அழகிய தீயே மூலம் அறிமுகம்.. சேரனின் ஆஸ்தான நாயகி.. கலைஞரின் வசனத்தில் நடித்த மலையாள மங்கை நவ்யா நாயரின் கதை
அழகிய தீயே மூலம் அறிமுகம்.. சேரனின் ஆஸ்தான நாயகி.. கலைஞரின் வசனத்தில் நடித்த மலையாள மங்கை நவ்யா நாயரின் கதையை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

Navya Nair: அழகான கண்கள், உயரத்துக்கு ஏற்ற சரியான எடை, பார்த்தவுடன் பிடித்துப்போகும் பெர்ஃபாமன்ஸ் என தமிழில் சில படங்களில் நடித்து முத்திரை பதித்தவர், நடிகை நவ்யா நாயர். அவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாளில் அவரைப் பற்றி நினைவுகூர நம்மிடம் எக்கச்சக்கமான ஞாபகங்கள் உண்டு. அதைப் பற்றி பார்ப்போம்.
யார் இந்த நவ்யா நாயர்?:
நவ்யா நாயரின் இயற்பெயர் தான்யா வீணா. இவர் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிபாட் என்னும் ஊருக்கு அருகிலுள்ள முத்துக்குளத்தில் 1985ஆம் ஆண்டு இதே தேதியில் அதாவது அக்டோபர் 14ஆம் தேதி பிறந்தவர். அவரது தந்தை ராஜூ, ஒரு தகவல் தொடர்புத்துறையினைச் சார்ந்தவராகவும், அவரது தாய் வீணா பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றினர். மலையாள சினிமாவில் இயக்குநர் கே.மது இவரது தாய் மாமாவாகும். நடிப்பதற்கு முன்பு, பரதநாட்டியத்தில் தேர்ந்த பரதக்கலைஞராக இருந்தார், நவ்யா நாயர். 2001ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நவ்யா, மும்பையினைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனனை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்னும் மகன் ஒருவர் உள்ளார்.
நவ்யா நாயரின் திரைப்பிரவேசம்:
மலையாள இயக்குநர் சிபி மலையில், கடந்த 2001ஆம் ஆண்டு தனது இஷ்டம் என்னும் மலையாளத் திரைப்படத்தில் நடிகர் திலீப்பின் கதாநாயகியாக முதன்முதலில் சினிமாவில் நவ்யா நாயரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் சினிமாவில் தான்யா என்னும் இயற்பெயரை மாற்றிவிட்டு, நவ்யா நாயர் எனப்பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் நிறைய மலையாளப் படங்களிலும் சில பெயர் சொல்லும் தமிழ்ப் படங்களிலும் நடித்துப் பெயர் பெற்றார், நடிகை நவ்யா நாயர்.