Lucky Baskhar Review: ‘அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ தீபாவளி ரேஸில் முந்துகிறதா லக்கி பாஸ்கர்? விமர்சனம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lucky Baskhar Review: ‘அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ தீபாவளி ரேஸில் முந்துகிறதா லக்கி பாஸ்கர்? விமர்சனம்!

Lucky Baskhar Review: ‘அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ தீபாவளி ரேஸில் முந்துகிறதா லக்கி பாஸ்கர்? விமர்சனம்!

HT Tamil HT Tamil Published Oct 31, 2024 12:38 AM IST
HT Tamil HT Tamil
Published Oct 31, 2024 12:38 AM IST

தீபாவளிக்கு குடும்பத்தோடு ரசிக்க, லக்கி பாஸ்கர் சரியான தேர்வு தான். படத்திற்கு ‘டேலண்ட் பாஸ்கர்’ என்று வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனாலும், தீபாவளிக்கு ஜாக்பாட் அடிப்பதால், உண்மையில் ‘லக்கி’ பாஸ்கர் தான்.

Lucky Baskhar Review: ‘அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ தீபாவளி ரேஸில் முந்துகிறதா லக்கி பாஸ்கர்? விமர்சனம்!
Lucky Baskhar Review: ‘அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ தீபாவளி ரேஸில் முந்துகிறதா லக்கி பாஸ்கர்? விமர்சனம்!

90களில் தொடங்கும் கதை.. வாக்கிங் முடித்து பால் வாங்க வரும் துல்கர் சல்மானை சுற்றி வளைக்கும் சிபிஐ, அவரை வங்கிக்கு அழைத்துச் சென்று, அவரின் வங்கி கணக்கு குறித்து விசாரிக்கிறது. அதிகாரிகள் தலைசுற்றும் அளவிற்கு, அவருடைய வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. ஒரு வங்கி உதவி பொதுமேலாளர் கணக்கில் எப்படி இவ்வளவு பணம்? ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது. 

அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்

அதே வங்கியில் சாதாரண காசாளராக பணியாற்றும் துல்கருக்கு, மாதம் 6 ரூபாய் சம்பளம், கடனோ 16 ஆயிரம் ரூபாய். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அவருக்கு 16 ரூபாய் சம்பளம் கிடைக்கும் உதவி மேலாளர் பணியிடம் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை. ஆனால், அது வேறு ஒருவருக்குச் செல்கிறது. மனமுடைந்து போன துல்கர், வங்கி கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாயை தன்னிடம் தொடர்ந்து கடன் கேட்டு நச்சரித்து வந்த ரம்கியிடம் தருகிறார். 

சொன்னபடி, வெளிநாட்டு டிவிகளை இறக்குமதி செய்து, அதில் கிடைத்த லாபத்தையும், பெற்ற தொகையையும் துல்கரிடம் ஒப்படைக்கிறார் ராம்கி. இப்படியே, வங்கி லாக்கருக்கு செல்ல வேண்டிய பணத்தை, ராம்கியை கூட்டாளியாக வைத்து, வியாபாரத்தில் இறக்குகிறார் துல்கர். அதனால், அவர் சந்தித்தவை என்ன? அதன் பின் நடந்தது என்ன? அது அவருடைய வாழ்க்கையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தியது? இது தான், லக்கி பாஸ்கர் கதை.

ஜெட் வேகத்தில் பறக்கும் திரைக்கதை

பாஸ்கராக, வாழ்ந்திருக்கிறார் துல்கர். அவருடைய காதல் மனைவியாக மீனாட்சி செளத்ரியும் போதுமான அளவுக்கு நடித்திருக்கிறார். கடன்காரர்களின் விரட்டல், வறுமையின் மிரட்டல், மாஃபியா மிரட்டல் என அனைத்து காலநிலையிலும் கச்சிதமாக நடித்திருக்கிறார் துல்கர். படத்தின் தொடக்க காட்சிகள் தெலுங்குப் படம் போல இருந்தாலும், பின்னர் சுதாரித்து ஃபான் இந்தியா படமாக, ஒரே பிடியில் இழுத்துச் செல்கிறார் இயக்குனர்.

அடுத்து என்ன.. அடுத்து என்ன.. என்கிற விறுவிறுப்புடன், திரைக்கதையை இழுத்துச் சென்ற வகையில், இயக்குனரும், துல்கரும் தனியாக படத்தை சுமந்திருக்கிறார்கள். ஒரு வங்கி அதிகாரி, சக வங்கி அதிகாரிகளின் சூட்சமத்தை முறியடிக்கத் தேவையான அத்தனை விளையாடலும், படத்தில் வரிசை கட்டி வருகிறது. எந்த இடத்திலும், சுவாரஸ்யம் குறையாத அளவிற்கு, காட்சிகளை கடத்தி செல்வதால், லாஜிக் தவறுகளை தலையில் ஏற்ற நேரம் கிடைக்கவில்லை. 

மெகா மோசடியின் பின்னணியில் திரைக்கதை

போகிற போக்கில் இது க்ரைம் த்ரில்லராக மட்டுமே போய்விடக்கூடாது என்பதற்காக, இடையிடையே குடும்பம், பாசம், உபதேசம் என அத்தனை மொழிகளுக்கும் தேவையான செண்டிமெண்ட் காட்சிகளை , தோசையில் தூவிய கேரட் போல பரப்பிவிட்டிருக்கிறார் இயக்குனர். ஹர்சத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலை மையமாக வைத்து, அவரை டச் செய்யாமல், அதன் பின்னணியில் நடந்த வங்கி ஊழலை தான், கதையாக்கியிருக்கிறார்கள். 

உண்மையில் வங்கியில் இப்படி கூட பரிவர்த்தனை நடந்ததா? நடக்குமா? என்கிற அளவிற்கு அவர்கள் சொல்லியிருக்கும் விசயம், உண்மையில் அதிர்ச்சியானது தான். ஆசை யாரை விட்டது? அது கதையில் மட்டுமல்ல, படத்தை பார்ப்பவர்களையும் ஈர்க்கும். ஒரே பாட்டில் பணக்காரர் ஆகுபவர்களையும், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகுபவர்களையும் சினிமாவில் ரசித்தவர்கள் தானே நாம். காரணம், நமக்கும் இப்படி நடக்காத என்கிற ஏக்கம். அதே ஏக்கத்தை, இந்த படத்தைப் பார்க்கும் போதும், ஏற்படுத்துகிறது லக்கி பாஸ்கர் கதாபாத்திரம். அதுவே படத்தின் பெரிய வெற்றி.

திரைமறைவில் படத்திற்கு பலம் சேர்த்தவர்கள்

படத்தின் இன்னொரு பலம், ஜீ.வி.பிரகாஷ். பின்னணியில் மனிதர் போட்டு தாக்குகிறார். காட்சிகளை கதற விடுவதில் எடிட்டர் நவீன் நூலிக்கும் ஜீ.வி.,க்கும் அவ்வளவு போட்டி. அதே போல ஒளிப்பதிவாளர் நிமிஸ் ரவியும், முந்தைய காலகட்டத்தில் நடக்கும் படம் என்பதால், அதற்கான தோற்றத்தை கொடுக்க  மெனக்கெட்டிருக்கிறார். ராம்கி போன்ற பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், தேவைக்கான அளவு மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். டூயர் இல்லாமல், அழுது புலம்பாமல், ஆபாசம் இல்லாமல் முடித்த வகையிலேயே, வெற்றியை படக்குழு நெருங்கிவிட்டது. 

வங்கி காசாளரின் குடும்பம் காசு இல்லாமல் கஷ்டப்படுவதும், குழந்தைக்கு பாவ் பஜ்ஜி கூட வாங்க முடியாமல் சங்கடப்படுவது, பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு பொம்மை கூட வாங்கித் தர முடியாமல் நெருடுவது, இத்தனை சங்கடங்கள் இருந்தாலும் தோற்றத்தில் அவர்கள் ‘பளிச்சென’ இருப்பது என, லாஜிக்காக பெரிய ‘இடி’ என்றாலும், அதை விட பெரிய மேஜிக் எல்லாம் செய்து, கதையை நகர்த்துவதால், படம் முழுக்க ரசிக்கும் படியாக இருக்கிறது. 

நிறைய லாஜிக் மிஸ்டேக்..

இரண்டாம் பாதியில், பல இடங்களில் படம் முடிந்ததாக தோன்றுவதும், அதன் பின் வேறு கோணத்திற்குச் செல்வதும், இறுதியில் சுபமான எண்ட் கார்டு போடுவதும், உண்மையில் ட்விஸ்ட் தான். சில ட்விஸ்ட், கணிக்க முடிகிறது. இன்னும் சில ட்விஸ்ட், லாஜிக்கை மீறுகிறது. ஆனாலும், அத்தனையும் துல்கரின் சமார்த்தியத்திற்கு முன்னால் சாம்பலாகிறது. 

தீபாவளிக்கு குடும்பத்தோடு ரசிக்க, லக்கி பாஸ்கர் சரியான தேர்வு தான். படத்திற்கு ‘டேலண்ட் பாஸ்கர்’ என்று வைத்திருந்தால்  சரியாக இருந்திருக்கும். ஆனாலும், தீபாவளிக்கு ஜாக்பாட் அடிப்பதால், உண்மையில் ‘லக்கி’ பாஸ்கர் தான்.