Nithya Menen: நாடகத்தனமான கதாபாத்திரங்களுக்கு மட்டும் விருதுகள் வழங்கப்படுவதில்லை: ஹேட்டர்களுக்கு பதிலளித்த நித்யா மேனன்
Nithya Menen: நாடகத்தனமான கதாபாத்திரங்களுக்கு மட்டும் விருதுகள் வழங்கப்படுவதில்லை என ஹேட்டர்களுக்கு நித்யா மேனன் பதில் கூறியுள்ளார். கார்கிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று சாய் பல்லவியின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்த நிலையில், ஒரு பேட்டியில் நித்யா மேனன் இதைக் கூறியுள்ளார்.
Nithya Menen: தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நித்யா மேனன் சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
கார்கி படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவிக்கு விருது கிடைக்கவில்லை என்று அவரது ரசிகர்கள் கோபமடைந்த பின்னர், நித்யா மேனன் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் தனது வெற்றியை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார்.
‘நாடகத்தனமான கதாபாத்திரங்களுக்காக மட்டும் விருதுகள் வழங்கப்படுவதில்லை என்பதை ஷோபனா நிரூபித்துள்ளார்’
இதுதொடர்பாக நடிகை நித்யா மேனன் அளித்த நேர்காணலில், விருது அறிவிப்பு குறித்து முதலில் தனக்குத் தெரியாது என்றும், தன்னை வாழ்த்தி மக்களிடமிருந்து அழைப்புகள் வரத் தொடங்கியபோது தான், தான் ஆச்சரியப்பட்டதாகவும் நித்யா கூறினார்.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ஷோபனா கதாபாத்திரம் விருது பெறும் கதாபாத்திரம் அல்ல என்று சுட்டிக்காட்டி சிலர் விமர்சிப்பது குறித்து, நித்யா கூறுகையில், "எனக்கு இந்த விருதைப் பெற்றுத் தந்த படம் திருச்சிற்றம்பலம் என்பதில் நான் திருப்தி அடைகிறேன். விஷயம் என்னவென்றால், நான் எப்போதும் ஒவ்வொரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகும்போதும் எனக்கு மகிழ்ச்சியைத் தரும் படங்களைச் செய்ய விரும்புகிறேன். அதைப் பார்க்கும்போது மற்றவர்களை மகிழ்விக்க விரும்புகிறேன்.
ஒரு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சிப்பதை விட, மிகவும் சுயநலமான வழியில் மற்றொரு நபரை புன்னகைக்க அல்லது மகிழ்ச்சியாக வைப்பதில் தான் நடிப்பதை நான் மிகுந்த அளவில் நம்புகிறேன்.
’ஏன் ஒரு நகைச்சுவையான படங்களைப் பார்த்து விருது வழங்கக் கூடாது’: நித்யா மேனன்:
இது ஒரு தொடர்ச்சியான விவாதம். அது ஒருபோதும் அழியாது' என்று பேசிய அவர், 'ஏன் ஒரு நகைச்சுவையான படத்தைப் பார்த்து விருது வழங்கக்கூடாது' என்று நித்யா மேனன் கேள்வி எழுப்பினார்.
மேலும், "உதாரணத்துக்கு ஒரு காமெடி படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வகைத் திரைப்படங்களில் எழுதுவதோ, நடிப்பதோ எளிதல்ல. ஆனால் அது நாடகத்தனமாக இல்லை என்பதற்காக விருதுகளுக்காக ஏன் புறக்கணிக்கப்படுகிறது. திருச்சிற்றம்பலம், ஷோபனா ஆகியோருக்கு கிடைத்த இந்த வெற்றி, விருதுகள் நாடகத்தனமான பாத்திரங்களுக்காக மட்டும் வழங்கப்படுவதில்லை என்பதை நிரூபிக்கிறது. ஒரு விருதை வெல்ல நீங்கள் செயற்கையாக இருக்க வேண்டியதில்லை. சில வகையான நாடக பாத்திரங்களில் நடிப்பதில் ஒருவித வெறி இருக்கிறது’’ என்று நடிகை நித்யா மேனன் பேட்டியளித்திருக்கிறார்.
திருச்சிற்றம்பலம் எத்தகையது?
மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம், திருச்சிற்றம்பலம். படத்தில் முக்கிய கதாபாத்திரமான திருச்சிற்றம்பலம், தனது வாழ்க்கையில் மாறுபாடுகளைக் கையாளும்போது, தனது சிறந்த தோழியான ஷோபனாவிடம் ஆறுதல் பெறும் கதையை சொல்கிறது. திருச்சிற்றம்பலம் மீது ரகசியமாக காதல் வயப்பட்டு, என்றாவது ஒரு நாள் திருச்சிற்றம்பலத்துக்கும் அவ்வாறே நிகழும் என்று நம்பும் சிறந்த தோழியாக நித்யா மேனன் ஷோபனா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமப்புத்திரன் ஆகியப் படங்களுக்குப்பின் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் மீண்டும் தனுஷுடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.110 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியடைந்தது.