காலையில் நரம்பு வலி சிகிச்சை..மாலையில் ஆக்ஷன் பரிட்சை! துப்பாக்கியில் சுட முடியுமா என கேள்வி - செய்து காட்டிய சமந்தா
காலையில் நரம்பு வலி சிகிச்சை..மாலையில் ஆக்ஷன் பரிட்சை என சிட்டாடல்: ஹனி பன்னி வெப்சீரிஸில் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா. பலவீனமாக பல நாள்கள் இருந்த போது துப்பாக்கியில் சுட முடியுமா என கேள்வி கேட்ட இயக்குநருக்கு பதிலாக அதை செய்து காட்டியுள்ளார் சமந்தா
சமந்தா நடித்திருக்கும் புதிய வெப்சீரிஸான சிட்டாடல்: ஹனி பன்னி வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது. இதன் புரொமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமந்தாவும் இந்த தொடரில் நடித்தது குறித்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். இந்தியில் உருவாகியிருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி வெப் சீரிஸ் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் சமந்தா.
மயோசிடிஸ் நோய் பாதிப்பு
மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்புக்கு உள்ளானார் சமந்தா. இந்த நோய் பாதிப்பு தசைகளில் வீக்கத்தை ஏற்படுத்தி பலவீனமாக உணர செய்யும். இந்த நோய் பாதிப்பின் சிகிச்சைக்காகவும், இதிலிருந்து மீண்டு வருவதற்காகவும் நடிப்பில் இருந்து சில காலம் பிரேக்கும் எடுத்துக்கொண்டார்.
இதற்கிடையே மயோசிடிஸ் பாதிப்பு இருந்தபோதே சிட்டாடல் வெப்சீரிஸ் கமிட்டான சமந்தா, அதில் முழு அர்ப்பணிப்புடன் நடித்து முடித்தார். தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியிருக்கும் நிலையில் முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் சமந்தா.
உடல்ரீதியாக பலவீனமாக இருந்தாலும் சிட்டாடல் சீரிஸில் ஆக்ஷன் காட்சிகள், துப்பாக்கி ஏந்தியவாறு சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கும் சமந்தா, உடல் ரீதியாக பல்வேறு சவால்களை சமாளித்து இதுபோன்ற காட்சிகள் நடித்து குறித்து விவரித்துள்ளார்.
நரம்பு வலி சிகிச்சைக்கு பின் ஆக்ஷன் காட்சி
இதுதொடர்பாக சமந்தா சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "நான் திரும்பி பார்க்கும்போது, நானா அதைச் செய்தேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை. காலையில் IV சிகிச்சை (நரம்பு வலி சிகிச்சை), மேற்கொண்ட பின்னர் மதியம், மாலை வேலையில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தேன். எனவே, படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் மிகவும் தீவிரமாக இருந்தது. படக்குழுவினரை சேர்ந்த மற்றவர்களுக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை.
காலையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும், 'உன்னால் சுட முடியுமா?' என்று ராஜ் கேட்கும் நாட்கள் இருந்தன. அப்போதெல்லாம் என்னால் இதை செய்ய முடியுமா என தெரியவில்லை என்று சொன்னேன். இருப்பினும் எப்படி இதையெல்லாம் செய்து முடித்தேன் என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லை" என்றார்.
தெறிக்கவிடும் ஆக்ஷன் அவதாரம்
க்யூட்டான நடிப்பு, கவர்ச்சி என ரசிகர்களை கிறங்கடித்து வந்த நடிகை சமந்தா, சிட்டாடல்: ஹனி பன்னி சீரிஸில் ஆக்ஷன் ராணியாக அவதாரம் எடுத்துள்ளார். சுமார் 2.51 நிமிடங்கள் ஓடக்கூடிய சிட்டாடல்: ஹனி பன்னி ட்ரெயல்ர் முழுவதிலும் தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா மிரட்டியுள்ளார். இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஜோடியாக நடித்திருக்கும் சமந்தா, ஒரு பெண் குழந்தைக்கு தாயாகவும், சீகரெட் ஏஜெண்டாகவும் வருகிறார்.
ட்ரெயலரில் இடம்பிடித்திருக்கும் காட்சிகளில் பைக் ஸ்டண்ட், கார் சேஸ், கன் பைட் என வருண் தவானுடன் இணைந்தும், தனியாகவும் தெறிக்கவிட்டுள்ளார்.
சிட்டாடல்: ஹனி பன்னி வெப் சீரிஸ்
ஹாலிவுட் ஸ்பை த்ரில்லர் டிவி சீரிஸான சிட்டாடல் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் நடிப்பில் கடந்த ஆண்டு ஏப்ரலில் அமேசான் ப்ரைமில் வெளியானது. 300 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சீரிஸின் இந்திய பதிப்பாக வருண் தவான் - சமந்தா நடித்திருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி உருவாகியுள்ளது. தி பேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளனர். இதில் கே கே மேனன், சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சிட்டாடல் சீரிஸின் இத்தாலிய பதிப்பான சிட்டாடல் டயானா கடந்த 10ஆம் தேதி அமேசான் ப்ரைம் விடியோவில் வெளியானது.
சமந்தா கம்பேக்
மயோசிடிஸ் நோய் பாதிப்பால் இடையில் சில காலம் சினிமாவுக்கு பிரேக் எடுத்துவிட்டு தற்போது மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பியுள்ளார். இதையடுத்து அவரது கம்பேக் ஆக சிட்டாடல்: ஹனி பன்னி என்ற இந்த வெப்சீரிஸ் அமைந்திருக்கிறது.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 7ஆம் தேதி ஸ்டிரீம் ஆகிறது. இந்தியில் உருவாகியிருக்கும் இந்த தொடர் தமிழ், தெலுங்கு உள்பட பிற மொழிகளிலும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்