Story of Song :அம்மா இறந்து ஒரு மாதம் தான்.. வாலி எழுதிய பாடல்.. வியந்த எம்எஸ்வி.. பழகி வந்த புதிய சுகம் பாடல்!
இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்ற பழகி வந்த புதிய சுகம் பாடல் உருவான கதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இதயத்தில் நீ. இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற பழகி வந்த புதிய சுகம் பாடல் உருவான கதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
"பழகி வந்த புதிய சுகம்
பாதியிலே முடிந்தாலும்
எழுதி வைத்த ஓவியம் போல்
இருக்கின்றாய் இதயத்தில் நீ
இதயத்தில் நீஈ
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்
இதயம் என்றொரு இடம் இருந்தால்
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்
இதயம் என்றொரு இடம் இருந்தால்
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்
இன்பம் என்றொரு வழி நடந்தால்
இதயம் என்றொரு இடம் இருந்தால்
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்
துன்பம் என்றொரு ஊர் போகும்"
எம்எஸ்வி இசையில் வாலி வரிகள் எழுத சுசீலாவின் இனிமையான குரலில் அமைந்த அற்புதபாடல் தான் இது. இந்த பாடல் உருவான விதம் குறித்து வாலி ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். அதில், “என்னை மாறன் என்ற கதையாசிரியர் தான் முதலில் முக்தா சீனிவாசனிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது இதயத்தில் நீ படபிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பாளார். அவரிடம் சீனிவாசன் எனக்கு தெரிந்த வாலி என்ற ஒரு பையன் இருக்கான் அவனுக்கு ஒரு பாடல் கொடுக்கலாம் என கேட்டுள்ளார். இதற்கு எம்எஸ்வி நாம் ஏற்கனவே பிஸியா இருக்கோம் புது ஆள் போட்டு பாடல் தாமதம் ஆனால் பிரச்சனை ஆகிவிடும் என்று சொல்லிவிட்டார். பின்னர் திடீர்னு என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னை நாளைக்கு வர சொல்லிவிட்டார். அடுத்த நாள் கார் என்னை அழைத்து செல்ல வீட்டுக்கு வந்தது.
பின்னர் ஸ்டியோ சென்று சீனிவாசனை சந்திக்கிறேன். அவர் எனக்கு இப்படத்தில் நாயகி எம்ராய்டிங் போட்டுக் கொண்டு இருக்கிறார். அவரை பார்த்து நாயகன் பாடல் பாடுகிறார் இதுதான் காட்சி. இது ஒரு காதல் பாடல். இதற்கு நீ நாளை பல்லவி எழுதி கொண்டுவா எம்எஸ்வியிடம் காட்டுவோம் அவர் ஓகே சொல்லிவிட்டார் என்றால் வைத்துக்கொள்ளலாம் இல்லை என்றால் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார். நீ என் சொந்தகாரன் என சொல்லி அவரிடம் பேசி பார்க்கிறேன் என அவர் சொன்னார். நான் அதற்கு மறுத்துவிட்டேன். என் பாடலை பார்த்து அவர் ஒகே சொல்லட்டும், சொந்தகாரன் என்ற கட்டாயத்தால் ஒகே சொல்லக்கூடாது என சொல்லிவிட்டேன்.
அடுத்தநாள் நான் பூ வரையும் பூவைக்கு பூ மாலை போடவா என பல்லவியை எழுதி அவரிடம் காட்டினேன் அவர் பார்த்து பிரமித்துவிட்டார்.பின்னர் அவர் நான் டியூன் போடுவேன் அந்த டியூனுக்கு தான் நீ சரணம் எழுத வேண்டும் என சொன்னார். நான் அவர் அந்த ஹார்மோனியத்தில் விரல்களை வைத்து இசைக்கும் முன்பே எழுதிவிட்டேன். அவர் பார்த்து வியந்துவிட்டார்.பின்னர் அடுத்த பாடலையும் என்னையே எழுத சொல்லிவிட்டார். அப்போது தான் உறவு என்றொரு சொல் இருந்தால் என்ற பாடலை எழுதி கொடுத்தேன். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இப்பாடல் எழுதும் போது என் அம்மா இறந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அந்த சூழ்நிலையில் தான் இப்பாடல் எழுதினேன். இந்த பாடலை கேட்ட விஸ்வநாதன் இவ்வளவு நாள் எங்கய்யா இருந்த என வியந்து கேட்டார். விஸ்வநாதனை சந்திக்கும் முன் சோத்துக்கு வக்கில்லை. அவரை சந்தித்த பின் சோறு சாப்பிட நேரமில்லை எனக் கூறினார். இப்படிதான் இப்பாடல் உருவானது.