Story of Song : என்ன பாட்டு இது அபத்தமா இருக்கு.. வாலி கேட்ட கேள்வியால் வாயடைத்து போன உடுமலை.. நான் ஆணையிட்டால் பாடல்!
எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் பாடல் உருவான கதை குறித்து காண்போம்.
எம்.ஜி.ஆர், இரு வேடங்களில் நடித்து வெள்ளி விழா கொண்டாடிய படம் எங்க வீட்டு பிள்ளை. இந்தப் படம் 1965-ம் ஆண்டு வெளியானது. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, எஸ்.வி.ரங்காராவ், நம்பியார், தங்கவேலு, ரத்னா, பண்டரிபாய் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் தெலுங்கில் என்.டி.ராமராவ் நடிப்பில் வெளிவந்த ‘ராம பீமடு’ படத்தின் ரீமேக் ஆகும்.தெலுங்கில் இயக்கிய சாணக்யாவே தமிழிலும் இயக்கினார். படத்திற்கு விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. படத்தை விஜயா புரொடக்ஷன் சார்பில் பி.நாகிரெட்டி தயாரித்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற குமரிப்பெண்ணின் உள்ளத்திலே.. குடியிருக்க நான் வரலாமா பாட்டு, இன்றைக்குக் கேட்டாலும் நம்மைக் காதலிக்கத் தூண்டும். நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டும் என்றான் பாடலில் எம்ஜிஆரும் ரத்னாவும் அருமையாக நடனம் ஆடி இருப்பார்கள். அதேபோல மலருக்குத் தென்றல் பகையானால் என்றொரு சோகப்பாடல் அருமையாக இருக்கும்.
படத்திலும் எம்ஜிஆரின் திரையுலக மற்றும் அரசியலிலும் முக்கியப்பங்கு வகித்த நான் ஆணையிட்டால் பாட்டுதான் படத்துக்கே ஹைலைட். இந்த பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
”நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ள வரை
ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்”
வாலி வரிகள் எழுத டி.எம்.சௌந்தரராஜன் குரலில் எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி இசையில் அமைந்த அற்புதமான பாடல் இது. இப்பாடல் உருவான விதம் குறித்து வாலி ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.
அதில், “நான் அமர்ந்து இருக்கும் போது என்ன வாலி என சொல்லி கொண்டு உடுமலை நாரயணன் கவி வந்தார். நான் எழுதிய நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பாடல் வரிகளை பார்த்தார். பாடலை பார்த்துவிட்டு நான் ஆணையிட்டால் சரி அது என்ன நடந்துவிட்டால் ஏன் அய்யா அபத்தமா எழுதி இருக்க. ஆணையிடும் இடத்தில் இருப்பது யார்? அங்கு நடந்துவிட்டால் என்ற வரிக்கு வேலை என்ன? ஆணையிடும் இடத்தில் இருப்பது அரசர் அவர் சொன்னால் அது நிச்சயம் நடக்கும். அதை எப்படி நீ நடந்துவிட்டால் என எழுதலாம் என கேட்டார்.
ஆனால் நான் அதற்கு உடனே பதில் அளிக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு நான் அவரிடம் உங்கள் மகன் என்ன செய்கிறார் என கேட்டேன். அதற்கு அவர் எங்கய்யா நான் சொல்றத கேட்கிறான். தொழில் தொடங்கினான் அதுவும் சரியாக வரவில்லை. நான் சொல்வதையும் கேட்பதில்லை என சொன்னார். அப்போது தான் நான் சொன்னேன் நீங்க அப்பா தானே நீங்க ஆணையிடும் இடத்தில் தானே இருக்கிறீர்கள். தந்தை ஆணையிட்டு தனையன் அதை கேட்கவில்லையே. அதனால் அது நடந்துவிட்டால் தான் அதற்கு மதிப்பு என சொன்னேன்” என சொல்கிறார். இப்பாடல் இப்படி தான் உருவானது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9