Sethu Movie: ‘என் சொத்து எல்லாத்தையும் வித்தேன்’ சேது தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sethu Movie: ‘என் சொத்து எல்லாத்தையும் வித்தேன்’ சேது தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

Sethu Movie: ‘என் சொத்து எல்லாத்தையும் வித்தேன்’ சேது தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 01, 2023 06:00 AM IST

Sethu Movie Producer A. Kandasamy Interview: ‘கும்பகோணத்தில் 33 நாளில் ஷூட்டிங் பண்ணிட்டோம். அப்போது, எத்தனை ரீல் வந்திருக்கு என்று பார்க்கும் போது 33 ரீல் வந்திருந்தது. அதில் எங்களுக்குள் ஒரு கருத்துவேறுபாடு உண்டானது’ -கந்தசாமி!

சேது படத்தில் அறிமுகமான இயக்குனர் பாலா மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் கந்தசாமி
சேது படத்தில் அறிமுகமான இயக்குனர் பாலா மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் கந்தசாமி

‘‘மதுரை பக்கம் புதுதாமரைப்பட்டி தான் என் ஊரு. இயக்குனர் சசிக்குமாரும் அந்த ஊரு தான். அவரு என் பங்காளி மகன். சசிக்குமார் தாத்தா லாட்ஜில் மேலாளராக பணியாற்றினேன். அதன் பின் கட்டுமான ஒப்பந்த பணிகளில் இறங்கினேன். பல மாநிலங்களில் பணிகள் செய்தேன். கொஞ்சம் காசு வந்தது.

மதுரையில் ஒரு பள்ளி கட்டுமான பணிக்காக, நல்லமணி லாட்ஜில் தங்கி பணியாற்றி வந்தேன். அப்போ பாலாவின் தம்பி மெளலியை ஒரு நாள் பார்த்தேன். அவர் தான், பாலா படம் எடுக்கப் போவதாக கூறினார். எனக்கும் சினிமாவுக்கு என்ன சம்மந்தம் என நான் கேட்டும் கேட்காமல் இருந்துவிட்டேன்.

ஏற்கனவே ராஜாவின் மனசிலே படம் பண்றதுக்கு என்னிடம் கேட்டார்கள். 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் என்றார்கள். நான் மறுத்துவிட்டேன். அப்புறம் ஒரு நாள், ‘வாண்ணே… வந்து படப்பிடிப்பை சும்மா பாருண்ணே…’ என்று என்னை அழைத்துச் சென்று விட்டார்.

அப்போது சேது படத்தோடு பெயர், ‘அகிலன்’. பாலாவை பார்த்தால் சின்னப்பையனா இருக்காரு. நான் பார்க்கும் போது, அந்த படத்தின் ஹீரோவாக செல்வா நடித்துக்கொண்டிருந்தார். பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

சேது படத்தில் நடிகர் விக்ரம்
சேது படத்தில் நடிகர் விக்ரம்

அதன் பின், அடுத்தடுத்து சந்திப்புகளில் மெளலியை சந்திக்கும் போது, படம் பற்றி விசாரிப்பேன். ‘படம் லேட்டாகுதுண்ணே…ராஜா சார் ஓகே சொல்லிட்டாரு….தயாரிப்பாளர் தான் செட் ஆகல’ என்று கூறினார். அந்த சமயத்தில் எனக்கு குடும்பத்தில் சில மன கஷ்டம் இருந்தது.

உடனே மெளலியிடம், ‘உங்க அண்ணனை வரச்சொல்லுப்பா…’ என்றேன். நான் அழைத்து 3 மாதமாக பாலா என்னை வந்து சந்திக்கவில்லை. தற்செயலாக ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பாலாவை சந்திக்க நேர்ந்தது.

‘என்ன பாலா… படம் நல்லா தானே பண்ண… ஏன் நின்று போய்விட்டது?’ என்று கேட்டேன். ‘என்னனு தெரியவில்லை, படம் நின்னு போச்சுனு’ சொல்லி வருத்தப்பட்டார். ‘கதை சொல்றேன்… கேளுங்க அண்ணே’ என்றார். ‘வேணாம் பாலா, நீ சினிமாவோட வாழ்ந்திருக்க… நான் கட்டடத்தோடு வாழ்ந்திருக்கேன். சினிமாவில் நீ ஜெயிக்கிறதா இருந்தால் உனக்கு என்ன வேணுமோ சொல்லு தாறேன், நீ படத்தை பண்ணு’ என்று கூறினேன்.

கதையே நான் கேட்கவில்லை. 60 லட்சம் இருந்தால் போதும்ணே, 30 லட்சம் நமக்கு லாபம் கிடைக்கும்ணே என்று பாலா கூறினார். ‘போதும்ப்பா… பணம் சம்பாதித்து எனக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லை; உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு… நீ படத்தை பண்ணு, லாபம் பற்றி கவலையில்லை’ என்று கூறிவிட்டேன்.

பட பூஜைக்கான எல்லா வேலைகளையும் பாலா தான் கவனித்துக் கொண்டார். நான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டேன், ‘விஐபி.,களை வர வைத்தால் நன்றாக இருக்கும்’ என்றார். நான் முக்கியஸ்தர்களை வரவழைத்தேன். நாளை மறுநாள் படபூஜை, இன்று என் தாய் இறந்துவிட்டார். பூஜை ரத்தாகிவிட்டது.

மீண்டும் வந்து பாலா என்னை காம்ப்ரமைஸ் செய்தார். சரி, அடுத்த மாதம் அதே தேதியில் பூஜைக்கு தயாராகச் சொன்னேன். பிரசாத் லேப்பில் கோலாகலமாக பூஜை நடந்தது. சேது படத்திற்கு 9 ஹீரோக்களை தேர்வு செய்து வைத்திருந்தார் பாலா. அவருக்கு கார்த்திக்கை வைத்து எடுக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.

பூமணி படஷூட்டிங் கூட்டிட்டு போறானார் பாலா. அங்கு கார்த்திக்கை பார்த்து சம்பளத்தை கொடுத்துவிடலாம் என்றார். ‘எவ்வளவு பாலா சம்பளம்’ என்று கேட்டேன். ‘5 லட்சம் வரும்ணே…’ என்றார். ‘சரி வா கையோடு கொடுத்துடுவோம்’ என்று கிளம்பினோம்.

அங்கே போனால், அவர் 40 லட்சம் என்று கேட்டார். ‘வாண்ணே… என்று’ அவர் ஸ்டைலில் திட்டிவிட்டு, என்னை அங்கிருந்து அழைத்து வந்துவிட்டார். அப்புறம் அருண் விஜய், டான்ஸ் மாஸ்டர் நீதிமோகன், விக்னேஷ் என நிறைய பேரை அவர் சொன்னார். எனக்கு யாருடனும் உடன்படவில்லை. கொஞ்சம் முகம் தெரிந்த ஆளாக இருக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

ஜெமினியில் ஒரு அறை எடுத்திருந்தார். அப்போது அங்கு முடி வெட்டுவதற்கு விக்ரம் வந்திருந்தார். ‘அண்ணே, இவர் ஓகேவா…’ என்று பாலா கேட்டார். ‘அவன் ஏழெட்டு படம் பண்ணிருக்கான், ஓகேப்பா’ என்று கூறிவிட்டேன். கையில் ஒரு 10 லட்சம் ரூபாய் வந்திருச்சுப்பா என்று கூறினேன், உடனே ஷூட்டிங்கை தொடங்கிவிட்டார் பாலா.

அந்த நேரத்தில் அவருடன் சசி, அமீர் எல்லாம் இருந்தாங்க. நல்ல உழைப்பு. கும்பகோணத்தில் 33 நாளில் ஷூட்டிங் பண்ணிட்டோம். அப்போது, எத்தனை ரீல் வந்திருக்கு என்று பார்க்கும் போது 33 ரீல் வந்திருந்தது. அதில் எங்களுக்குள் ஒரு கருத்துவேறுபாடு உண்டானது. சரி பண்ணிக்கலாம்ணே என்று பாலா என்னை சமரசம் செய்தார்.

சேது படத்தில் விக்ரம்
சேது படத்தில் விக்ரம்

அந்த நேரம் ஹவுஸ்புல் படத்திற்கு அமீர் என்னை கூட்டிச் சென்றார். ‘அண்ணே நல்ல கதை, கொஞ்சம் பார்த்து செய்யுங்கண்ணே…’ என்று கூறினார். எல்லாரும் சேது கதை மீது நம்பிக்கை கொடுத்திட்டே இருந்தார்கள்.

அப்புறம் நானும் சமாதானம் ஆனேன். திருப்பி, 40 நாள் ஷூட்டிங் போனோம். மொத்தம் 98 நாள் ஷூட்டிங். 98 ஆயிரம் அடி ரீல் வந்திருச்சு. இன்னும் 2 அடி போட்டு, 1 லட்சமா மாத்திடுனு சொன்னேன். விரட்டி படத்தை முடிச்சிட்டாங்க. பிஸ்கட், டீ சாப்பிட்டு தான் பாலா வேலை பார்த்தார். எனக்கு நஷ்டம் வரக்கூடாது என்று அவர் நினைத்தார்.

படத்தில் பிரம்மாண்டமா என்னப்பா இருக்கு? என்று கேட்டேன். பாண்டிமடம் செட் என்றார்கள். தஞ்சாவூரில் செட் போட்டு, 90 பேர் வேண்டும் என்றார்கள். அத்தனை பேருக்கு யூனிபார்ம் செலவு, என்று ஒரு பட்ஜெட் சொன்னார்கள். திருவிடைமருதூரில் ஒரு இடம் இருக்கு, அது செட்டாகும் என்றேன். பாலாவும் ஒப்புக்கொண்டேன்.

அங்கு 500 பேர் வேண்டும் என்றார்கள். அது நான் தருகிறேன் என்றேன். 100 பேருக்கு கட்டிப்போட டம்மி சங்கிலி வாங்க வேண்டும, ஒரு சங்கிலி 350 ரூபாய் என்றார்கள். நானே, ஒவ்வொரு கடையா ஏறி, ஒரிஜினல் சங்கிலியே 30 ரூபாய் தான் வந்துச்சு, எல்லாத்தையும் நானே வாங்கி காரில் ஏற்றினேன்.

நானும், பாலாவும் ஒரே அறையில் தான் தங்குவோம். கடைசி வரை நான் கதையை கேட்கவே இல்லை. ஒரு வழியாக போராடி படத்தை முடிச்சு பூசணிக்காய் உடைச்சிட்டோம். பல சொத்துக்களை, இடத்தை இழந்து தான், கடைசியில் அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது,’’
என்று தயாரிப்பாளர் கந்தசாமி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.