Vela Ramamoorthy: ‘ரஜினி சார் கடைசி வரை என்னை நம்பல’ -வேல ராமமூர்த்தி!
‘எனக்கு கோபம் நிறைய வரும். தவறான விசயத்தை பார்க்கும் போது, தவறான ஆட்களை பார்க்கும் போது, எனக்கு கட்டுக்கடங்காத கோபம் வரும்’ -வேலராமமூர்த்தி!
துடுக்கு, மிடுக்கு என கம்பீரமான தோற்றம் என்றால் அது வேல ராமமூர்த்தி தான். நடிகராக இன்று அறியப்பட்டாலும், அவரது அடையாளம் எழுத்தாளர் தான். ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் பிறந்து இன்று உலக தமிழர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் வேல மூர்த்தி, பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சிறப்பான பேட்டி இதோ:
‘‘கிராமத்தில் பிறந்து, 2, 3 வருடத்தில் கிராமத்தை விட்டு வந்தவன் இல்லை நான். பிறந்ததில் இருந்து நான் ராணுவத்திற்கு போகும் வரை, அதே கிராமத்தில் கஞ்சி, கருவாடு, கம்மஞ்சோறு, காட்டில் வளர்ந்த பயிறுகளை தின்று வளர்ந்த உடம்பு என்னுடையது.
பகலில் நாங்கள் பள்ளிக்கூடம் போவோம், மாலை வந்தால் விடிய விடிய விளையாடுவோம். ஏறாத மரம் இல்லை. எல்லா கிணற்றிலும் குதிப்பது, கண்மாய், ஊரணியில் மணி கணக்கில் நீச்சலடிப்போம். 17 வயதில் ராணுவத்திற்கு போய்விட்டேன்.
நான் பிறந்ததும் பெரிய குடும்பம். நல்ல சாப்பாடு கிடைக்கும். ராணுவத்திற்குப் போனால் அங்கு அண்டா அண்டாவாக கறி வைத்திருந்தான். சப்பாத்தியும் கறியையும் தின்றுவிட்டு, மைல் கணக்கில் ஓடுவோம். அப்படி தான் என் உடம்பு திடமானது.
இன்று வரை உணவு விசயத்தில் கட்டுப்பாட்டில் இருப்பேன். உணவு மட்டுமல்ல மனசும் தான் உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எழுத்துக்கு, ஆரோக்கியத்திற்கு மனசு முக்கியம்.
எனக்கு கோபம் நிறைய வரும். தவறான விசயத்தை பார்க்கும் போது, தவறான ஆட்களை பார்க்கும் போது, எனக்கு கட்டுக்கடங்காத கோபம் வரும். இயல்பில் எல்லாவற்றையும் நேசிக்கும் மனிதனாக , நான் படித்த மார்க்சிய தத்துவங்கள் என்னை வளர்த்தது.
கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பெயர் இருக்கும். எனது ராமநாதபுரம் மாவட்டத்தில் என்னுடைய பெருநாழி கிராமத்தில் எங்களுடைய வீட்டுக்கு காவல்காரர் குடும்பம் என்று பெயர். 24 ஆண்டுகளாக நான் கதை எழுதுகிறேன். துவக்க காலங்களில் என்னுடைய ஆரம்ப கால கதைகளுக்கு விமர்சனம் வந்தது. விமர்சனம் வர வர எனக்கு வேகம் தான் வந்தது. யாருக்கும் மடங்கி போகவில்லை. பாறையை உடைத்து தான் நான் வெளியே வந்தேன்.
நான் பிறக்கும் முன் நடந்த சம்பவங்களை வைத்து தான் குற்றம்பரம்பரை எழுதினேன். எனக்கு ஒரு கதை சொல்லி இருப்பார், அவர் தான் அந்த கதையை சொன்னார். அப்போது நான் பள்ளி மாணவன். ராணுவத்திற்கு போய் வந்த பின், அதை எழுதினேன். 1969ல் நான் கேட்ட கதையை, 2001ல் தொடராக எழுதினேன். அத்தனை ஆண்டுகள் எனக்குள் அது ஊறிக்கிடந்தது.
நான் எந்த நடிப்பு கல்லூரியிலும் படிக்கவில்லை, பயிற்சி எடுக்கவில்லை. என் எழுத்துகள் தான் என் நடிப்பிற்கு உதவுகிறது. நான் எழுதி கதைக்குள் இருக்கும் கதாபாத்திரங்கள் தான், என் நடிப்பை தீர்மானிக்கின்றன. கிராமத்தில் இருப்பவர்கள் மாறவில்லை; அப்படியே தான் இருக்கிறார்கள்.
அண்ணாத்த படத்தில் ரஜினி சாருடன் நடித்த அனுபவம், வித்தியாசமானது. அதை வரை நான் ரஜினி சாரை பார்த்ததில்லை. முதல் ஷாட்டில், இயக்குனர் சிவா சார் மைக்கில் அழைக்கிறார். 900 பேர் வருகிறார்கள், அத்தனை பேரும் ரஜினி சார் பக்கத்தில் நிற்க ஆசைப்பட்டு போட்டி போடுகிறார்கள். இயக்குனர் என்னை அழைத்து ரஜினி சார் பக்கத்தில் நிற்கச் சொல்கிறார்.
இவ்வளவு கூட்டத்தில், யார் இந்த மூர்த்தி என ரஜினி சார் உட்பட அனைவரும் வியப்பாக பார்க்கிறார்கள். நான் வந்ததும், ரஜினி சாரை வணங்கினேன், அவரும் வணங்கினார். அப்படியே டக்குனு ஆச்சரியமாக பார்த்தவர், ‘எப்படி மெயின்டெண் பண்றீங்க?’ என கேட்டார். ‘என்னது சார்… ’ என்று கேட்டேன். ‘உடம்பை தான்… எப்படி மெயின்டெண் பண்றீங்க?’ என்று மறுபடி கேட்டார். ‘சார், மிலிட்டரியில் இருந்தேன்’ என்று கூறினேன்.
‘ஓ மிலிட்டரியில் இருந்தீங்களா… கிடாரியில் வருவீங்களே … அந்த வேல் கம்போட… ’ என்று பிரமிப்பாக சொன்னார். அதன் பின், 22 நாட்களும் ‘மூர்த்தி சார்… மூர்த்தி சார்’ என்று தான் அழைத்துக்கொண்டே இருந்தார். எனது குற்றப்பரம்பரை புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன். நான் தான் எழுதினேன் என அவர் கடைசி வரை நம்பவே இல்லை. ரேப்பரில் உள்ள என் போட்டோவை பார்த்து தான் நம்பினார்.
குற்றப்பரம்பரை என்னை பொருத்தவரை நல்ல எல்லையை தொட்டுவிட்டது. பல்லாயிரம் பிரதி விற்றுக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் நான் திட்டமிட்டு செய்யவில்லை . சரித்திர நாவல் ஒன்று எழுத திட்டமிடுகிறேன். ஒரு பெரிய நாவல் அது. தென் பகுதியில் இதுவரை எழுதப்படாத, கதை சுவாரஸ்யம் மிக்க வாழ்க்கை அது. எழுதுவேன் என நினைக்கிறேன்.
உறவுகளை எல்லாம் விட்டு விட்டு நகரத்திற்கு வந்துவிட்ட இளைஞர்களால், மண் சார்ந்து எழுதவே முடியாது. ஊரை நேசித்தால் தான் எழுத முடியும். அதற்கு முதலில் கிராமத்திற்கு வர வேண்டும்’’
என்ற அந்த பேட்டியில் வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.
டாபிக்ஸ்