Story Of Song : காமராஜருக்கு பாட்டில் தூது.. இல்லாத சிவகாமிக்கு பாட்டெழுதிய கண்ணதாசன்.. அந்த சிவகாமி மகனிடம் பாடல் கதை!
Story Of Song : பட்டணத்தில் பூதம் படத்தில் கண்ணதாசன் எழுதிய அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்ற பாடல் உருவான கதை குறித்து இதில் பார்க்கலாம்.
பட்டணத்தில் பூதம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். வீனஸ் பிக்சர்சுக்காக பிராஸ் பாட்டில் என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற இக்கற்பனைக் கதையை புகழ்பெற்ற எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் உருவாக்கினார். மேலும் இப்படத்தில் பூதமாகத் தோன்றினார்.
இப்படம் அப்போது நன்கு மக்களால் ரசிக்கப்பட்ட ஒரு படம் என்றே சொல்லலாம். இப்படத்தில் ஜெய்சங்கர், நாகேஷ் இருவரும் இணைந்து பூதத்திடம் செய்யும் சில விஷயங்கள் பார்க்க அருமையாக இருக்கும்.
மிகுந்த கவலையில் கண்ணதாசன்
இப்படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசனை அணுகுகிறார்கள் படக்குழு. அப்பொழுது கண்ணதாசன் மிகுந்த கவலையில் இருந்துள்ளார். ஏனெனில் அவர் அந்த டைம் திமுகவிலிருந்து காங்கிரஸிற்கு மாறுகிறார். இவர் திமுகவில் இருந்த போது காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அது மட்டும் அல்லாமல் காமராஜருக்கு அடுத்தபடியாக இவர் வந்து விடுவாரோ என சிலர் காமராஜரிடம் கண்ணதாசனை பற்றி பல விஷயங்களை சொல்லியுள்ளனர்.
காமராஜரும் அதனை நம்பி கண்ணதாசன் மீது கோபம் கொள்கிறார். இதனால் கண்ணதாசன் மிகுந்த கவலையில் இருந்துள்ளார். இந்த படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசனை பட குழு அனுப்பியுள்ளது. பாடல் காட்சியானது கே ஆர் விஜயா வீனையுடன் அமர்ந்து தன் காதலை காதலனிடம் மறைமுகமாக தனது பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார். இதுதான் இப்பாடலின் காட்சி.
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
கண்ணதாசனும் இந்தப் பாடலை பயன்படுத்தி காமராஜருக்கு பாடலை எழுதியுள்ளார். அவர் இப்பாடலில் அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என எழுதுவார். பாடல் நன்கு ஹிட்டான பாடல். ஆனால் இப்பாடலை அவர் எழுதியது தயாரிப்பாளருக்கு பிரச்சனையை ஏற்படுத்தியது. ஏனெனில் இப்படத்தில் ஜெய்சங்கர் உடைய அம்மா கிடையாது. அது மட்டும் இல்லாமல் சிவகாமி என்ற கதாபாத்திரமும் கிடையாது. ஆனால் இப்பாடலில் சிவகாமி என்ற வரி வந்தது. தயாரிப்பாளருக்கு படத்தில் லாஜிக் மிஸ் ஆவது என வருத்தம் அடைந்தார்.
பின்னர் கண்ணதாசனிடம் கூறி இந்த வரியை மாற்ற சொன்னார். ஆனால் கண்ணதாசன் வரியை மாற்ற வேண்டாம். சிவகாமி அம்மாவாக ஒருவரை நடக்க வைத்து விடலாம் என கூறுகிறார். ஆனால் இந்த படத்தின் கதையை பொறுத்தவரை அம்மா கேரக்டர் தேவை இல்லை. அதனால் என்ன செய்வது என்று பட குழு குழம்பிய நிலையில் பின்னர் ஒரு புகைப்படத்தை வைத்து அதில் ஜெய்சங்கர் அம்மாவாக சிவகாமி என சொல்லும் மாதிரி காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இப்படி தான் அந்த சிவகாமி கதாபாத்திரம் அப்படத்தில் வைக்கப்பட்டது.
பாடல் எழுதிய பிறகு ஒரு கதாபாத்திரம்
எப்போதும் ஒரு படத்தில் காட்சிக்காக தான் பாடல் அமைக்கப்படும் ஆனால் இதில் பாடல் எழுதிய பிறகு ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். காமராஜரின் அம்மா பெயர் சிவகாமி. அதனை வைத்து காமராஜருக்கு மறைமுகமாக இப்பாடலில் மூலம் தனது எண்ணங்களை கண்ணதாசன் வெளிப்படுத்துகிறார். இப்பாடல் உருவானது இப்படிதான்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்