'உலக நாயகன் பட்டம் தான வேண்டாம்.. அப்போ விண்வெளி நாயகன் பட்டத்த வச்சிக்கோங்க' ஃபேன் பாயின் அட்ராசிட்டிஸ்
நடிகர் கமல் ஹாசன் தனது உலக நாயகன் பட்டத்தைத் துறந்த நிலையில், அவரது ரசிகரான ரோபோ சங்கர் விண்வெளி நாயகன் பட்டத்தை அவருக்கு வழங்கியுள்ளார்.
தன் குழந்தைப் பருவம் முதல் சினிமாவிற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் கமல் ஹாசன். இவர், தமிழ் சினிமாவில் பல உலகளாவிய தொழில் நுட்பங்களையும், புதுப்புது பரிட்சைய முயற்சிகளையும் செய்து தன்னுடன் சேர்த்து சினிமாவையும் முன்னேற்றியவர்.
தமிழ் சினிமாவின் உலக நாயகன்
தன் நடிப்புத் திறமையால் உலக மக்களைக் கட்டிப் போட்டதுடன், உலகளாவிய சிந்தனையைக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இவருக்கு உலக நாயகன் என்ற அடை மொழியும் வழங்கப்பட்டுள்ளது. ஏன், 10 கதாப்பாத்திரங்களை ஏற்று, ஆன்மீகம் தொடங்கிய அறிவியல் வளர்ச்சி வரை பேசிய தசாவதாரம் படத்தில் இவரை சிறப்பிக்கும் வகையில், உலக நாயகனே என்று தொடங்கும் பாடலும் இடம் பெற்றுள்ளது.
உலக நாயகன் பட்டம் வேண்டாம்
இந்நிலையில், தன்னை உலக நாயகன் எனும் அடை மொழியைக் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று KH கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், கமல் ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ ஷங்கர் பட்டத்தை துறந்த கமல் ஹாசனுக்கு புதிய பட்டத்தை சூட்டியுள்ளார். முன்னதாக தன்னை உலக நாயகன் என்ற கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை எனக் கூறிய நிலையில், அவரை சிறிய கூட்டுக்குள் அடைக்க நானும் விரும்பவில்லை என ரோபோ சங்கர் கூறியுள்ளார்.
விண்வெளி நாயகனாக மாறிய கமல்
மேலும், கமல் ஹாசன் இனி விண்வெளி வீரர் என அழைக்கப்படுவார். உலகில் விண்வெள வீரன் என்பவர் இனி ஒருவர் மட்டும் தான். அந்த ஒருவரும் கமல் மட்டும் தான் எனக் கூறியுள்ளார். இனிமேல், அவருக்காக அடிக்கப்படும் போஸ்டர்களில் விண்வெளி நாயகன் என்று தான் கமல் ஹாசனை குறிப்பிட வேண்டும். நாங்கள் அவரை இனி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகிறோம் எனக் கூறியுள்ளார்.
தீவிர கமல் ரசிகன்
முன்னதாக ரோபோ ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில், என்னுடைய இளமைக் காலத்தில் இருந்தே நான் கமல் ரசிகன் தான். நான் பள்ளி மாணவனாக இருந்த சமயத்தில் வெளிவந்த ஆளவந்தான் படம் பார்க்க மொட்டை அடித்துக்கொண்டு தியேட்டருக்கு சென்றேன். இப்படி செய்ததற்காக படம் பார்த்து முடித்து வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் அடி வாங்கியிருக்கிறேன்.
கமலிடம் அடி வாங்கிய ரோபோ சங்கர்
கமலின் விக்ரம் படம் வெளியானபோது நான் கத்தாரில் இருந்தேன். அப்போது அக்குள்ள திரையரங்கில் படம் பார்க்க சென்ற போது, படத்தை நிறுத்தி 5 முறை ஒன்ஸ்மோர் கேட்டேன். அதனை வீடியோவாக எடுத்து கமல் சாருக்கும் அனுப்பினேன். பிறகு ஒரு சமயத்தில் கமல் சார் ஆபிஸுக்கு போனபோது முதுகில் ஒரு அடி வைத்து, என்ன உங்க அராஜகம் ஓவரா இருக்கு என்று கேட்டார். நான் அப்படிதான் பண்ணுவேன். நீங்கள் என்ன சொன்னாலும் உங்களுக்கு அப்படிதான் செய்வேன் என்று உரிமையாக கூறினேன் எனக் கூறியிருப்பார்.
இப்படி, கமல் மேல் தீவிர அன்பு செலுத்திவரும் ரோபோ சங்கர் தற்போது, பட்டங்களைத் துறந்த கமல் ஹாசனுக்கு விண்வெளி நாயகன் எனும் பட்டத்தை அளித்து சிறப்பித்துள்ளார்.
டாபிக்ஸ்