Sivaji Ganesan: ‘வசனத்திற்கு தவித்த சிவாஜி’ நம்ப முடிகிறதா? நடந்தது இது தான்!
சிஷ்யன் பாக்யராஜாவது சிவாஜிக்கு ஒன்றிரண்டு வசனம் குடுத்திருப்பார். ஆனால், 'முதல் மரியாதை' படத்தில் ஒரு வசனம் கூட குருநாதர் பாரதிராஜா, சிவாஜிக்கு கொடுத்திருக்க மாட்டார்.
முதல் படத்திலேயே மிக நீளமான வசனங்களை பேசி பெயர் பெற்றதாலோ என்னவோ, சினிமாவில் வசனங்கள் என்றால் சிவாஜியே அழைக்கப்பட்டார்.
சிவன் துவங்கி வீரபாகு வரை கடவுள்களையும் புராணங்கள், வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட கதாபாத்திரங்களை பார்த்தது, இவர் வடிவில்தான்.
'தெய்வமகன்', 'பாசமலர்', 'படிக்காத மேதை', 'திரிசூலம்', 'புதியபறவை' என ஏராளமான படங்களில் நடிப்புக்காகவே கொண்டாடப் படுபவர்.
நடிப்பு ஒருபுறம் என்றால் வசனம் தான் சிவாஜியின் மற்றொரு அடையாளம். 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'திருவிளையாடல்', 'மனோகரோ' மாதிரியான படங்கள் எல்லாம் வேற லெவல்.
உண்மையில், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் எம்ஜிஆருக்கானது. ஆனால் கடைசியில் இறப்பது போன்ற காட்சி கடடாயம் என்பதால் எம்ஜிஆர் அதில் நடிக்கவில்லை. மதுரை வீரனுக்கு பிறகு அதை கொள்கையாகவே எம்ஜிஆர் வைத்திருந்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்', சிவாஜியால் வசன காவியமானது. எம்ஜிஆர் நடித்திருந்தால் அது வேறு விதமாகி இருந்திருக்கும்.
நிற்க...
இப்படி வசனத்தாலேயே தூள் கிளப்பிய சிவாஜி, 1984ல் வெளியான 'தாவணிக் கனவுகள்' படத்தில் ஸ்கிரிப்டுக்காக தவித்திருக்கிறார். துணை இயக்குநர்களிடம் வசன பேப்பர் கேட்பாராம். ஆனால், முன்கூட்டியே ஸ்கிரிப்ட் எழுதி வசனத்தை மனப்பாடம் செய்வது கே.பாக்யராஜ் ஸ்டைல் கிடையாது. எல்லாமே ஷூட்டிங்கில்தான். அப்படித்தான் சிவாஜிக்கும். அதுவும் ஒன்றிரண்டு வசனங்கள் தான் இருக்கும்.
இந்த படத்தில், எக்ஸ் மிலிட்டரி மேனான சிவாஜி, சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருப்பார். நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக, வேலையில்லாத வாலிபராக சைக்கிள் கடையின் எதிர் வீட்டில் வசிப்பவராக பாக்யராஜ். இந்த படத்தில் சிவாஜியை தனக்கு இணையாக ஒரு காமெடியனாகவே மாற்றி இருப்பார், பாக்யராஜ்.
படம் சூப்பர்ஹிட். "எப்பிடிடா... இப்பிடி படம் எடுக்கிறீங்க. ஹிட் குடுக்கிறீங்க..."ன்னு தன்னோட நீண்ட வசனம் பேசிய சினிமா அனுபவத்தோடு முடிச்சிப் போட்டு ஆச்சரியப்பட்டிருக்கார், சிவாஜி.
இதுக்கு அடுத்த வருடமே 1985ல் பாரதிராஜாவின் 'முதல் மரியாதை' படம். சிஷ்யன் பாக்யராஜாவது சிவாஜிக்கு ஒன்றிரண்டு வசனம் குடுத்திருப்பார். ஆனால், 'முதல் மரியாதை' படத்தில் ஒரு வசனம் கூட குருநாதர் பாரதிராஜா, சிவாஜிக்கு கொடுத்திருக்க மாட்டார்.
"சும்மா இப்பிடி அப்பிடி நடங்கண்ணே போதும். இப்பிடி பாருங்க.. இந்தப் பக்கமா போங்க்ணே.."ன்னு பெரிதாக வசனமே இல்லாமல் சிவாஜியின் உடல், முக அசைவுகளைக் கொண்டே அந்த படத்தை ஹிட்டாக்கி இருப்பார் பாரதிராஜா.
"சிஷ்யனாவது ஏதாவது டயலாக் குடுத்தான். நீ அது கூட தரலியேப்பா..."ன்னு பாரதிராஜா கிட்ட சலிச்சிகிட்ட சிவாஜி, அந்த படம் முழுமையானதும், "அட... இது தெரியாம இத்தன வருஷமா மூச்சப் பிடிச்சி வசனம் பேசி நடிச்சிருக்கேனப்பா..."ன்னாராம்.
பாடல்களுக்காகவும் கொண்டாடப்படும் 'முதல் மரியாதை'யில், சிவாஜியின் மனைவியாக வரும் வடிவுக்கரசி முழம் முழமாக வசனம் பேசுவார். கிராமத்து சொல்வடயில் கழுவி கழுவி ஊற்றுவார். ஆனால், சிவாஜிக்கு ஒரு வார்த்தை கூட வசனம் இருக்காது...! முக பாவனை மட்டுந்தான்.
இந்த படத்தில், "சாமி எனக்கு ஒரு உண்ம தெரியணும்..." என்ற டயலாக் நல்ல பேமஸ்... ஆனால், அது சிவாஜிக்கு அல்ல... சிவாஜியை சந்திக்கும் மற்றொரு கேரக்டருக்கானது...!
சிவாஜின்னதும் அவரது வசனங்களையே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது, இந்த ரெண்டு படங்களும் தான் எனக்கு நினைவுக்கு வருது!
கட்டுரையாளர்: ரவீந்திரன் வைகுண்டம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்