பான் இந்தியா அளவில் கவனம் பெற்ற கோலிவுட் ஒளிப்பதிவாளர்..சமந்தா ஹீரோயினாக நடித்த முதல் பட இயக்குநர்
HBD Ravi varaman: பான் இந்தியா அளவில் கவனம் பெற்ற கோலிவுட் சினிமா ஒளிப்பதிவாளராக இருந்து வருகிறார் ரவிவர்மன். தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் பல்வேறு ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர் சமந்தா ஹீரோயினாக நடித்த முதல் தமிழ் படத்தை இயக்கியுள்ளார்.
இந்திய சினிமாவில் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும், கடந்த ஆக்ஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட 70வது தேசிய விருதில் பொன்னியின் செல்வன் படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்றவராகவும் இருப்பவர் ரவிவர்மன்.
தமிழ், மலையாளம், இந்தி சினிமாக்களில் முக்கிய ஒளிப்பதிவாளராக இருந்து வரும் ரவிவர்மன், இயக்குநராகவும் மாஸ்கோவின் காவேரி என்ற ரொமாண்டிக் படத்தையும் இயக்கியுள்ளார்.
சினிமா பயணம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொய்யுந்தர்குடிகாடு என்ற கிராமம் தான் ரவிவர்மன் சொந்த ஊர் என கூறப்படுகிறது. சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர் ரவிவர்மன். தாயார் இறந்ததை படம் பிடிக்க வந்த விடியோகிராபரை பார்க்க ஸ்டுடியே சென்றபோது ரவிவர்மனுக்கு கேமரா பற்றிய அறிமுகம் கிடைத்துள்ளது. கேமரா பற்றி அனைத்து விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்ட அவர், பின்னர் சினிமாவில் சாதிக்க சென்னைக்கு வந்து முறையாக உதவி ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரனிடம் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியாவின் டாப் ஒளிப்பதிவாளராக உயர்ந்து நிற்கிறார்.
முதல் முறையாக ரவிவர்மன் மலையாள சினிமாவில் தான் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தமிழில் இவர் இயக்குநர் சுசி கணேசன் அறிமுகமான ஃபைவ் ஸ்டார் படம் மூலம் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கினார். இதன் பின்னர் இந்தி, தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி பணியாற்றி வந்துள்ளார்.
இயக்கம், சினிமா தயாரிப்பு
ஒளிப்பதிவாளராக உச்சத்தில் இருந்தபோதே மாஸ்கோவின் காவேரி என்ற படத்தை இயக்கி இயக்குநர் ஆனார். படம் தயாராகி பல்வேறு பிரச்னைகள் காரணமாத தாமதமாக வெளியானதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வியை தழுவியது. சொல்லப்போனால் சமந்தா ஹீரோயினாக நடித்த முதல் படமாக இது அமைந்தது. ஆனால் இந்த படத்துக்கு முன்னரே அதர்வா ஜோடியாக நடித்த பானா காத்தாடி வெளியான நிலையில், அதுவே சமந்தாவின் அறிமுக படமாக பார்க்கப்படுகிறது.
மாஸ்கோவின் காவேரி படத்துக்கு பின்னர் மீண்டும் ஒளிப்பதிவில் கவனம் செலுத்த தொடங்கிய ரவி வர்மன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற படத்தையும் தயாரித்தார்.
இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம், ராஜீவ் மேனன், சந்தோஷ் சிவன் போன்ற பிரபல ஒளிப்பதிவாளர்களை அடுத்து அதிக படம் பணியாற்றயவராக ரவி வர்மன் இருந்து வருகிறார். மணிரத்னம் - ரவிவர்மன் இணைந்து காற்று வெளியிடை, பொன்னியின் செல்வன் சீரிஸ் படங்களில் பணிபுரிந்துள்ளனர்.
விருதுகளின் மன்னன்
கதைக்கு ஏற்பவும், கதைகளத்துக்கு ஏற்பவும் அழகான, வண்ணமயமான ப்ரேம்களால் காட்சிகளை ஓவியம் போல் அழகுபடுத்தி காட்டும் கேமரா வித்தகராக இருந்து வந்துள்ளார் ரவிவர்மன். கமர்ஷியல் படங்களையும் தனது அற்புதமான ஒளிப்பதிவு மூலம் கிளாஸ் லுக்கில் மாற்றக்கூடியவராக இருந்த இவர் சிறப்பான ஒளிப்பதிவுக்காக பல விருதுகளையும் வென்றுள்ளார்.
அந்நியன், பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக பிலிம்பேர் விருது. வேட்டையாடு விளையாடு படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது, பொன்னியன் செல்வன் 1 படத்துக்காக தேசிய விருது வென்றிருக்கும் இவர் சைமா விகுது, விஜய் அவார்ட், ஜீ சினி அவார்ட் உள்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
வாலி, மின்னலே, 7ஆம் அறிவு போன்ற படங்களில் சில பகுதி காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்தியில் சூப்பர் ஹிட்டான ராம்லீலா, தமாஷா, சஞ்சு போன்ற பல்வேறு படங்களுக்கு இவர்தான் ஒளிவண்ணம் செய்துள்ளார். பான் இந்தியா அளவில் கவனம் பெற்ற கோலிவுட் சினிமா ஒளிப்பதிவாளராக இருந்து வரும் ரவிவர்மனுக்கு இன்று பிறந்தநாள்.
டாபிக்ஸ்