Tamil Movies: எம்ஜிஆர் குரல்.. விஜயகாந்த் சஸ்பென்ஸ் த்ரில்லர், வடிவேலு காமெடி அலப்பறை..!இன்றைய நாளில் வெளியான படங்கள்
Tamil Movies Released on Sep 7: எம்ஜிஆர் குரலை மாற்றிய காவல்காரன், விஜயகாந்தின் சஸ்பென்ஸ் த்ரில்லர், வடிவேலு காமெடி அலப்பறை என தமிழ் சினிமாவில் இன்றைய நாளில் வெளியான படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று எம்ஜிஆர், விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்கள், வடிவேலுவின் கிளாசிக் காமெடி நிறைந்த படங்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தேதியில் வெளியான படங்கள் எவை என்பதை பார்க்கலாம்
காவல்காரன்
எம்ஜிஆர் நடித்த ஸ்பை ஆக்ஷன் படமான காவல்காரன் படத்தை பி. நீலகண்டன் இயக்கியுள்ளார். ஜெயலலிதா, எம்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், சிவக்குமார், நாகேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பியது.
இந்தியில் தர்மேந்திரா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு பாலிவுட்டிலும் வெற்றியை பெற்றது. எம்.ஆர். ராதா துப்பாக்கியால் எம்ஜிஆரை சுடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பின்னர் இந்த படம் வெளியானது. அப்படி பார்க்கையில் எம்ஜிஆர் ஒரிஜினல் குரல் இந்த படத்தில் இருந்து மாறியது. குண்டு அடி பட்ட நிலையிலும் தனது சொந்த குரலால் டப்பிங் பேசியிருப்பார் எம்ஜிஆர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டாகின. நினைத்தேன் வந்தாய், அடங்கொப்புரானே போன்ற பாடல்கள் இன்றளவும் ஒலிக்கின்றன. எம்ஜிஆர் ரசிகர்களால் மறக்க முடியாத இந்த படம் வெளியாகி இன்றுடன் 57 ஆண்டுகள் ஆகிறது
நாளை உனது நாள்
விஜயகாந்த் நடிப்பில் த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான படம் நாளை உனது நாள். நளினி, ஜெய்சங்கர், செந்தாமரை, சத்யராஜ், கவுண்டமணி, மனோரமா என பலர் நடித்திருக்கும் இந்த படத்தை ஏ. ஜெகன்நாதன் இயக்கியுள்ளார்.
இந்தியில் வெளியாகி ஹிட்டான கும்நாம் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. படத்தின் இந்தி பதிப்பு அகதா கிரிஸ்டி நாவல் ஆன்ட் தெந் த்ர் வேர் நன் என்பதை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
இந்த படத்தில் விஜயகாந்த் டூப் ஆக நடித்த ரவி என்பவர் படப்பிடிப்பின்போது உயிரிழந்தார். இதையடுத்து இந்த படம் அவருக்கு அர்பணிக்கும் விதமாக வெளியிடப்பட்டது. படத்தின் இளையராஜா இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றன. குறிப்பாக பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படமாக இருந்து வரும் நாளை உனது நாள் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது.
புரியாத புதிர்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய முதல் படம் புரியாத புதிர். ரஹ்மான், ரகுவரன், ரேகா, சித்தாரா, ஆனந்த் பாபு நடித்திருக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்திருக்கும்.
படத்தில் சாட்டிஸ்ட் கணவராக ரகுவரனின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. குறிப்பாக ஒரு காட்சியில் பல மாடுலேஷன்களில் ரகுவரன் ஐ நோ என்ற பேசும் டயலாக் மிகவும் பிரபலமானது. தமிழில் பக்கா கமர்ஷியலான த்ரில்லர் படமாக திகழும் புரியாத புதிர் படம் வெளியாகி இன்றுடன் 34 ஆண்டுகள் ஆகிறது
சாக்லெட்
பிரசாந்த் நடிப்பில் வெளியான ரெமாண்டிக் ஆக்ஷன் படம் சாகலெட். ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஜெயாரே, மும்தாஜ், சுஹாசினி மணிரத்னம், லிவங்ஸ்டன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். காதல், திருமணத்துக்கு பின் ஈகோ என செல்லும் படத்தின் கதை ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.
தேவா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. மலை மலை என்ற பாடல் பெண்களின் தேசிய கீதமாக அப்போது ஒலித்தது. பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டான இந்த படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது
எம் மகன்
பரத், கோபிகா, நாசர், வடிவேலு, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க காதல் கலந்த பேமிலி ட்ராமா படமாக வெளியானது எம் மகன். மெட்டி ஒலி, நாதஸ்வரம் சீரியல் இயக்குநர் திருமுருகன் இயக்கியிருக்கும் இந்த படம் தந்தை - மகன் இடையிலான பாச போராட்டத்தை சொல்லும் கதையும் இருக்கும்.
நாசர், வடிவேலு ஆகியோரின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. வடிவேலு காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பியிருப்பார். வித்யாசாகர் இசையில் பாடல்களும் வரவேற்பை பெற்றன. குடும்ப படமாக இருக்கும் எம் மகன் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகிறது
மருதமலை
அர்ஜுன், நிலா, லால், ரகுவரன் உள்பட பலர் நடித்திருக்கும் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக அமைந்திருக்கும் மருதமலை படத்தை சுராஜ் இயக்கியிருப்பார். பக்கா கமர்ஷியல் கதைகளத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பியது.
ஏட்டு ஏகம்பராமாக வடிவேலுவின் காமெடி அலப்பறை கிளப்பின. இந்த படத்துக்காக சிறந்த காமெடியன் தேசிய விருது வடிவேலுவுக்கு கிடைத்தது. ரசிகர்களை கவர்ந்த மருதமலை படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/