HBD Bhavana: சித்திரம் பேசுதடியில் அறிமுகம்.. தீபாவளி தந்த உச்சம்.. பாலியல் தொல்லையிலிருந்து மீண்ட நம்பிக்கை நடிகை பாவனா
HBD Bhavana: சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் அறிமுகமாகி, தீபாவளி திரைப்படத்தில் உச்சம் அடைந்த நடிகை பாவனா, பாலியல் தொல்லையிலிருந்து மீண்ட நம்பிக்கை நடிகையாகவும் திகழ்கிறார். அவருக்கு இன்று பிறந்த நாள்.
HBD Bhavana:’தீபாவளி’ படத்தில் வரும் குறும்புத்தன்மையை இயல்பிலேயே கொண்டவர், நடிகை பாவனா. இவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவரை குறித்து நம்மிடம் அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
நடிகை பாவனாவின் ஆரம்பகட்ட வாழ்க்கை
கார்த்திகா மேனன் என்று இயற்பெயர் கொண்ட நடிகை பாவனா ஜூன் 6ஆம் தேதி 1986ஆம் ஆண்டு, கேரளா மாநிலத்தின் திருச்சூரில் பிறந்தார். இவரது தந்தை ஜி.பாலச்சந்திரன் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளர் ஆவார்.
நடிகை பாவனாவின் திரைப்பிரவேசம்:
சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நடிகை பாவனா, தனது 16ஆவது வயதில்,2002ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படமான ‘நம்மள்’ என்னும் மலையாளப் படத்தில் நடித்தார். இதற்காக, தான் படித்த 12ஆம் வகுப்பினை நிறுத்திவிட்டார்.
பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய சினிமாக்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, நடிகை அமலாவை பார்த்த பிறகு தானாம். அவரை போன்றே நடித்து அசத்தக்கூடியவராம்.
தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகை பாவனா:
நடிகை பாவனா தமிழில் முதன்முறையாக நடித்த படம் 2006ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ’சித்திரம் பேசுதடி’. அதைத் தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி படத்தில், இவர் நடித்த சுசி என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
நடிகை பாவனாவின் திருமணம்:
10 வருட நீண்ட பயணத்தில் 80க்கும் மேற்பட்ட படங்கள் வரை நடித்துள்ளார். பாவனா, 2018ஆம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ரோமியோ படம் மூலம் இருவரும் அறிமுகமாகி, 6 ஆண்டுகள் டேட்டிங் செய்து திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்:
இவர் கடந்த 2017ஆம் ஆண்டு சில மர்மக் கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது வரை விசாரணை நடந்து கொண்டுவருகிறது. இவருக்காக தமிழ் சினிமாவின் பலரும் ஆதரவாக நின்றனர்.
பின்னர் அவரை கடத்தியவர்களில் ஒருவர் சிக்கிய நிலையில் மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர் தீலிப் தான் கடத்த சொன்னதாகக் கூறினார். இவர் தான் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் ஆவார். இப்பிரச்னைக்குப் பின் திலீப்புக்கும் மஞ்சு வாரியருக்கும் இடையில் விவகாரத்து நடந்தது. பிறகு தீலிப், காவ்யா மாதவனை திருமணம் செய்தார்.
காவ்யா மாதவன், பாவனா, மஞ்சு வாரியர் மிகவும் நெருக்கமான தோழிகள் ஆவர். மஞ்சு வாரியருக்கு தெரியாமல் காவ்யா மாதவன் - திலீப்பின் காதல் நடந்த நிலையில், அதை பாவனா சென்று, தோழி மஞ்சு வாரியரிடம் சொல்லி உள்ளார். அதனால் தான் திலீப் அவரை ப்ளான் செய்து கடத்தி, துன்புறுத்தச் சொன்னதாக கேரளாவில் பேசப்படுகிறது.
முன்னதாக காரில் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசிய நடிகை பாவனா, ”என் கண்ணியம் சுக்குநூறானது. தன்னம்பிக்கையால் தான் தைரியமாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் தொடர்ந்து போராடுவேன். என் கணவரும் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு ஆறுதலாக இருப்பார்கள். இருந்தும் நான் தனிமையில் இருப்பது போலவே உணர்கிறேன்.
2020ஆம் ஆண்டு 15 நாட்கள் நான் நீதிமன்றத்துக்குச் சென்றேன். காலை முதல் மாலை வரை அங்கேயே அமர்ந்து என் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க 7 வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகள் எல்லாத்திற்கும் பதில் கூறினேன். அந்த சம்பவத்திற்குப் பிறகு மலையாளத் திரையுலகில் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன” என வேதனைத் தெரிவித்தார்.
இருந்தாலும் அனைத்தையும் தனது துணிச்சலான தன்னம்பிக்கையால் கையாண்டு, சாண்டல்வுட்டில் தொடர்ந்து நடித்து வரும் தன்னம்பிக்கை நாயகி பாவனாவுக்கு இன்று பிறந்த நாள். அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!