Unnal Mudiyum Thambi: தந்தை - மகன் உறவை பேசிய சமூக சீர்திருத்த படம்..! பிளாப் ஆனாலும் கல்ட் அந்தஸ்து பெற்ற கதை
தந்தை - மகன் உறவை பேசிய சமூக சீர்திருத்த படம் இருந்து வரும் உன்னால் முடியும் தம்பி கே. பாலசந்தர் - கமல்ஹாசன் காம்போவில் ஹிட்படமாக அமைந்துள்ளது. இதன் ஒரிஜினல் கதையான ருத்ரவீணா படம் பிளாப் ஆனாலும் கல்ட் அந்தஸ்து பெற்ற கதையாக உள்ளது.
தமிழில் மறைந்த இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி மற்றொரு ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல், விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்ற கல்ட் அந்தஸ்தை பெற்றிருக்கும் படம் உன்னால் முடியும் தம்பி. தந்தை - மகன் உறவு குறித்து வெளியான தமிழ் படங்களில் முக்கியமான படமாகவும் இது உள்ளது
தந்தையாக ஜெமினி கணேசனும், மகனாக கமல்ஹாசனும் நடித்திருப்பார்கள். சீதா கதையின் நாயகியாக நடித்திருப்பார். மனோரமா, ஜனகராஜ், நாசர், சார்லி, ரமேஷ் அரவிந்த், வி.கே. ராமசாமி, டெல்லி கணேஷ், கவிதாலையா கிருஷ்ணன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
சமூக சீர்த்திருதத்தை பற்றி பேசும் கதை
சங்கீத வித்வானாக இருக்கும் ஜெமினி கணேசன் சாதி, சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டவராகவும், அதை கண்டிப்புடன் கடைப்பிடிப்பவராகவும் இருக்கிறார். இதற்கு நேர் மாறாக அவரது இளையமகனாக வரும் கமல்ஹாசன் சமூகத்தில் நல்ல சீர்திருதத்தை கொண்டு வர முயற்சிக்கும் இளைஞனாக இருக்கிறார்.
முரண்பட்ட இந்த இருவருக்கும் இடையே நிகழும் முரண்பாடுகள், சண்டை, சச்சரவுகளை தொடர்ந்து யார் தாங்கள் நினைத்ததை அடைந்தார்கள் என்பதை எமோஷனலாகவும், சமூக அக்கறையுடனும் சொல்லும் விதமாக படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்.
படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் பெயரான சத்தியமூர்த்தி, நிஜ வாழ்க்கையில் இதே பெயர் கொண்ட சமூக ஆர்வலரின் பெயரை அடிப்படையாக கொண்டே வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி வசூலில் கடுமையான வீழ்ச்சியுடன், பிளாப் படமாகி பின்னர் தேசிய விருதுகளை வாங்கி குவித்த ருத்ரவீணா ரீமேக்காக உன்னால் முடியும் தம்பி உருவானது. ஆனால் தெலுங்கை போல் அல்லாமல் தமிழில் படத்துக்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தது.
கமல் - சீதா காதல்
மக்களுக்கு படிப்பினை கூறும் விதமாக இருக்கும் திரைக்கதைக்கு மத்தியில் கமல் - சீதா இடையிலான காதல் பகுதி ரசிகர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். இதுமட்டுமில்லாமல் சீதாவும், கமலும் இணைந்து மேற்கொள்ளும் சமூக சீர்த்திருத்த முயற்சிகள் ரசிக்கும் விதமாக இருக்கும்.
ஊரின் நன்மைக்காக கமல் செய்யும் செயல்களுக்கு துணைபுரிவாராக தோன்றுவார் சீதா. அந்த வகையில் சதாரணமான மரத்தை சுற்று டூயட் பாடும் கதாநாயகியாக அல்லாமல் சமூக சிந்தனை உள்ளவராக நடிப்பில் கலக்கியிருப்பார்.
குடிகாரர்களாக வரும் ஜனகராஜ், சார்லி, கவிதாலையா கிருஷ்ணன் அக்மார்க் குடிகாரர்கள் போல் டைமிங் காமெடியில் ரசிக்க வைத்திருப்பார்கள். ஒரு காட்சியில் கவிதாலையா கிருஷ்ணன், "என் பெண்டாட்டி நான் கூப்ட்டா வரமாட்டிக்குதுப்பா" என்று ஆற்றாமையுடன் பேசுவது சிரிப்பை வரவைக்கும் விதமாக இருக்கும்.
நினைவை விட்டு நீங்காத பாடல்கள்
புலமைபித்தன், இளையராஜா, முத்துராமலிங்கம் ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களை எழுத, இளையராஜா இசையில் உன்னால் முடியும் தம்பி பாடல் ஐகானிக் பாடலாக மாறியது. இதழில் கதை எழுதும் நேரம் சிறப்பான மெலடியாகவும், அக்கம் பக்கம் பாருடா தத்துவம் பொழியும் பாடலாகவும், புஞ்சை உண்டு பாடல் துள்ளலான மோடிவேஷனல் பாடலாகவும் ரசிக்க வைத்தன.
தெலுங்கில் ருத்ரவீணை படத்துக்காக பயன்படுத்திய மெட்டுக்களை, தமிழிலும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில் கமல், அவரது அண்ணனாக வரும் கேரக்டர், தங்கை, அண்ணி இடையே நடக்கும் வாக்கு வாதத்தின் வீரியத்தை பின்னணி இசையை வைத்த புரியவும், உணரவும் வைத்திருப்பார் இளையராஜா
தெலுங்கில் தோல்வி அடைந்த படத்தை மீண்டும் தமிழில் உருவாக்கி வெற்றியும் கண்டார் இயக்குநர் பாலசந்தர். தமிழ் சினிமாவில் தந்தை மகன் உறவு பற்றி சிறந்த படமாகவும், சிறந்த சமூக சீர்திருத்த கதை கொண்ட படமாகவும் இருந்து வரும் உன்னால் முடியும் தம்பி வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்