Manjummel Boys: இது தான் ஃப்ர்ஸ்ட்.. மலையாள சினிமாவில் சாதனை படைத்த மஞ்சுமெல் பாய்ஸ்..
Manjummel Boys: ரஷ்யாவில் நடைபெற்று வரும் கினோபிராவோ திரைப்பட விழாவில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இதுவரை எந்த மலையாளப் படமும் இந்த விழாவில் திரையிடப்படாத, மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இந்த சாதனையை படைத்துள்ளது
நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான மலையாளத் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டது. திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி வசூலையும் பாராட்டையும் குவித்து வந்தது.
ரஷ்யாவில் திரையிடப்படும் மஞ்சுமெல் பாய்ஸ்
இந்த நிலையில், அந்தப் படம் புதிதாக ஒரு சாதனையையும் படைத்துள்ளது. அதாவது அந்தப் படம் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் கினாபிராவோ திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்தப் படம் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ம் தேதி அந்த விழாவில் திரையிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாம். இதன்மூலம் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தான் இந்த விழாவில் திரையிடப்படும் முதல் மலையாளப்படம் என்ற பெருமையை பெற்று சாதனை படைத்துள்ளது.
இளைஞர்கள் சுற்றுலா
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மஞ்சுமெல் எனும் கிராமத்தில் வாழும் இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார்கள். அங்கு கமல்ஹாசனின் குணா படப்பிடிப்பு நடந்த குணா குகை பார்க்க செல்கின்றனர். அங்கு ஒருவர் இது உண்மையான குகை அல்ல, குணா குகை இருக்கும் இடம் எனக்கு தெரியும் எனக் கூறுவதைக் கேட்டு அங்கு செல்கின்றர். அப்போது சுற்றுலா சென்றவர்களில் ஒருவர் குகைக்குள் விழுந்து விடுகிறார். அவரைக் காப்பாற்ற இளைஞர்கள் எடுக்கும் முயற்சியும் தவிப்புமே மஞ்சுமெல் பாய்ஸ்.
மக்களின் விமர்சனம்
இந்தப் படத்தை இளரத்தத்தில் செய்யும் திமிர்தனங்கள், நண்பர்களுக்கு உண்டான பிணைப்பு, குடிகார இளைஞர்களின் அராஜகம், சாகசம், மனிதம் உயிர்பித்தல் என பலவிதமான விமர்சனங்களுடன் கடந்து செல்லலாம். ஆனால், இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.
அதற்காக இந்தப்படம் வெறும் சோகக் காட்சிகளை மட்டுமே கடந்து செல்கிறது என்றால் அதுவும் இல்லை. கதை, லாஜிக், விமர்சனம் இவை அனைத்தையும் தாண்டி, இந்தப் படத்தில் கேமரா மேனும், எடிட்டரும் செய்த சாகசங்கள் அற்புதமானது.
படக்குழுவின் மெனக்கெடல்
கொடைக்கானலில் உள்ள குணா குகையில் இந்தப் படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, குணா குகையை புகைப்படங்களும், வீடியோவும் எடுத்துவிட்டு, அதுபோலவே செட் அமைத்து பாதி படங்களை எடுத்துள்ளனர். இவை அனைத்தும் செட் தான் என நம்ப முடியாத அளவிற்கு தங்களது உழைப்பை வழங்கி இருப்பர்.
குகைக்குள் விழும் கற்களின் ஒலி, அதன் எக்கோ என பல காட்சிகளில் டைரக்டரும் படக்குழுவும் மிரட்டி இருப்பார்கள். படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்களுக்கான நடிப்பை போதுமான அளவு வழங்கி கதைக்கு நியாயம் செய்துள்ளனர். மேலும், குகைக்குள் விழுந்த நண்பனை காப்பாற்றி மேலே இழுத்துவரும் போது வரும் குணா படத்தின் பாடலும் அதன் வசனமும் கண்ணீருடன் கைத்தட்டலையும் அள்ளியது.
வசூல் சாதனை
முதலில் இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமே எடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. நாளுக்கு நாள் இந்தப் படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், படத்தை பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டனர். இதனால் படம் மாபெரும் வசூல் சாதனையை பெற்றது.
இதைத்தொடர்ந்து, இந்தப் படத்தின் ரசிகர்கள் பலர் கொடைக்கானலுக்கு படையெடுக்கத் தொடங்கினர். அத்துடன் கண்மனி அன்போடு காதலன் பாடலும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து தனது புகழை தேடித்தேடி அடைந்தது. இந்தப் படத்திற்கு மேலும் ஓர் அங்கிகாரமாய் இப்போது, ரஷ்யாவில் நடைபெறும் கினாபிராவோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.