Surieyan: "ஸ்டார்ட் மியூசிக், அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..!" சரத்குமாருக்கு சோலோ ஹீரோவாக முதல் ஹிட் கொடுத்த படம்
ஸ்டார்ட் மியூசிக், அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என மறக்க முடியாத கவுண்டமணியின் கிளாசிக் காமெடியுடன், சரத்குமாருக்கு சோலோ ஹீரோவாக முதல் ஹிட் கொடுத்த படம் ஆக சூரியன் உள்ளது.
தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த சரத்குமார் சோலோ ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் சூரியன். வசந்தகால பறவை வெற்றிக்கு பின்னர் இயக்குநர் பவித்ரன் - சரத்குமார் மீண்டும் இணைந்து சூரியன் படத்தை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கி கமர்ஷியல் ஹிட்டை கொடுத்தனர்.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இந்த படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். படத்தில் ஹீரோயினாக ரோஜாவும், காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் கவுண்டமணியும் நடித்திருப்பார்கள்.
மனோரமா, ராஜன் பி தேவ், பாபு ஆண்டனி, கிட்டி உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
நேர்மையான போலீஸ் அதிகாரி பற்றி கதை
போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமார் மீது மந்திரியை சுட்டு கொலை செய்யும் பலி விழுகிறது. இதிலிருந்து தப்பித்து வேறொரு ஊருக்கு செல்லும் சரத்குமார், அங்கு இருந்தபடியே மந்திர கொலைக்கான பின்னணி காரணத்தை கண்டறிந்து தான் குற்றமற்றவன் என்பதை நிருபிப்பது தான் படத்தின் ஒன்லைன்.
சரத்குமாரின் வளர்ப்பு அம்மாவாக மனோரமா, அவருக்கு அண்ணன் போல் நெருக்கமாக பழகும் கேரக்டரில் கவுண்டமணியும் நடித்திருப்பார்கள்.
முதலில் சரத்குமாருடன் மோதலில் ஈடுபடுவதும், பின்னர் அவரை உருகி காதலிப்பதும் என கமர்ஷியல் பட ஹீரோயின் கதாபாத்திரத்தை ரோஜா சிறப்பாக செய்திருப்பார்.
வில்லனாக வரும் பாபு ஆண்டனி க்ளைமாக்ஸில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி மிரட்டலான கேரக்டரில் தோன்றியிருப்பார்.
திகட்டாத கவுண்டமணி காமெடி
கமர்ஷியல் படத்துக்கு உண்டான விறுவிறுப்பான திரைக்கதை, ஆக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகள், பாடல் என படம் ரசிக்கும் விதமாக இருக்கும்.
படத்தின் இன்னொரு ஹீரோவை போல் கவுண்மணியும், அவரது காமெடி காட்சிகளும் இடம்பிடித்திருக்கும். அவர் பேசும் அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா, ஸ்டார்ட் மியூசிக், நான் ஒரே பிஸி, காந்தக்கண்ணழகி போன்ற வசனங்களும், காமெடிகளும் திகட்டாத அளவில் இன்று வரையில் சிரிப்பை வரைவழைத்து வயிற்றை புண்ணாக்கும் காட்சிகளாக இருக்கின்றன.
லாலாக்கு டோல் டப்பி என்ற அறிமுக பாடலில் பிரபு தேவா, நடிகை விஜி கேமியோ பாத்திரத்தில் தோன்றியிருப்பார்கள். அதேபோல் சிறந்த மெலடிகாளாக பதினெட்டு வயது, கொட்டுங்கடி கும்மி பாடலும், மன்னாதி மன்னர்கள் என எஸ்பிபி குரலில் சோகமான பாடலும், தூங்கு மூஞ்சி என்ற பெப்பியான பாடலும் படத்தில் இடம்பிடித்துள்ளன.
பாடல்களின் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் விதமாக அமைந்திருந்தது. பதினெட்டு வயது பாடல், தமிழ் பக்தி பாடலான கந்த சஷ்டி கவசம் மெட்டில் அமைந்திருக்கும்.
சரத்குமாருக்கு முதல் சோலோ ஹிட்
இந்த படத்துக்கு முன்பு வரை வில்லன், குணச்சித்திரம், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என நடித்து வந்த சரத்குமாருக்கு, சூரியன் படம் சோலோ ஹீரோவாக முதல் சூப்பர் ஹிட் அளித்தது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் திரைப்படங்களுக்கான ட்ரெண்ட் செட்டராக இருந்த சூரியன் படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்