"எண்ணி ஓரே மாசம் தான் எல்லாத்துக்கும் முடிவு கட்டுவேன்" பக்காவான பிளானில் இருக்கும் சிவசங்கரி- கயல் இன்றைய எபிசோட்
தனது எதிர்ப்பையும் மீறி தன் மகன் எழிலை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வந்த கயலை சிவசங்கரி இன்னும் ஒரே மாதத்தில் வீட்டிலிருந்து அனுப்புவதாக சபதம் ஏற்றுள்ளார்.
குடும்பத்திற்காக தன் அத்தனை ஆசைகளையும் தியாகம் செய்த கயல், அவருக்காக வேண்டும் என நினைத்தது எழிலை மட்டும் தான். எழில் கயலை எவ்வளவு துரத்தி துரத்தி காதலித்து வந்தாலும் தனது குடும்ப நிலையை யோசித்து அவரது காதலை ஏற்க மறுத்து வந்தார்.
எழிலை விட்டு விலக நினைத்த கயல்
பின் ஒரு கட்டத்தில் தனக்கு எழில் தான் எல்லாம் என அவரே வெளிப்படையாக கூறிய நிலையில், எழிலின் அம்மா சிவசங்கரிக்கு இந்த காதலில் விருப்பம் இல்லை என்பதை அறிந்து, எழிலை விட்டு விலக நினைத்தார்.
திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் கூட இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கயல், ஒரு வழியாக முழு மனதுடன் எழிலை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்கத் துணிந்தார். இவர்கள் இருவரின் காதலைப் பிரிக்க குறுக்கே யார் வந்தாலும் அதை சமாளிப்பதாகவும் தீர்க்கமாக முடிவெடுத்தார்.
தடைகளைத் தாண்டி நடந்த திருமணம்
இதையடுத்து, எழிலின் அம்மா சிவசங்கரி, எழிலை காதலிக்கும் தீபிகா, தனது குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பெரி.யப்பா என பல தடைகளை சமாளித்து இந்தக் கல்யாணத்தை நடத்தி முடித்தார்.
ஆனால், இப்போதும் சிவசங்கரியால் கயலை தனது மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால், திருமணம் முடிந்த கையோடு கயல் வீட்டிற்கு சென்று பல சதித் திட்டங்களைத் தீட்டி கயலுக்கும் எழலிற்கும் சண்டை வர முயற்சிகள் செய்தார்.
சிவசங்கரியை தவிடு பொடியாக்கிய கயல்
ஆனால், அந்தத் திட்டங்கள் எல்லாம் தவிடு பொடி ஆனதால், கோபத்தின் உச்சியில் இருந்த சிவசங்கரியை கயல் எச்சரித்து வீட்டிற்கும் அனுப்பி வைத்தார். இதனால், கயல் மீது இருந்த சிவசங்கரியின் கோபம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது.
எழில் தீபாவளி சீர் கேட்டதாக சிவசங்கரி பற்ற வைத்த புகை, கயல் வீட்டில் வேலை செய்தாலும், கடைசியில் மூர்த்தி தன் மீது பழியை சுமத்திக் கொண்டு கயல் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என நினைத்ததால், அந்தப் பிரச்சனை அப்போதே முடிந்து விட்டது.
கோபத்தை ஏற்படுத்திய தீபிகா
இதற்கிடையில், கயல் வீட்டிலிருந்து கிளம்பிய சிவசங்கரியை தீபிகாவும் அவரது தந்தை தயாளனும் சந்தித்து பேசுகின்றனர். அப்போது, உங்களால் தான் என் பொண்ணு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கா. ஆனா, நீங்க அந்த கயல உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு ரொம்ப ஜாலியா இருக்கிங்களா என கேட்க, அதை சிவசங்கரியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், எப்படியாவது கயலை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் என நினைக்கிறார்.
புது மணப் பெண்ணாக எழில் வீட்டிற்கு வந்த கயல்
இந்நிலையில், தலை தீபாவளி முடிந்து கயலும் எழிலும், எழில் வீட்டிற்கு வருகின்றனர், அப்போது, கயலின் பொருட்களை எல்லாம் சிலர் எழில் வீட்டிற்கு எடுத்து வந்தனர். எழிலின் வீட்டிற்கு வந்ததில் இருந்து கயல் முகம் வாட்டமாகவே இருப்பதைப் பார்த்த எழில், இதை உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ என கயலை சமாதானம் செய்கிறார்.
ஒரு மாசத்துக்குள்ள எல்லாம் முடிஞ்சிடும்
இதை சிவசங்கரி மறைந்திருந்து கேட்டதால் ஆத்திரமடைந்து கயலிடம் எண்ணி ஒரே மாசத்தில் அதுக்குள்ள உன்னை வீட்டை விட்டு துரத்துவேன், கண்டிப்பா ஒரு மாசத்துக்குள்ள இதெல்லாம் நடக்கும் என சவால் விடுகிறார். அதற்கு கயலோ, எங்களோட நெருக்கத்தையோ, அளவு கடந்த காதலையோ பார்த்து பொறாமையாக இருக்கா என கேள்வி எழுப்புகிறார்.
இதனால், சிவசங்கரிக்கும் கயலுக்கும் வீட்டிற்கு வந்த முதல் நாளே பிரச்சனை முற்றுகிறது. இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. மாமியார் மருமகள் சண்டையை காண பலரும் ஆர்வமாக உள்ள நிலையில், அதனை சன் டிவியில் இன்று இரவு 7.30 மணிக்கு காணலாம்.
டாபிக்ஸ்