கடைக்குட்டி பெண்.. இரு அண்ணன்கள்.. வேறு வேறு மதம், மாநிலம்.. முகுந்தை கரம் பிடிக்க இந்து நடத்திய போர்! - அமரன் காதல் கதை
அமரன் படத்தின் காதல் கதையை முகுந்தின் மனைவியான இந்து அந்தப்படம் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சியில் மனமகிழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘ரங்கூன்’ புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அமரன்’. India's Most Fearless: True Stories of Modern Millitary புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று அடிப்படையாகக்கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் முகுந்தின் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய்பல்லவி நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் புரோமோஷன் சம்பந்தமான நிகழ்ச்சி, மலேசியாவில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் இந்து ரெபேக்கா கலந்து கொண்டார். அதில் அவர் ராணுவ வீரரான முகுந்தை திருமணம் செய்வதற்கு வீட்டில் எழுந்த எதிர்ப்பை சமாளித்த கதை குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “என்னுடைய வீட்டில் நான் கடைக்குட்டி பெண். எனக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் என்னை விட கிட்டத்தட்ட ஏழு, எட்டு வயது பெரியவர்கள். அதனால், நான் முகுந்தை கல்யாணம் செய்வதற்கு, கிட்டத்தட்ட 3 அப்பாக்களை சமாதானம் செய்ய வேண்டியிருந்தது. வீட்டில் ஒரே பெண் பிள்ளை என்பதால் சிறு வயதில் இருந்தே என்னை மிகவும் பாசமாக வளர்த்தார்கள். அதனால், என் வீட்டில் உள்ளவர்கள் நான் ஒரு ராணுவ வீரரை கல்யாணம் செய்து கொண்டால், என்னுடைய வாழ்க்கை என்ன ஆகும் என்பது குறித்து மிகவும் கவலைப்பட்டார்கள்.
மிகப்பெரிய அச்சம்
அடுத்த பிரச்சினை, நானும், முகுந்தும் வேறு வேறு மதம். வேறு வேறு மாநிலம். மொழியிலும் எங்களுக்குள் வித்தியாசம் இருந்தது. என்னுடைய அப்பா ஒரு டாக்டர். அவருக்கு என்னை முகுந்திற்கு கொடுப்பதில் மிகப்பெரிய அச்சம் இருந்தது. அதனால், என்னுடைய அப்பா எங்களது கல்யாணத்திற்கு அவ்வளவு சீக்கிரமாக சம்மதிக்கவில்லை. அவர் மிக நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டார். எங்களுடைய காதலுக்காக நாங்கள் வீட்டில் நடத்திய போர் கடினமானதாக இருந்தாலும், அந்த காத்திருப்பு உண்மையில் எங்களுக்கு நல்லதாகவே அமைந்தது.
காத்திருப்பு நல்லதாக அமைந்தது
ஆம், அந்த காத்திருப்பு நாங்கள் இன்னும் அதிக புரிதலோடு மாறுவதற்கு உதவிகரமாக இருந்தது. அந்த புரிதலை அவர்களுக்கு உணர்த்தவும் எங்களால் முடிந்தது. முதல் சந்திப்பில் என் அப்பாவிடம் வந்து பேசிய முகுந்த், அவ்வளவு சிறப்பாக பேசவில்லை. முகுந்திடம் ஒரு பழக்கம் உண்டு. அவன் பக்கம் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயம் இருந்தால், அவன் அதனை சரியாக்க முயற்சிகளை எடுப்பான். அந்த வகையில், அந்த சந்திப்பிற்கு பிறகு அவன் அவனை மெருகேற்றுவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டான்.
பதவியில் நல்ல உயரத்தை அடைந்தான். அதன் பின்னர் அவன் என்னுடைய அப்பாவை வந்து பார்த்தான். இதற்கிடையே, இந்திய கப்பற்படையில் இருக்கும் என்னுடைய மாமா வந்தார். அவர் முகுந்த் நல்ல பையன். ராணுவத்தில் அவனுடைய செயல்பாடு நன்றாக இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். அப்புறம் என்ன கல்யாணம் செய்து கொடுக்கலாமே என்று காதலுக்கு சப்போர்ட் செய்தார். அதன் பின்னர், என்னுடைய குடும்பம் எங்களுடைய கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டது.” என்று பேசினான்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்