Malayalam Films 2024: ரசிகர்களை திரும்பவும் தியேட்டருக்கு அழைத்த பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ்!
2024ஆம் ஆண்டு உண்மையில் மலையாள சினிமாவின் ஆண்டாக மாறி வருகிறது. பிரேமலு, பிரம்மயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸைப் பார்க்க எண்ணற்ற ரசிகர்கள் திரையரங்குகளுக்கு விரைகிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸில் மலையாளப் படமான பிரேமலுவின் மூன்று வார வசூல் ரூ.70 கோடியைத் தாண்டியுள்ளது. பிரம்மயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் ஆகிய இரண்டு படங்களும் முறையே பிப்ரவரி 15 மற்றும் பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் வெளியானதிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன.
இந்த மூன்றிலும் ’பிரம்மயுகம்’ திரைப்படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்திருந்தாலும், மற்ற இரண்டும் அதிகம் அறியப்படாத நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படங்களிலுமே மிக வலுவான திரைக்கதை, புதுமையான கதைக்களம் மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பைக் காணலாம். 2024ஆம் ஆண்டு உண்மையிலேயே மலையாள சினிமாவின் ஆண்டாக மாறிவிட்டது. பார்வையாளர்கள் இந்த படங்களைப் பார்ப்பதற்காக, மொழித் தடைகளைத் தாண்டி உலகளவில் திரையரங்குகளுக்கு விரைகிறார்கள். அதனால் தான், இந்தப் படங்கள் தமிழ்நாட்டிலும் பெரும்பான்மையான இடங்களில் டப் செய்யாமல் வெளியானாலும் அதன் காட்சி மொழியிலேயே படத்தைப் பார்த்து ரசிக்கின்றனர்.
உள்ளடக்கம் ராஜா, நட்சத்திரம் அல்ல
தென்னிந்திய சினிமாவின் 80-கள் மற்றும் 90-களின் கதைக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தது. அங்கு கதைதான், படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் ராஜாவாக இருந்தது. அந்த நிலையை மலையாள சினிமா தற்போது எட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டில் நேரு, கண்ணூர் ஸ்குவாட், 2018, ரொமான்சம், காதல் - தி கோர் மற்றும் இருட்டா போன்ற படங்கள் மலையாள சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களாக மாறின. உதாரணமாக, பிரம்மயுகம் ரூ.27 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இதில் மம்மூட்டி ஒரு வயதான மனிதராகவும் பேயாகவும் நடித்துள்ளார். இது ஒருவகை மோனோக்ரோம் பட வகையைச் சார்ந்தது.
இப்படம் குறித்து பேசிய பிரம்மயுகம் திரைப்படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் கூறும்போது, "மலையாள சினிமா படைப்பாற்றலை அனுமதிக்கிறது. ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது அது இயக்குநர்களுக்கு எல்லைகளைக் கடக்க உதவுகிறது. மம்மூட்டி போன்ற சூப்பர் ஸ்டார்களும் பரிசோதனை முயற்சியாக இருந்தாலும் வித்தியாசமான படங்களில் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் படத்தை நம்பி இந்தப் படத்தில், முதலீடு செய்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
இது மிகவும் வித்தியாசமான ஒரு பிளாக் ஒயிட் மோடில் எடுக்கப்பட்ட பீரியட் படம். எந்தவொரு படத்துக்கும் கதை வலுவாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதைத்தான் நான் முதலில் முயற்சிக்கிறேன். படம் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பது முக்கியமல்ல. கோவிட் பெருந்தொற்று காலத்தில், மக்கள் மலையாள சினிமாவை அதிகம் பார்க்கத் தொடங்கினர். பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடியில் வெளியிட ஆர்வம் காட்டினர்’’ என்றார்.
த்ரிஷ்யம் 2 (மோகன்லால்), மின்னல் முரளி (டொவினோ தாமஸ்), கலா (டொவினோ தாமஸ்), ஜோஜி (ஃபஹத் ஃபாசில்), சி யு சூன் (ஃபஹத் ஃபாசில்), நாயட்டு (குஞ்சாகோ போபன், ஜோஜு ஜார்ஜ்) மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற மலையாளப் படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு உலகளாவிய பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டன. கோவிட் கால ஊரடங்கு வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்த மலையாளத் திரையுலகம் முடிவு செய்தது. திரையரங்குகள் மூடப்பட்டதை ஒரு பேரழிவாக கருதவில்லை. ஆனால், அது ஒரு தடை மட்டுமே. உதாரணமாக, மின்னல் முரளி, டொவினோ தாமஸ் மற்றும் எழுத்தாளர்-இயக்குநர் ஃபாசில் ஜோசப் ஆகியோருக்கு ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியாக மாறியது. இன்று ரன்வீர் சிங்கிற்காக, ’சக்திமான்’ என்னும் கதை உருவாவதாகப் பேசப்படுகிறது. இதற்காக, டொவினோ தாமஸ் இல்லங்கள்தோறும் கொண்டாடப்பட்டார்.
வலுவான கதை பார்வையாளர்களை ஓடிடி தளங்களுக்கு மட்டுமல்ல, இன்று திரையரங்குகளுக்கும் கொண்டு வரும் என்ற எண்ணத்தை மற்ற மலையாள இயக்குநர்களும் கொண்டிருக்கிறார்கள்.
மஞ்சுமெல் பாய்ஸ் ஒரு நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். தமிழ்நாட்டின் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு, வருகை தரும் கேரளாவைச் சேர்ந்த நண்பர்கள் குழுவைப் பற்றியது. தெரியாத சில நடிகர்களைக் கொண்ட ஒரு திரைப்படம், அவர்களில் ஒருவர் எவ்வாறு குகையில் விழுகிறார். ஒரு மீட்புப் பணி எவ்வாறு நிகழ்கிறது என்பதை நம் கண்முன் அழைத்துச் சென்று காட்டுகிறது. இப்படம் கேரளாவில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், நாடுகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உதாரணமாக, தமிழ்நாட்டில், இப்படம் சுமார் 10 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரிய நட்சத்திரங்கள் இல்லாத ஒரு மலையாள படத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய வியாபாரமாகும்.
பெயர் வெளியிட விரும்பாத தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், "மலையாள சினிமா எப்போதும் வலுவான கதையினை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் சினிமா கூட அப்படித்தான் இருந்தது. ஆனால், கமர்ஷியல் மாஸ் படங்கள் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டன. இங்குள்ள நட்சத்திரங்கள் சிறிய படங்களில் நடிக்க மாட்டார்கள்.
நட்சத்திர நடிகர்களின் சம்பளம் என்பது தயாரிப்பாளர்கள் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்க வைக்கிறது. இது ஒரு சவால். சமீப காலமாக ப்ளூ ஸ்டார், லவ்வர் போன்ற சின்ன பட்ஜெட் தமிழ்ப் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றுள்ளன.
மலையாளப் படங்கள் மிகவும் யதார்த்தமான கதைகள் மற்றும் பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக இணைக்கும் இயல்பான நடிப்பைக் கொண்டுள்ளன. பார்வையாளர்கள் தங்களது வாழ்வினை இணைக்கக் கூடிய கதைகளை விரும்புகிறார்கள். மேலும் கதைக்களம் புதியதாகவும் வசீகரமாகவும் இருந்தால், அவர்கள் திரையரங்குகளுக்கு வரத் தயாராக உள்ளனர்’’ என்றார்.
உள்ளூர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கதைகள் தான் மலையாளப் படங்களை சுவாரஸ்யமாக்குகின்றன. மேலும், மலையாளிகள் பெரும்பாலும் கவர்ச்சியை விரும்பாத, ஆடம்பரத்தை ரசிக்காத, மிகை நடிப்பினை விரும்பாதவர்களாக உள்ளனர். மேலும், மலையாள நடிகர்கள் புதுமையை விரும்புகிறார்கள். மலையாள சினிமா கதைகளையும் வாழ்வியல் நிகழ்வுகளையும் பேச அனுமதிக்கிறது. தரமான உள்ளடக்கத்திற்கான தணியாத பசியைக் கொண்ட உலகளாவிய பார்வையாளர்கள் உண்மையில் இதை ரசிக்கிறார்கள். மலையாள சினிமா உண்மையிலேயே 2024ஆம் ஆண்டில் ஒரு சிறந்த இடத்தில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்