் தான் நடிகை நந்திதா தாஸ், இந்தியர்கள் நிற வெறியர்கள் அது அவர்களிடம் வேரூன்றி கிடக்கிறது என வெளிப்படையாக கூறியவர். இந்திய சினிமாவில் காலம் காலமாக கடைபிடித்து வரும் கதாநாயகிக்கு என இருந்த கட்டமைப்பை உடைத்த ஒரு சிலரில் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியவராக இருக்கிறார் நந்திதா. இவரின் ஒவ்வொரு முக பாவனைகள் மட்டுமே போதும் அந்த காட்சியின் தாக்கத்தை நம்மூள் கடத்துவதற்கு. இந்த உன்னதமான கலைஞர் இன்று அவரது 55 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தமிழில் நந்திதா
தமிழ், தெலுங்கு, உருது, ஒரியா, கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி உட்பட 10 க்கும் மேற்பட்ட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த மாபெரும் தனது திரை பயணத்தில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதிலும் தமிழ் மொழியில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டாள், விஷ்வ துளசி மற்றும் நீர்பறவை என 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த 4 படங்களே இவரை தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தது.
இயக்குனர் தங்கர் பச்சானின் அழகி படத்தில் இவர் நடித்த தனலட்சுமி கதாபாத்திரத்தில் இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு கச்சிதமாக பொருந்தி போக முடியாது. வாழ்க்கையில் தோற்று இருக்கும் சமயத்தில் பழைய காதலனை சந்திக்கும் போதும், கற்பனையாக கனவு காணும் போதும் என பார்க்கும் ரசிகர்களின் மனதை கலங்க வைத்திருப்பார். கன்னத்தில் முத்தமிட்டாள் இவருக்கு கிடைத்த மற்றொரு அல்வா, நாட்டின் விடுதலைக்காகவும் இறந்த கணவனிற்காகவும் பெற்ற குழந்தையை விட்டு செல்வார். அதே குழந்தை என்னை ஏன் விட்டு சென்றீர்கள் என கேட்கும் போது அவரது பரிதவிப்பு போதும் அவரது சிறந்த நடிப்பிற்கு. நீர் பறவை படத்தில் முதலில் நந்திதாவை ஹீரோவின் தாய் கதாபாத்திரத்தில் தான் நடிக்க வைக்க இருந்தார்களாம். பின்னர் அதனை விட அழுத்தமாக இருக்கும் எனக் கூறி ஹீரோயினின் வயதான பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.
