PonniyinSelvan 2 Review: கொண்டாடுமா? திண்டாடுமா? ‘பொன்னியின் செல்வன் 2’ முதல் விமர்சனம் இதோ!
PS 2 Review: முதல் பாகத்தில் இருந்தது போல இரண்டாம் பாகத்தில் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை என்ற விமர்சனம் இருந்தது. ஆனால் படத்தின் காட்சிகளோடு பார்க்கும் போது அது அவ்வளவு அழகாக பொருந்தி இருந்தது
பொன்னியின் செல்வன் பாகம் 1 ற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் காலப்போக்கில் அந்த திரைப்படம் மக்களுக்கு பிடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அந்த வெற்றி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இன்று வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 2 பூர்த்தி செய்து இருக்கிறதா என்பதை இங்கு பார்க்கலாம்.
கடலில் விழுந்த பொன்னியின் செல்வனை ஊமை ராணி ஒரு பக்கம் காப்பாற்ற, இன்னொரு பக்கம் ஆட்சி தனக்குத்தான் என்று மதுராந்தாகத் தேவன் தாயின் ஆணையை மீறி மகுடம் சூட விரும்புகிறான்.
மற்றொரு பக்கம் சோழ குலத்தை கறுவருக்க பாண்டியர்களோடு இணைந்து கொண்டு சூழ்ச்சியை நந்தினி அரங்கேற்ற, அதை கண்டு பிடித்து விடுகிறான் வந்தியத்தேவன். அந்த விஷயம் ஒரு கட்டத்தில் கரிகாலன், குந்தவை, அருண் மொழி வர்மன் ஆகிய மூவருக்கும் தெரிந்து விடுகிறது. சூழ்ச்சி தெரிந்தும் நந்தினியின் அழைப்பை ஏற்று கடம்பூர் செல்கிறான் கரிகாலன்.
இறுதியில் கரிகாலன் என்ன ஆனான்? அருண்மொழியின் நிலை என்ன ஆனது? மதுராந்தகன் கனவு நிறைவேறியதா? இதற்கிடையே முளைத்த வந்தியத் தேவன் குந்தவை காதல் என்ன ஆனது? வானதி அருண்மொழி மீது வைத்த ஆசை நிறைவேறியதா? மன்னனை காப்பாற்றும் அந்த ஊமை ராணி யார்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் மீதிக்கதை.
முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் அனைத்து கதாபாத்திரங்களும் அதற்கே உரித்தான சிறப்புடன் அவ்வளவு நேர்த்தியாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் முதல் பாகத்தை இன்னும் அழுத்தமாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது என்று சொல்லலாம்.
முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் வேகம் கூட்டி இருக்கிறார் மணிரத்னம். அதனால் காட்சிகள் எதுவும் பெரிதாக போர் அடிக்க வில்லை. குறிப்பாக பால்ய பருவத்தில் கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையேயான காதல் காட்சிகள், வந்தியத் தேவனுக்கும் குந்தவைக்கும் இடையேயான காதல் காட்சிகள் உள்ளிட்டவை செம..
முதல் பாகத்தில் கதையை பார்வையாளனுக்கு கடத்த மணி ரத்னம் கதை சொன்ன விதம் சில மக்களுக்கு புரியவில்லை என்றும் இன்னும் சிலருக்கு படம் அதிகமாக தோய்வை தந்த தாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அது போன்ற விமர்சனங்களை இதில் முழுமையாக களைந்து இருக்கிறார் மணி ரத்னம்.
உரையாடல் வழியாகவும் சரி, காட்சிகள் வழியாகவும் அவர் இரண்டாம் பாகத்தில் கதை சொன்ன விதம் மக்களுக்கு எளிதாக புரியும் படியும், ரசிக்கும்படியும் அமைந்து இருந்ததை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. காட்சிகளை அவர் கட்டமைத்ததில் மீண்டும் தான் மாஸ்டர் என்பதை நிரூபித்து இருக்கிறார் மணிரத்னம்.
நடிகர்களின் நடிப்பும் வேறு ரகமாய் ரசிக்கும்படியும், புரியும்படியும் அமைந்து இருந்தது. குறிப்பாக ஜெயம் ரவி யின் நிதானமான நடிப்பு அரசனுக்கே உரித்தானதாக அமைந்து இருந்தது. நந்தினி வழக்கம் போல வில்லனிசத்தில் மிரட்ட, இம்முறை கரிகாலன் அவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.
முதல் பாகத்தில் இருந்தது போல இரண்டாம் பாகத்தில் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை என்ற விமர்சனம் இருந்தது. ஆனால் படத்தில் காட்சிகளோடு பார்க்கும் போது பாடல்கள் அவ்வளவு அழகாக பொருந்தி இருந்ததை உணர முடிந்தது. பின்னணி இசை பிரமாண்டம். வசனங்கள் தெறி ரகம்.
கலை இயக்கத்தில் மீண்டும் தான் மாஸ்டர் என்று உரக்கச் சொல்லி இருக்கிறார் தோட்டா தரணி. கோட்டை தொடங்கி விஹாரம் வரை என அனைத்தையும் மிக நுட்பமாக செதுக்கி இருக்கிறார். அதுவே நம்மை அந்த சோழ உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ஆதர்ச அச்சாணியாக இருக்கிறது. ரவி வர்மன் ஓவியம் போல காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கிறார். பூங்குழலிக்கு இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கலாம். இரண்டாம் பாகத்தில் அவர் இருந்தததிற்கான சுவடே தெரியவில்லை. மொத்தத்தில் மணி ரத்னத்தின் மற்றொரு மாஸ்டர் பீஸாக மாறி இருக்கிறது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்! வெற்றி முரசு கொட்டட்டும்!
டாபிக்ஸ்