Srikanth Deva: ‘ரஞ்சிதமே பாடல் எனது இசையின் நகலா?’ மனம் திறந்த ஸ்ரீகாந்த்தேவா!
Music director Srikanth Deva Interview: ‘ரஞ்சிதமே பாடல் கேட்டதும் தமனுக்கு போன் செய்தேன்’ -ஸ்ரீகாந்த் தேவா
தேனிசை தென்றல் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. குறுகிய காலத்தில் உச்சத்திற்கு சென்று, அதே காலகட்டத்தில் சரிவையும் சந்தித்தவர். மீண்டும் மீண்டு தற்போது புதிய பயணத்தை தொடங்கியிருக்கும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா , பிரபல இணையதளம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடல் இவரது இசையை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக மீம்கள் வந்து கொண்டிருந்தது. அது குறித்தும் பேசியுள்ளார். இதோ அந்த பேட்டி:
‘‘தாளம் என்று ஒன்று உள்ளது. 2-4 , 6-8 என அது இருக்கும். 6-8 என்பது குத்து பாட்டுக்கு வரும் தாளம். குத்துப்பாட்டுக்கு அந்த தாளத்தை தான் பயன்படுத்த முடியும். ‘அ முதல் ஃ தானடா’ பாடல் மட்டுமல்ல, ‘அடியே மனம் நில்லுனா நிக்காதடி’ பாடலுக்கும் அந்த தாளம் தான், என் அப்பா இசையமைத்த ‘தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது’ அதிலும் அது தான் வரும்.
சிவகாசியில் நான் போட்ட , ‘என்னாத்த சொல்வேனுங்க…’ பாடலுக்கும் அது தான் வரும். வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடலுக்கும் அதை தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை கேட்கும் போது குத்துப்பாடலாக சில பாடல்களைப் போல தெரியும். பாடல் கேட்டதும், தமனுக்கு போன் செய்து வாழ்த்தினேன்.
ரொம்ப நல்லா இருக்கு பாடல் என்று அவரிடம் கூறினேன். என் பாடலை அவர் பயன்படுத்தவில்லை, உண்மையிலேயே அந்த பாடல் நன்றாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவிடம் போனால் பட்ஜெட் பெரிதாக இருக்காது; ஆனால் தரம் பெரிதாக இருக்கும், சரியான நேரத்தில் வேலை செய்து விடுவார், பாடல் ஹிட்டாகிவிடும் என்று தான் எனக்கு பெயர் இருந்தது.
சிவகாசி பூஜை அன்று எனக்கு 10 படம் புக் ஆனது. நானே இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் கூறினேன், ‘சார், என்னால் உடனே ரெடி பண்ண முடியாது’ என்றேன். ‘இல்ல தம்பி… நீங்க பொறுமையா பண்ணுங்க’ என்று என்னிடம் அவர்கள் கூறினார்கள்.
ஆனால், ஒரு அவசரத்தில் எல்லாருக்கும் வேகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேவையில்லாமல் நிறைய படங்களில் கமிட் ஆகிவிட்டேன். அதனால் பின்னடைவு ஏற்பட்டது. அது என்னுடைய தவறு தான். நீங்கள் எதிர்பார்க்கும் ஸ்ரீகாந்த் தேவா மீண்டும் வந்து சிறப்பான இசையை தருவேன்.
இசையமைக்க வேண்டும், அதற்காக நிறைய படங்களுக்கு பண்ணக் கூடாது. ஆண்டுக்கு 3 படம் பண்ணா போதும். இப்போது ஆதார் என்கிற படம் வந்தது. தெற்கத்தி வீரன், கலகத்தலைவன் என இந்த ஆண்டு மூன்று படம், போதும். நச்சுனு பண்ணிடலாம்.
ஆதார் படத்தை பார்த்து விட்டு நானா இசை என்கிறார்கள். இப்போ நல்ல படங்களை தேர்வு செய்து, சிறப்பாக அதற்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அஜித் சார் தான், எங்கே பார்த்தாலும், ‘என்ன ஸ்ரீ… எப்படி இருக்கீங்க… அப்பா எப்படி இருக்காருனு’ நலம் விசாரிப்பார்.
ஆழ்வார் படம் தான் மறக்க முடியாது. ‘மயிலே மயிலே’ பாடல் கம்போஸிங்ல நான் பாடிட்டு இருந்தேன். அஜித் சாரிடம் கேட்டேன், ‘சார் இதற்கு யாரை பாட வைக்கலாம’ என்று, அதற்கு அவர், ‘யாரா… நீங்களே பாடுங்க… இப்போ எப்படி உற்சாகமா பாடுனீங்களோ… அதே உற்சாகத்தோடு பாடுங்கனு’ சொல்லிட்டார். அந்த மாதிரியான நாட்களை மறக்கவே முடியாது,’’ என்று ஸ்ரீகாந்த் தேவா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்