ஹீரோயிசமற்ற காதல்.. 20 வருடங்கள் கடந்த பின்னும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் 7ஜி ரெயின்போ காலனி!
காதல் ஒருவனை அப்படி என்னதான் செய்யும் எனக் கேட்டவர்களுக்கு பதில் கூறும் படமாக வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் இன்றளவும் அனைவரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் தான் இருக்கிறது. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மிடில் கிளாஸ் வாழ்க்கை, நண்பர்களோடு ஊர் சுற்றுவதே லட்சியம், தெண்டச்சோறு என அப்பாவிடம் 20 வயதிற்கு பின்னும் திட்டும் அடியும் வாங்கும் இளைஞன் வாழ்வில் ஒரு பெண் வந்தால் அவன் என்னவாக மாறுவான் என்பதே 7ஜி ரெயின்போ காலனியின் கதை.
ஹீரோயிசம் இல்லாத ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்பதை ரவிகிருஷ்ணா தனது நடிப்பின் மூலம் வாழ்ந்து காட்டியிருப்பார். தன்னை சுற்றி சுற்றி வரும் இளைஞனை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல், ஏற்றுக் கொண்டபின் அவனை வாழ்க்கையில் முன்னேற்றத் துடிக்கும் பெண்ணாக அனைவரின் பாராட்டையும் பெற்றிருப்பார் சோனியா அகர்வால்.
செல்வராகவன்
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற வித்தியாசமான ஒரு காதல் கதையை திரைப்படமாக எடுத்து தனது இயக்குநர் பயணத்தை தொடங்கியவர் செல்வராகவன். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவர், தனது தம்பி மற்றும் மனைவியை வைத்து காதல் கொண்டேன் திரைப்படத்தை எடுத்திருப்பார்.